இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
![]() |
![]() |
வடக்கில் பெருமளவு ஷெல் வீச்சு |
இன்று அதிகாலை இலங்கையில் வடக்கே யாழ் குடாநாட்டில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை நோக்கி முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட அரச துருப்பினருக்கும், புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
யாழ்குடாநாட்டில் முகமாலை, கிளாலி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான படையினர் இன்று அதிகாலை சுமார் 12.45 மணியளவில் மூன்று முனைகளில் யுத்த தாங்கிகள் மற்றும் ஆட்டிலறி எறிகணைவீச்சு சகிதம் நகர்ந்தபோதே இப்பகுதிகளில் மோதல்கள் வெடித்ததாகத் தெரிவித்த இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதன்போதும் புலிகளின் முப்பதுக்கும் அதிகமான பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்களின்போது சுமார் 10 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 30 புலி உறுப்பினர்கள் காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தார். அதேவேளை, இராணுவத்தின் தரப்பில் ஏழு படையினர் மாத்திரமே காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
புலிகள் மறுப்பு
ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சேதங்களை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், அரச படைகளின் முன்நகர்வு நடவடிக்கைகளை தமது போராளிகள் தடுத்து நிறுத்தி, அவர்களை மீண்டும் தமது பழைய நிலைகளுக்கே திரும்பச் செய்தனர் எனவும் கூறியுள்ளனர்.
இது குறித்த தகவலை வெளியிட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், இலங்கை அரசப்படையினர் பின்வாங்கிய பிறகு சில இராணுவத் தளவாடங்களை தாங்கள் கைப்ப்ற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
ஐ நா வின் தலைமைச் செயலருக்கு விடுதலைப் புலிகள் கடிதம்
![]() |
![]() |
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் |
இலங்கையின் வடமேற்கே மடுக்கோவிலுக்கு அருகில் பேருந்து வண்டியொன்றின் மீது செவ்வாய்கிழமையன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 12 சிறுவர்கள உட்பட 18 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ. நா மன்றத்தின் தலைமைச் செயலர் பான் கி மூன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பா.நடேசன் கூறியுள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் ஐ நா வின் தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியிருக்கின்றார்.
விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை இடைநிறுத்தி போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ள அரசு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.
மடுமாதா ஆலயப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதாக தகவல்
![]() |
![]() |
மடுமாதா ஆலையம் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் மடுக்கோவிலருகில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேருந்து வண்டியொன்றின் மீது நேற்று இடம்பெற்ற வீதியோரக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 18 பேரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை மடுக்கோவிலில் நடைபெற்றிருக்கின்றது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 18 பேரில் 10 பேர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதாகவும், இவர்களில் ஒரு தாயும் 9 வயது மகளுமாகிய இரண்டு பேர் இன்று மாலை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய 8 பேரும் முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 18 பேரினதும் உடல்கள் இன்று காலை பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து மடுக்கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது வீடுகளில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததாக மடுவிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமையன்றும் பகல் பொழுதில் மடு ஆலயத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் ஷெல் வீச்சுகள் இடம் பெற்றதாகவும், இராணுவத்தினரிடம் முறையிட்ட பிறகு அவை நின்றன எனவும் மடுக்கோவில் பரிபாலகர் அருட்தந்தை எமிலியஸ் பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக வத்திக்கானின் பிரதிநிதி மற்றும் இலங்கை ஆயர் சங்கம் ஆகியவற்றின் கவனத்திற்கு மன்னார் ஆயர் கொண்டு வந்துள்ளதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.