உள்ளாட்சி ஜனநாயகத்துக்கு தேவை, மக்கள் இயக்கமே!
ந. குணசேகரன்
உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயக செயல்பாடுக்கு உயிர்நாடியாகத் திகழ்வது கிராமசபை கூட்டங்கள்.
குடியரசு தின நன்னாளன்று, ஊராட்சிகளை வழி நடத்த கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஓராண்டுக்கு குறைந்தது, நான்கு கூட்டங்கள் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, “உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய இடைக்கால ஆய்வறிக்கை’ கீழ்வருமாறு கூறுகிறது. “”மக்கள் ஒன்றுகூடி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று, கற்பனை வடிவில் உள்ள கருத்து, நடைமுறை சாத்தியமா என்ற ஐயப்பாடு நீடிக்கிறது”.
அதாவது, இன்னமும் உள்ளாட்சி மன்றங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. தங்களது தேவைகள், உரிமைகளைப் பெற, உள்ளாட்சி மன்றங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஜனநாயக உணர்வு இன்னமும் வளர்க்கப்படவில்லை. இது தமிழகத்துக்கும் பொருந்தும்.
இதில் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. மக்களுக்கு வாக்குரிமையை உறுதி செய்தால் போதும்; உள்ளாட்சி மன்றச் செயல்பாடு மேம்படும் எனக் கருதப்படுகிறது. வெறும் வாக்குரிமை மட்டும் உண்மையான ஜனநாயகத்துக்கு இட்டுச் செல்லாது.
ஏனெனில், இந்த வாக்குரிமை தேர்தல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
தேர்தலே நடைபெறாமல், எதிர்வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டு “ஏகமனதாக’த் தேர்ந்தெடுக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்தியபோதிலும், பல இடங்களில் பதவிகள் ஏலம் விடப்பட்டன.
எனினும் தேர்தலின்போது பின்பற்றப்பட்ட தகாத வழிமுறைகள், பணபலம் செய்த சாகசங்கள், சாதி, சமயங்களின் வழக்கமான பங்கு என பட்டியல் நீள்கிறது.
ஜனநாயகத்துக்கு ஒவ்வாத இந்த நடைமுறைகள் எதைக் காட்டுகின்றன? வாக்குரிமையை உறுதி செய்தால் மட்டும் போதாது; ஜனநாயக உணர்வுகளை மக்களிடையே வேரூன்றச் செய்ய வேண்டும். தன்னாட்சி என்னும் உள்ளாட்சி மன்றக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில், உள்ளாட்சி மன்றச் செயல்பாடுகளில் உள்ள ஊனங்களைக் களைய மக்கள் திரண்டெழ வேண்டும். ஏராளமான மக்கள் நலத் திட்டங்களும், அவற்றுக்கான நிதியும் உள்ளாட்சி நிர்வாகத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு செலவினங்களில் பாதியளவு சமூக நலத்துறைக்குச் செலவிடப்படுகிறது.
இதில் கணிசமான நிதி உள்ளாட்சி மன்றங்களின் மூலம் செலவிடப்படுகிறது. ஆனால், பல்வகைத் திட்டங்களும் செயல்பாடுகளும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான தேவைகளை நிறைவு செய்யவில்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். ஆனால் நிதி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைய, மக்களின் கண்காணிப்பும் விழிப்புணர்வும் முழுமையான பங்கேற்பும் அவசியம். திட்ட நடைமுறையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், ஊழல், ஜனநாயக விரோத நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளூர் மக்கள் சுட்டிக் காட்ட வேண்டும். மக்களின் கண்காணிப்பு, கருத்துகூறல், தலையிடல் ஆகியவை உள்ளூர் மட்டத்தில் ஒரு பண்பாடாகவே வளர்க்கப்படல் வேண்டும்.
கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், தனது கிராம வளர்ச்சித் திட்டங்கள், வாழ்க்கை மேம்பாடு குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் உள்ளாட்சி மன்றங்களை ஈடுபடுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்றால் மட்டும் போதாது. உள்ளூர் சார்ந்த அமைப்புகள், உள்ளூர் மட்டத்தில் ஏராளமான வளர்ச்சிக் கருத்தரங்குகளை நடத்துவதும், அதில் மக்கள் பங்கேற்பதும் வழக்கமான நிகழ்வாக மாற்றப்படல் வேண்டும்.
மக்கள் ஒவ்வொருவரும் தங்களை ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்தவராக மாற்றிக்கொண்டு செயல்படுவது நன்று. தொழில்சார்ந்த விவசாயிகள் அமைப்புகளிலோ, குடியிருப்பு சார்ந்த சமூக, பண்பாட்டு அமைப்புகளிலோ செயல்பட்டு தங்களது ஜனநாயகக் குரலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வலுவான மக்கள் இயக்கம், தவறான வழிகளில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நல்வழிப்படுத்தவும், மேலும் தவறுகள் நிகழாதிருக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை.
உள்ளாட்சி மன்ற ஜனநாயகத்தில் மக்கள் பயிற்சி பெற அரசு நிர்வாகம் உதவ வேண்டும். சமூக ஆர்வலர்களும், தன்னார்வ சேவை அமைப்புகளும், உள்ளூர் சார்ந்த மக்கள் இயக்கம் உருவாக முயற்சிக்க வேண்டும்.
ஜனநாயக நெறிகளைக் கொண்ட ஒரு புதிய சமூகப் பண்பாடு கிராமத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மக்கள் குடியிருப்பிலும் தழைக்க வேண்டும்.
அதிகாரப்பரவல் என்பது நிர்வாக ரீதியான சீர்திருத்தம் மட்டுமல்ல; கோடானுகோடி உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியல் மாற்றத்துக்கான திறவுகோலாக அமைய வேண்டும்.
(கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்).