ரயில் நிலையங்களில் “காய்கறி சாலட்’: லாலுவின் புதிய அறிமுகம்
புதுதில்லி, நவ. 8: ரயில்நிலையங்களில் மண் குடுவையில் தேநீர், மோர் ஆகியவை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இப்போது “காய்கறி சாலட்’ என்ற சுவையான தின்பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு “லிட்டி சோகா‘ என்று பெயராம்.
ரயில் பயணிகளிடம் “லிட்டி சோகாவுக்கு’ காய்கறிகள் நிறைந்த சாலட் உணவுப் பண்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து ரயில் நிலையங்களில் இதற்கென ஸ்டால் அமைக்க லாலு உத்தரவிட்டுள்ளதாக தலைமை வர்த்தக மேலாளர் கே.கே.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
இந்தியன் ரயில்வே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறது. இது தவிர ரயில்களிலும் உணவுப் பண்டங்கள் விற்கப்படுகின்றன. இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவும் இதில் அடங்கும்.
பாட்னா ரயில் நிலையத்தில் முதன் முறையாக காய்கறி சாலட் விற்பனை செய்யும் ஸ்டால் தொடங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் முக்கிய ரயில்நிலையங்களில் இதேபோன்ற ஸ்டால்கள் நிறுவப்பட உள்ளன என்றார் ஸ்ரீவாஸ்தவா.