மறுதலை அடமானம்
இராம சீனிவாசன்
ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.
இந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.
வீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.
தற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.
வங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.
அடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.
கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.
ஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா? முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.
எனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).