1857ஆம் ஆண்டும் நீலன் சிலையும்
பு.எ. மோகன்
1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு முன்னரே தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் கங்கணம் கட்டிக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பினை அறிவித்தது. இப் புரட்சியில்
- மருதுபாண்டியர்,
- வீரபாண்டிய கட்டபொம்மன்,
- கோபால நாயக்கன்,
- கேரளவர்மன் எதிர்ப்புப் போராட்டங்கள் அடங்கும்.
- வேலூர்க் கலகம் 1806ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதனை 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குச் செய்த முன்னோட்டம் என வீரசாவர்க்கர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து 1857 வரை ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஆங்கில கம்பெனி அரசு நசுக்கியது.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, வணிக நிறுவனமாகத் தோன்றி 1801ஆம் ஆண்டு அரசியல் நிர்வாகத்தை வேரூன்றச் செய்தது. கர்நாடக மற்றும் மைசூர் போர்கள் அக் கம்பெனியின் ஆட்சியை தென்னிந்தியாவில் நிறுவின. 1857ஆம் ஆண்டு வடஇந்தியாவில் கிளர்ச்சி தோன்றி மே திங்கள் 11ஆம் நாள் தில்லியை ஆங்கிலேயர்கள் இழந்தனர். கம்பெனி நிர்வாகம் அலறத் தொடங்கியது. தென்னகம் இவ்வேள்விக்குப் பிறிதொரு வழியினைப் பின்பற்றத் தொடங்கியது. 1840ஆம் ஆண்டு ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர் டன்பே செமியூர் குடியானவர்களின் குறைகளைக் கேட்க வந்தார். அவர் சென்னையின் அரசியல் விற்பன்னர் லட்சுமி நரசு செட்டியின் இல்லத்தில் தங்கினார், குறைகளைக் கேட்டு அறிந்தார்.
இதைத் தொடர்ந்து 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு 5 ஆண்டுகள் முன், சென்னையில் ஆளுநர் டிரிவிலியனது பிரிவு உபசார விழாவில் 7,500க்கும் மேற்பட்ட நபர்கள் கையெழுத்திட்ட வாழ்த்துப் பத்திரத்தில் “பொறுப்பாட்சி வேண்டும்’ என்ற கோரிக்கையைச் சென்னை மக்கள் முன் வைத்தனர். அதற்கு அவர் பொறுப்பு ஆட்சி நடைபெறுவதற்கு முதலில் எங்களது பிரதிநிதித்துவ நிறுவனங்களைப் பார்த்து எவ்வாறு இயக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என்றார். மேலும், பொதுமக்கள் ஒழுக்கம் இல்லையேல் தேசிய அரசாங்கம் சாத்தியமல்ல என்று கூறினார். அவருக்கு இக் கோரிக்கை அதிசயமாகத் தோன்றியது. மேலும், இந்நிகழ்வு (பொறுப்பாட்சி) காலதாமதம் ஆவதற்கு நீங்கள்தான் காரணம் என்றார். இந்நிகழ்ச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் பொதுநல எண்ணம் உடையோர் அரசியல் ரீதியாக விடுதலை வேள்வியினைத் தொடங்கினர் என்பதுடன் தற்கால “கோரிக்கை மனு’ முறை மூலம் அதிகாரங்களைப் பெறும் முயற்சியாகவும் அமைந்தது.
இதே தென்னிந்தியாவிலிருந்துதான் 1857ஆம் ஆண்டு மே மாத இறுதியில் கர்னல் ஜேம்ஸ் நீலன் படையுடன் வங்கம் சென்று கிளர்ச்சியை அடக்கினார். அலாகாபாத், காசி ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அனைவரையும் சந்தேகக் கண்களுடன் பார்த்தார்.
ஐரோப்பியர் இறந்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களைத் தூய்மை செய்ய இந்தியர்களை குறிப்பாக பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார். சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை. அப் பணியைச் செய்தபோது மிக்க பயங்கரமான வெறுப்புடனும், மிக கோரமான நிறைவேற்றும் சக்தியுடனும் அவர்களையும் சந்தேகத்திற்குரியவர்களையும் தூக்கிலிட்டார்; “கருணை என்பது இறுதிச் செயல்’ என்றார். இத்தகைய நீலன் லக்னௌ நகரில் 1857ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் கிளர்ச்சியாளர்களுடன் வீதியில் மோதியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில அரசு நீலனின் சேவையைப் போற்றியது. சென்னை மாகாண ஆங்கில அரசு ரூ. 12 ஆயிரம் செலவழித்து 1861ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலனின் சிலையைச் சென்னை ராஜதானியின் மவுண்ட் சாலை (அண்ணாசாலை)யில் நிறுவியது.
இந்தியக் கிளர்ச்சியாளர்களைக் கொன்று குவித்த நீலனின் சிலையை எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழகம் பார்த்துக் கொண்டிருந்தது. 1927ஆம் ஆண்டு மதுரை நகரிலிருந்து சென்னை வந்த சீனிவாசவரதன், உத்வேகத்துடன் சிலையை அகற்ற வேண்டும் என முடிவு செய்தார். அவர் கண்முன் நீலனின் “சேவை’யும் இந்தியரின் வேதனையும் வந்தது. “தமிழக தொண்டர் படை’ என்ற அமைப்பு தமிழக காங்கிரஸின் செயல்பாடாக அமைந்தது. திருநெல்வேலி சோமையாஜுலு தலைமை ஏற்றார்.
ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் சிலை அகற்றும் அறப்போராட்டம் தொடங்கியது. குழந்தை, ராமநாதபுரம் குப்புசாமி, வடஆர்க்காடு என். அண்ணாமலை பிள்ளை, தென்னார்க்காடு தெய்வநாயக அய்யா, பண்ருட்டி முகமது சாலியா கலந்துகொண்டனர். நீலன் சிலையைத் தாக்கி, இந்திய தேசியக் கொடியினை வைத்தனர். முகமது சலியாவையும் சோமையாஜுலுவையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
எனினும் இந்த அறப்போராட்டம் 1928ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்தது. அணி அணியாகத் தொண்டர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் கே.வி. கணபதி, அவரது மனைவி அங்கச்சி கலந்துகொண்டு ரூ. 50 அபராதமும் சிறைத்தண்டனையும் பெற்றனர். இவர்களைத் தொடர்ந்து முருகையன், அவரது மனைவி அஞ்சலையம்மாள் மற்றும் அவர்களது 9 வயது மகள் அம்மாகண்ணு ஈடுபட்டனர். இவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியைக் காப்பகத்தில் வைத்தனர். அடுத்ததாக, கடலூர் சீனிவாசன் அதையடுத்து கன்னையா படையாச்சி, ஞானசுந்தரம், வேலுசாமி இராஜா, கோவிந்தராஜ் சிறை சென்றனர். சென்னையில் கபாலீசுவரர் கோயிலில் இதற்காகக் கூடிய கூட்டத்தில் பேசிய சிதம்பரம் நைனியப்ப பிள்ளை கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு பாளையங்கோட்டை சிறை வாழ்வு அவருக்குக் கிடைத்தது. இவர் கைதினை எதிர்த்துத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பேசிய தெய்வநாயக அய்யா, “நீலன் கொடுங்கோலன் என்பதால் அகற்றக் கோருகிறோம்; அயல்நாட்டவர் என்பதால் அல்ல’ என கூறினார். இப்போராட்டத்தினைக் கண்ணுற்ற பி. பக்தவத்சலம் நாயுடு சென்னை சட்டமன்றத்தில் சிலை அகற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத் தீர்மானத்திற்கு 29 வாக்குகள் ஆதரித்தும், 67 வாக்குகள் எதிர்த்தும் 2 நடுநிலையாகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து கிருட்டிணமூர்த்தி, முகமதுசாலியா, ஆனந்த ஆச்சாரி, தெய்வநாயக அய்யா அறப் போராட்டத்தில் சிறை சென்றனர். இதில் ஆந்திரத்தின் பங்கினைத் தனியாக எழுத வேண்டும்.
1857ஆம் ஆண்டு நிகழ்வு நடந்து 80 ஆண்டுகள் கழித்து 1937ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள், சென்னை மாகாண அரசின் பிரதமராக விளங்கிய சி. இராசகோபாலச்சாரியின் காங்கிரஸ் அமைச்சரவை மக்கள் பார்வையிலிருந்து சிலையினை அகற்ற வேண்டிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிச் சிலையைச் சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தது. நீலன் புரிந்த வன்கொடுமைகள் நூறு ஆண்டுகள் நிறைவு பெறப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே (1947) இந்தியா விடுதலை அடைந்தது. ஜான்சி ராணிகள், சாதாரண மனிதர்கள் என விடுதலை வேள்விக்குத் தமிழகம் ஈந்தது பெருமையுடைத்து. சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1857ஆம் ஆண்டு விடுதலை வேள்வியின் வட இந்திய நிகழ்வுக்குத் தமிழகம் அளித்த பங்கு மிக சிறப்பானது; போற்றத்தக்கது.
(கட்டுரையாளர்: பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.)
————————————————————————————–
பழங்கதை சொல்வதில் மகிமையில்லை
இரா. சோமசுந்தரம்
வேலூர் கோட்டையில் 1806, ஜூலை 10-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று தமிழகத்தில் நாம் சொல்லிக் கொண்டாலும், வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சிதான் இந்தியாவின் முதல் விடுதலைப் புரட்சி. தற்போது நாடு முழுவதும் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயரை போரில் எதிர்ப்பதும், ஆங்கிலேயர் இந்த மண்ணின் கலாசாரத்துக்கு எதிரானவர்கள் என்பதற்காக எதிர்ப்பதும் இருவேறு விஷயங்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வணிகம் செய்ய வந்த நாள் முதல் மன்னர்கள் பலர் எதிர்த்துள்ளனர். அவை அரசைக் கைப்பற்ற நினைப்பவருக்கும், அரசைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவருக்குமான போர்.
1857-ல் நடந்த ராணுவப் புரட்சி என்பது, ஆங்கிலேயர்கள் இந்த மண்ணின் கலாசாரத்துக்கும், மரபுகளுக்கும் எதிரானவர்கள் என்பதால், அவர்களின் நிழலில் நின்றுகொண்டே அவர்களை எதிர்த்த புரட்சி. ஒரு ராணுவ அமைப்புக்குள் இது நடைபெற்றபோதிலும் இந்தப் புரட்சியின் காரணிகளில் இந்திய மக்களின் எதிர்ப்புணர்வு இருந்ததால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இத்தகைய நோக்கம் இல்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் எண்ணம். அது தவறு என்பது தமிழர்களின் கருத்து. வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை, வேலூர் கோட்டையில் நடந்தது ஒரு போர். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் குடும்பத்தினரை மீட்கவும், ஆங்கிலேயர்களைப் பழிவாங்கவும் கோட்டையைக் கைப்பற்ற நடத்தப்பட்ட போர்.
திப்பு சுல்தான் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். அவர்களோடு வந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோட்டையைச் சுற்றிலும் இருந்த குடியிருப்புகளில் ஓராண்டுக்கும் மேலாக தங்கியிருந்து சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தனர் என்பதும் உண்மை.
அதே சமயம், வேலூர் கோட்டையில் ஆங்கிலேய ராணுவத்தில் இடம்பெற்ற சிப்பாய்களிடம் ஆங்கிலேயரின் கலாசார விரோத போக்குக்கு எதிர்ப்பு இருந்ததும் உண்மையே. இத்தகைய வீரர்களின் ஒத்துழைப்புடன்தான் திப்பு சுல்தானின் வீரர்கள் இக்கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயர்களைக் கொன்றனர்.
“”1857-ல் நடந்த முதல் விடுலைப் புரட்சிக்கான அனைத்து காரணிகளும் வேலூர் புரட்சியிலும் இருக்கின்றன. ஆதலால் 1806 ஆண்டு நடந்த வேலூர் கோட்டை சிப்பாய்க் கலகத்தை முதல் விடுதலைப் போர் என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு எந்தவிதமான ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை என்பதுதான் தமிழகத்தின் பலவீனமாக இருக்கிறது.
பின்னிரவில், சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்ட இந்தக் கலகத்தைத் தொடங்கிய சிப்பாய் யார்? எந்தெந்த காரணங்களை முன்னிறுத்தி புரட்சி வெடித்தது? என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.
இறந்த ஆங்கிலேய வீரர்கள் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன. ஆனால் இறந்துபோன ராணுவ சிப்பாய்கள், திப்பு சுல்தானின் முக்கிய படைத்தளபதிகள் தொடர்பான எந்தக் குறிப்புகளும் ஆவணம் என்று சொல்லக்கூடிய அளவில் ஏதுமில்லை. அவை ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. ஒரு சாதாரண லாக்-அப் மரணத்தை மறைக்க அல்லது “என்கவுன்ட்டரை’ நியாயப்படுத்த காவல்துறை ஆயிரம் ஜோடனைகள் செய்கிறபோது, ஆங்கிலேய அரசு ஆவணங்களை மறைத்ததில் வியப்பில்லை. ஆனாலும் உண்மைகள், மறைக்க முடியாதவையாக வாழையடி வாழையென தலைகாட்டுபவை.
நடந்த சம்பவங்களுக்கு மிகப் பெரிய சாட்சியும் ஆவணமும் வேலூர் கோட்டைதான். அகழியில் சடலங்கள் வீசப்பட்டதாகவும் கோட்டைக்குள் ஒரு பெருங்கிணற்றில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள வேலூர் கோட்டையிலும் அதன் அகழியிலும் அகழாய்வு செய்தால் பல கூடுதல் சான்றுகள் கிடைக்கும். இந்த சான்றுகள் 1806 ஜூலை 10 இரவின் பேசப்படாத உண்மைகளைப் பேசும். அவை பேசினால்தான் தமிழர் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.
சம்பவம் நடந்து 200 ஆண்டுகளே ஆன நிலையில், இங்கு அகழாய்வு செய்தால் இந்தச் சான்றுகள் இன்னும் “ரத்தமும் சதையுமாக’ உயிர்ப்புடன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.