ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”
சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.
விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.
“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.
மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.
ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…
வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?
பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.
விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?
ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.
இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.
ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.
நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?
பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.
“ஊர்’ அனுபவம் எப்படி?
தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.
கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?
ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.
கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.
நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?
நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.
வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.