கரை ஏறுமா கால்வாய் பாசனம்?
கி.சிவசுப்பிரமணியன்
தமிழகத்தின் முப்பெறும் நீராதாரங்களாக விளங்குபவை
- கால்வாய்ப் பாசனம்,
- ஏரிப்பாசனம்,
- கிணற்றுப் பாசனம்.
இவை அனைத்துக்கும் மழை வளமே அடிப்படை. ஆனால் மழை வளம் குறைந்துவிட்டதால் நிலத்தடி நீர் அபரிமிதமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து திறந்தவெளிக் கிணறுகள் பலவும் வறண்டுபோய் விட்டன. எனவே ஆழ்துளைக் கிணறுகளின் உதவியை விவசாயிகள் நாடி அதில் பேரளவு பணம் விரயம் செய்தும் போதிய நீர் கிடைக்காமல் வாடும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
“கரிகாலன் கட்டி வைத்த கல்லணை’யும் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக்கின் முயற்சியால் உருவான பெரியாறு அணையும் நவீன தமிழகப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட “பரம்பிக்குளம் – ஆழியாறு’ பாசனத் திட்டமும் தமிழக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதோடு விவசாயிகளின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக விளங்குகிறது.
ஆறுகள் மற்றும் அணைகளிலிருந்து செல்லும் கால்வாய்ப் பாசனத்தை நம்பியுள்ள கிணறுகள் சாதாரணமாக வறண்டு போவதில்லை. ஆனால் இதே கால்வாய்களில் சில ஆண்டுகள் தொடர்ந்து நீர்வராமலும், மழை பொழிவும் குறைந்து போனால் இக்கால்வாய்ப் பாசனக் கிணறுகளில் பெரும்பாலானவை வறண்டு போகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையை (2002 மற்றும் 2003-ல்) பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகள் அனுபவித்தது கசப்பான உண்மை. இந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கால்வாய்களில் விடப்பட்ட நீர் வரத்து பயனற்றதாகியது. பல ஆண்டுகளாக பலனளித்து வந்த ஆயிரக்கணக்கான தென்னைகள், வறட்சியால் மடிந்தன.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக்கப்பட்டனர். இது போன்ற நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் காண்பது மிக அவசியமாகும்.
பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டங்களின் முக்கிய அம்சம் தமிழக மற்றும் கேரள எல்லைகளில் உற்பத்தியாகும் ஆறுகள் மூலம் கேரள மாநிலத்தால் பயன்படுத்த இயலாத, வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்தின் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு அளிப்பதே ஆகும்.
1960-களில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இத் திட்டம் தற்போது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்தின் மொத்த பாசன அளவு ஏறத்தாழ 2.5 லட்சம் ஏக்கராக இருந்தது.
நீர்ப்பாசன ஆதாரத்தைப் பெருக்க முயற்சிக்காமல் நீர்ப்பாசன பரப்பை 1994-ல் அரசு முனைந்து அதிகப்படுத்தியதால் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம் தற்போது 18 மாதத்திலிருந்து 24 மாதத்துக்கு ஒருமுறை நீர் பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இப்பாசன விவசாயிகளிடையே இருந்த பெருமிதம் மாறி, எங்கே தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மழையின்மையால் பயிர் காய்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வையே காண முடிகிறது.
இத்தகைய நிச்சயமற்ற தண்ணீர் பற்றாக்குறை நிலைமையைப் போக்க “நல்லாறு திட்டத்தின்’ உபரிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.
அந்த நீரை திருமூர்த்தி அணைக்குத் திருப்பி விட வேண்டும். அதே சமயம் திருமூர்த்தி அணையின் தற்போதைய கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும்; கால்வாய்ப் பாசனமும் கரை ஏறும்; அதை நம்பியுள்ள கிணற்றுப் பாசனமும் செழிப்புறும்.
(கட்டுரையாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர்).