மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள்
![]() |
![]() |
விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்படவில்லை என்றும், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வைபவங்களைக் குழப்புவதற்காக அரச படையினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில், விடுதலைப்புலிகள் என்று கூறப்பட்டு இலங்கை விசேட அதிரடிப்படையினரால், சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
கொலைசெய்யப்பட்ட இந்தப் பொதுமக்களின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உறவினர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
![]() |
![]() |
இலங்கை அரசின் விமானப்படை விமானம் ஒன்று |
இதற்கிடையில் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவுக்கு மேற்கில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும், அலம்பில் கடற்கரையோரப்பகுதியில் விடுதலைப் புலிகள் படகுகளை நிறுத்தி வைக்கும் மறைவிடம் ஒன்றும் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மன்னார், பாலம்பிட்டி பகுதியில் நேற்று மாலை படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் வாகனம் ஒன்றில் பிரயாணம் செய்த 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு மோதல் சம்பவத்தில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பகுதியில் இன்று அதிகாலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவரைப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்து இறந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்த ந.மயூரன் என தெரியவந்துள்ளதாகவும் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று மாலை மடுக்கோவில் பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணையினால் படுகாயமடைந்திருந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டதில், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.