ஏற்றுமதி தடை நீக்கம்: இந்திய இறைச்சி மீண்டும் அமீரகத்தில் கிடைக்கும்
துபை, பிப். 16: இறைச்சி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, இந்திய இறைச்சி மீண்டும் ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நல சர்வதேச அமைப்பின் அறிவுரையின் பேரிலும் கோமாறி நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இறைச்சி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு தடைவிதித்தது.
இத்தடைக்கு எதிராக இறைச்சி ஏற்றுமதியாளர்கள் நீதிமன்றத்தை அனுகியதையடுத்து, தற்போது தடை நீங்கியுள்ளது.
இதையடுத்து 5 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய இறைச்சி அமீரகத்தில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தடைக்கு முன்பு, இந்தியா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 டன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
===================================================
இந்திய கோழி இறைச்சிக்கு துபையில் தடை நீடிப்பு
துபை, மார்ச் 16: இந்திய கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீடிப்பதாக ஐக்கிய அரபு அமீரக சுற்றுச்சூழல் துறை முகமது சய்யீத் அல் கின்டி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்ததை அடுத்து 2005-ம் ஆண்டில் கோழி இறைச்சி, முட்டைகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
சில நகராட்சிப் பகுதிகளில் இந்திய முட்டைகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. நகராட்சி நிர்வாகப் பகுதிகளில் தடைநீக்கப்படவில்லை என்பதை தெளிவுப் படுத்தியுள்ளோம்.
தடையை நீக்குவது குறித்து அமைச்சகம் தான் முடிவு செய்யவேண்டும் என்றார் அவர். இத்தகவல் துபை நாளிதழில் வெளியாகியிருந்தது.