மேலவை காங். உறுப்பினர்கள் 26 பேர் சஸ்பெண்ட்: அவைத் தலைவர் நடவடிக்கை
பெங்களூர், பிப். 14: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 26 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. தாற்காலிகத் தலைவராக துணைத் தலைவர் சச்சிதானந்தா கோட் இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த சாலை விபத்தில் கோட் காயம் அடைந்தார்.
இந்நிலையில் சட்ட மேலவைக்கூட்டம் கடந்த ஜனவரி 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து மூத்த உறுப்பினர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த என். திப்பண்ணாவை தாற்காலித் தலைவராக அரசு நியமித்தது.
ஆனால் இவரது நியமனத்தை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில் மேலவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலவை கூடிய ஜனவரி 25-ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை கூட்டத்தை நடத்தவிடாமல் தர்ணா மேற்கொண்டுவந்தனர். இதனால் அவை நடந்த அனைத்து நாள்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே. பாட்டீல் தலைமையில் வழக்கம்போல எழுந்து நின்று தர்ணா மேற்கொண்டனர். இதற்கு ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அவையை நடத்தவிடாமல் தடுப்பதுசரியல்ல என்று அவர்கள் கூறினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
அவைத் தலைவர் திப்பண்ணா பலமுறை கேட்டுக் கொண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனால் பொறுமை இழந்த அவைத் தலைவர் திப்பண்ணா, காங்கிரஸ் உறுப்பினர்கள் 26 பேரையும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாகக் கூறி அவையை மறுநாளைக்கு ஒத்திவைத்தார்.