இலங்கையில் இராணுவ வண்டித்தொடர் மீது தாக்குதல்
![]() |
![]() |
இராணுவத்தினரின் பேருந்துகள் மீது முன்னரும் பல தடவைகள் தாக்குதல் நடந்துள்ளன |
இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் கல்லாறு பகுதியில் இன்று மதியம் விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தினர் பயணம் செய்த பேருந்து வண்டித் தொடர் மீது நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் 3 இராணுவத்தினரும் காயமடைந்ததாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
மன்னாரில் இருந்து புத்தாண்டிற்காக விடுமுறையில் சென்ற படையினர் பிரயாணம் செய்த பேருந்துத் தொடரணி மீது கல்லாறு பாலத்தருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பேருந்து வண்டியொன்று சிக்கி சேதமடைந்ததாகவும் அதன்போதே இந்த அனர்த்தம் நேர்ந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதனிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் மீது, இன்று காலை அரச விமானப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.