இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு
இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார்.
இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்கடங்காத பயங்கரவாத வெறியாட்டத்தில் பாக்தாத் சிக்கியுள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.
பாஸ்ராவின் இன்றைய நிலைமை தனது விருப்பப்படி இல்லாவிட்டாலும், பாஸ்ராவின் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவேண்டிய பொறுப்பு, இராக்கியர்களையே சாரும் என்றும் பிரதமர் டோனி பிளேயர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராக்கில் இருந்து டென்மார்க்கும் படைகளை திரும்ப பெறுகிறது
![]() |
![]() |
இராக்கில் டென்மார்க் துருப்புகள் |
இராக்கிலிருந்து தனது தரைப்படை துருப்புக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திருப்பி அழைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. செய்தி மாநாடு ஒன்றில் இந்த அறிவிப்பை டென்மார்க் பிரதமர் வெளியிட்டார்.
அடுத்த மே மாதத்திற்குள் டென்மார்க்கின் 460 இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் ஹெலிகாப்டர் படைப் பிரிவு அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் டென்மார்க் படையினர் பணியாற்றிவரும் தெற்கு இராக்கில் உள்ள பாஸ்ராவின் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார்.