மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பஞ்சாப், உத்தரகண்டில் ஆட்சியை இழந்தது காங்.
சண்டீகர்/டேராடூன், பிப். 28: பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மூன்று மாநிலங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் -பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரகண்டில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மணிப்பூரில் அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒருசில இடங்களே தேவைப்படுவதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற 116 தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிரோன்மணி அகாலி தளம் 48 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 44 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சிரோன்மணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
உத்தரகண்டில் மொத்தம் 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 34 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களிலும், ஐக்கிய கிராந்தி தளம் 3 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
ஐக்கிய கிராந்தி தள ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.கந்தூரி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்று 30 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
முடிவு அறிவிக்கப்பட்ட 60 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மணிப்பூர் மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 5 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.