மார்க்சிஸ்ட்டின் போபர்ஸ் இது!
கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.
பினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ்விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.
பினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்!
“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிறந்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.