முலாயம் ஆட்சியைக் கவிழ்ப்பது நல்லதா, கெட்டதா?
நீரஜா செüத்ரி
உத்தரப் பிரதேசத்தை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதற்கான போர் தொடங்கிவிட்டது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்றுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்கின்றன.
உ.பி. சட்டப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும்போது, மாநிலத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதில்தான் இப்போது கடும் போட்டி.
ஏப்ரலில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடக்கும்போது மாநிலம் நம் கையில் இருக்க வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸýம் நினைக்கின்றன.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங்கை ஆதரித்த 13 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; எனவே முலாயம் சிங் அரசே அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் பதவியில் இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம்.
முதல்வர் பதவியிலிருந்து மாயாவதி ராஜிநாமா செய்ததும், அவருடைய கட்சியிலிருந்து முதலில் வெளியேறிய இந்த 13 உறுப்பினர்களின் ஆதரவை பேரவைத் தலைவர் செல்லும் என ஏற்றுக்கொண்டதால்தான், முலாயம் சிங்கால் மாற்று ஆட்சியை அமைக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ்.
இதே அடிப்படையில், பிறகு சேர்ந்த 24 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. இந்த 37 பேரையும் ஒரே தொகுதியாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பேரவையில் அக்கட்சிக்கு மொத்தம் 109 உறுப்பினர்கள் இருந்தனர். 37 பேரும் ஒரே சமயத்தில் கட்சியிலிருந்து விலகி வந்திருந்தால் அதை “”மூன்றில் ஒருபங்காக”க் கருதியிருக்க முடியும், எனவே இதை கட்சிப்பிளவு இல்லை, தாவல்தான் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.
எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, உத்தரப் பிரதேசத்துக்கு பொருந்தவே பொருந்தாது என்கிறார் மத்திய அமைச்சரும் சட்ட நிபுணருமான கபில் சிபல். ஓர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா இல்லையா என்பதை சட்டப் பேரவையிலும் மக்களவையிலும்தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் முலாயம் அரசோ, பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்தே சட்டவிரோத அரசாகத் திகழ்கிறது என்கிறார் கபில் சிபல்.
உச்ச நீதிமன்றம் 24 எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு குறித்து ஏதும் கூறவில்லை; உத்தரப் பிரதேச அரசு சட்டவிரோதமாகப் பதவி வகிக்கிறது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் கூறவில்லை. எனவே பேரவையில்தான் வலுவை நிரூபிக்குமாறு கூற வேண்டும் என்று சமாஜவாதி கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.
உ.பி. ஆளுநர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார் என்று தில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது முடிவு மத்திய அரசின் கையில் இருக்கிறது.
முலாயம் சிங் ஆட்சியில் நீடித்தால் சட்டப் பேரவைத் தேர்தல் முறையாக நடக்காது என்பது காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கருத்தாகும்.
குடியரசுத் தலைவர் ஆட்சியில் தேர்தல் நடந்தால் காங்கிரஸýக்கு 50 முதல் 60 இடங்கள் வரை கிடைக்கும், அதைக்கொண்டு மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து உ.பி.யில் மீண்டும் கால் ஊன்றலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் முலாயம் சிங். ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு அது ஆபத்தாகவும் முடியலாம். மக்களின் கோபத்துக்கு உள்ளாகவும் நேரிடலாம். காங்கிரஸ் கட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கும் திமுக, லாலு கட்சி போன்றவையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஆதரிக்காமல் போகக்கூடும்.
மக்களவையில் இடதுசாரிகளுக்கு 61 இடங்களும் முலாயம் கட்சிக்கு 40 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் செயலால் கோபம் அடைந்து இவர்கள் இணைந்தால் மக்களவையில் மூன்றாவது அணி ஏற்பட்டுவிடக்கூடும். அது காங்கிரஸýக்கு நல்லதல்ல.
எல்லாவற்றையும்விட முக்கியம், முஸ்லிம் வாக்காளர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? “”பாஜகவும் காங்கிரஸýம் ரகசியமாக கைகோர்த்து என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டன, நான் முஸ்லிம்களுக்கு நண்பன் என்பதால்தான் இந்தத் தண்டனை” என்று முலாயம் பிரசாரம் செய்யக்கூடும். அது ஒருவேளை எடுபட்டால், காங்கிரஸýக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவும் போய்விடும்.
முலாயம் சிங் ஆட்சியை இழந்துவிட்டால் அவர் மீது அனுதாபம் பொங்கலாம். அதையே அவர் பயன்படுத்தி மீண்டும் தேர்தலில் வென்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். மாநில அரசைக் கவிழ்த்த பிறகு கெட்ட பெயர் மட்டும்தான் காங்கிரஸýக்கு மிஞ்சும் என்றால் அதனால் என்ன பயன்?
ஆட்சியைப் பிடிப்பதற்காக முலாயம் சிங் செய்ததும், காங்கிரஸ் கட்சி செய்ய நினைப்பதும் நமது ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் உதவும் என்பதை மறுக்க முடியாது; நமக்கு ஜனநாயக அமைப்புகள் மீதே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
தமிழில்: சாரி.
முலாயம் அரசுக்கு நெருக்கடி
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கூடும் என கடந்த சில நாள்களாகச் செய்திகள் அடிபடுகின்றன.
மாநில ஆளுநர் இதற்குச் சாதகமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். தங்களுக்குப் பிடிக்காத அரசை டிஸ்மிஸ் செய்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. மத்தியில் காங்கிரஸýக்கு தனிப் பெரும்பான்மை பலம் இருந்த காலத்தில் இந்த ஆயுதம் பல தடவைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மத்தியில் இப்போது காங்கிரஸýக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. அந்த நிலையில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தனது சுருதியை மாற்றிக் கொண்டு முலாயம் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்று கோர ஆரம்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உ.பி. சட்டமன்றத்தில் முலாயம் சிங் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என வாதிக்க முற்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிருந்து முலாயம் சிங் அரசு சட்டவிரோதமாக ஆட்சியில் இருந்து வந்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.
“தைரியமிருந்தால் என்னை டிஸ்மிஸ் செய்து பாருங்கள்’ என முலாயம் சிங் சவால் விடுத்துள்ளார். வருகிற 26-ம் தேதி சட்டமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் ஆறு தடவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பின்போது முலாயம் சிங் அரசுக்கு அவரது கூட்டணியின் உண்மையான பலத்தைவிட கூடுதலாகவே வாக்குகள் கிடைத்தன. ஆகவே வருகிற 26-ம் தேதியன்று வாக்கெடுப்பில் அவர் வென்றாலும் வியப்பில்லை.
இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஓரிரு மாதங்களில் உ.பி. சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் எப்படியாவது முலாயம் சிங் தலைமையிலான அரசை அகற்றி விட வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம். தேர்தலின்போது முலாயம் சிங் அரசு பதவியில் நீடித்தால் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல வகைகளிலும் அவர் தமது கட்சிக்கான சாதக நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் தேர்தலின்போது ஆளுநர் மூலமாக காங்கிரஸ் அதே வழிகளைப் பின்பற்ற முயலும்.
முலாயம் சிங் அரசை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜகவும் கூறுகிறது. இது தொடர்பாக பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதை ஆதரித்து வாக்களிக்கவும் தயார் என பாஜக கூறுகிறது. தோழமைக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்ற நினைப்பில் காங்கிரஸ் ஒருவேளை முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யத் துணியலாம்.
முலாயம் சிங் மீது இப்போது மிகத் தீவிரமாகக் குறி வைக்கிற இதே காங்கிரஸ் கட்சிதான் கடந்த மாதம் வரை அவரது அரசுக்கு முட்டுக்கொடுத்து நின்றது என்பதை மறந்துவிடலாகாது. தவிர கடந்த தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்த காங்கிரஸôல் வரப்போகிற தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் முலாயம் சிங் அரசை அகற்றுவதன் மூலம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள காங்கிரஸ் ஏன் விரும்புகிறது என்பது புரியவில்லை.
புதிது புதிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குப் பதில் 26-ம் தேதி உ.பி. சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற அனுமதிப்பதே ஜனநாயக முறையாகும்.
Dinamani Editorial (Feb 23, 2007)
முந்தியது தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று கடந்த சில நாள்களாக நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தேர்தல் கமிஷனின் அறிவிப்பு.
முலாயம் சிங்குக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களின் பதவியை கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து முலாயம் சிங் பதவியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டார்; அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதாவும் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் மத்தியில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகளை இணங்க வைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 14ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 7 தொடங்கி மே 8 வரை ஏறக்குறைய ஒரு மாதம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான இங்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் நடத்த நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது என்று தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது.
மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலம் ஆளுநர் செல்வாக்கால் தனக்குச் சாதகமாக முடிவை மாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகக் கூறிவந்தார் முதல்வர் முலாயம் சிங். இதற்கிடையில், தமது அரசைக் கலைக்க பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்துச் செல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு தாம் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். சமாஜவாதி கட்சிக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 பேரும் உள்ளனர். ஆதரவு வாபஸ் காரணமாக மத்திய அரசுக்கு ஆபத்து இல்லையென்றாலும் காங்கிரஸின் போக்குக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் 26ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இச் சூழ்நிலையில் பேரவையைக் கலைத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் சூழ்நிலை ஏற்படும். பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைதான் சரியான இடம் என்று ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையாக இருக்காது என்று பல்வேறு தரப்புகளிலும் கருத்து கூறப்பட்டது.
ஆட்சியில் முலாயம் தொடர்ந்தால் அரசின் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இனி நிர்வாகத்தில் எத்தகைய மாற்றங்களையும் அவர் செய்ய இயலாது. மேலும், மக்களைக் கவரப் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது.
தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளைக் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்குச் சாதகமான ஒருவரைத் தேர்வு செய்ய உ.பி. ஆதரவு தேவை என்பதால் அங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மக்கள் நலனே தங்களின் குறிக்கோள் என்று கூறும் அரசியல் கட்சிகள் மறைமுக வழிகளில் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும். எத்தகைய தீர்வையும் மக்கள் மன்றத்திடமே விட்டுவிட வேண்டும். இதுவே ஆரோக்கியமான ஜனநாயக வழிமுறையாகும்.