எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!
சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.
இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.
உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.
இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.
(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.
(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.
ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?
28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.
அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.
நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.
எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.
வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.
தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.
தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.
மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!