Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Movie’ Category

‘Abhirami’ Ramanathan: Dinathanthi Biosketch – Tamil Movie History – Notable Faces

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)
படத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்
3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை

தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.

அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.

திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

அபிராமி ராமநாதன்

“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.

அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே
2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!

சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.

அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.

விவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.

ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.

வருமானம்

பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.

கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.

இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்!

இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.

இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!

சின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.

சொந்தத் தொழில்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?” என்று அப்பா கேட்டார்.

சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.

உன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா?” என்று கேட்டார்.
“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி! செய்” என்றார்.

சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.

விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.

“பூரா பணமும் போய்விட்டதா?” என்று அப்பா கேட்டார்.

“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.

சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.

`அபிராமி’ உதயம்

இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.

1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.

Posted in Abhirami, Abirami, Biosketch, Biz, Cinema, Dinathanthi, Distributor, Enetrtainment, Faces, Films, History, Industry, Movie, Movies, Producer, Rajni, Ramanadhan, Ramanathan, Sivaji, Theaters, Theatres | Leave a Comment »

Ludhiana blast: Jihadi-Khalistani link likely

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

பயங்கரவாதிகள் கூட்டு சதி?: லூதியானா குண்டுவெடிப்பு

லூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.

திரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.

அவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.

இந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

லூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Posted in Arms, Babbar Khalsa International, Bihar, BKI, Blast, Bombs, Cinema, dead, Democracy, explosion, Freedom, Independence, Investigation, Islam, Jihad, Khalistan, Liberation, Ludhiana, Movie, multiplex, Muslim, Punjab, RDX, Samrala, Separation, Sikhs, Singar, Terrorism, terrorist, Theater, Theatre | 1 Comment »

Losing our heritage & Folk Arts Tradition – Interview with World cultural forum் Member

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”

உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.

நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”

-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.

இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?

தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.

சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?

டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.

கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?

கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.

உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?

உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.

இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?

நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.

உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »

Cinema shooting in Trains – Railways updates the Procedure for Movie Locations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

ரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

புது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.

ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.

பயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.

படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

தூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

ரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

சினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Posted in Bollywood, Camera, Cinema, Doordarshan, Duets, Fights, Film Institute, Films, Freight, Hindi, Kollywood, License, Locations, Love, Movie, Movies, Permission, Permissions, Picturization, Platform, Procedure, Process, Production, Props, Railways, Rly, Scenes, Screenplay, Sets, Spot, Telugu, Tollywood, Trains, Travel, Traveler | Leave a Comment »

Kumutham Theernadhi – Black Friday: Movie Experiences by Viswamithran

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

குமுதம் தீராநதி
இந்திய சினிமா – விஸ்வாமித்திரன்
கருப்பு வெள்ளிக்கிழமை

ஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.

அவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.

எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.

1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.

மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.

சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.

2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.

5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.

இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.

மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.

கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.

பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.

ஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.

2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.

டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.

Posted in 9-11, 9/11, Arms, Arts, Awards, Babri Masjid, BJP, Black Friday, Blasts, Bollywood, Bombay, Bombs, Cinema, Classic, dead, Dec6, DocuFiction, Documentary, Drama, Extremism, Extremists, Film, guns, Hindi, Hindu, Hindutva, Incident, Islam, mani Rathnam, Manirathnam, Masala, Masjid, massacre, Mosque, Movie, Mumbai, Murder, Muslim, National, Panaroma, Politics, RDX, revenge, Reviews, RSS, Shiv Sena, Terrorism, terrorist, Violence, Vishvamithiran, Vishvmithran, Vishwamithiran, Vishwamithran, Visvamithiran, Visvamithran, Viswamithiran, Viswamithran, War, WTC | Leave a Comment »

AVM & Shankar’s ‘Sivaji The Boss’ – Rajni’s 100th Movie

Posted by Snapjudge மேல் மே 21, 2007

திரைக்கதிர்: ரஜினியின் 100 வது படம்!

மனோஜ் கிருஷ்ணா

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல விஷயங்களைப் பயன்படுத்துவார்கள். ரஜினி படத்துக்கு அது தேவையே இல்லை. அவர் நடிக்கிறார் என்றவுடன் அதுவே செய்தியாகி, விளம்பரமாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடும். விளம்பரமே தேவைப்படாத ‘சிவாஜி’ படத்தின் விளம்பரத்துக்கும் ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது.

அது…

ரஜினிகாந்த் நடிக்கும் 100 வது தமிழ்ப் படம் என்பதுதான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் என இதுவரை ரஜினி 173 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் ‘சிவாஜி’ படம் ரஜினியின் 100 வது தமிழ்ப் படம் என்பது அவருடைய ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தரும்.

பிலிம் நியூஸ் ஆனந்தன், இந்தத் தகவலைப் புள்ளி விவரத்தோடு ரஜினியிடம் கூறியபோது அவருக்கே இது புதிய விஷயமாகத் தோன்றியதாம். அதனால் ‘சிவாஜி’ பட விளம்பரத்தின்போது இந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறது ஏவி.எம்.நிறுவனம்.

Posted in 100, AVM, Cinema, Film News, Movie, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Sankar, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss | 1 Comment »

Rajini admires Thankar Bachan story – May act in his movie?

Posted by Snapjudge மேல் மே 15, 2007

மனோரமா, பாரதிராஜா, வேலுபிரபாகரன் வரிசையில் இப்போது ‘குருவி குடைஞ்சா கொய்யாப்பழம்’ புகழ் தங்கர்பச்சான்! ஏதோ கலைமாமணி விருது பெறப்போகிறவர்களின் லிஸ்ட் அல்ல. ரஜினியை திட்டிவிட்டு பின்னர் தடாலென்று புகழ்ந்து தள்ளுபவர்களின் லிஸ்ட்தான்.

விஷயம் இதுதான். தங்கர்பச்சான் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ கதையை படமாக்க ரஜினியிடம் கால்ஷீட் கேட்டாராம். கதையைக் கேட்டுவிட்டு ரஜினியும் தங்கரை பாராட்டியிருக்கிறார்.

குஷியான தங்கரும், ரஜினி போல ஒரு இயல்பான நடிகர் யாரும் கிடையாது. அவருடைய வயதுக்கும், அவருடைய நடிப்புக்கும் இந்தக் கதையில் நடித்தால் அவரை உலகத்தரத்துக்கு கொண்டு செல்லமுடியும் என்று சொல்லித் திரிகிறாராம். ‘எடுத்தது மூணு படம்…அதுல ஊத்திக்கிட்டது ரெண்டு படம்… இதுல பேச்சுக்கு மட்டும் குறைச்சலேயில்லை’ என்று முணுமுணுக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

Posted in Movie, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Thangar, Thankar, Thankar Bachan | Leave a Comment »

Periyar Movie Celebrations – Processions, Theater Specials

Posted by Snapjudge மேல் மே 2, 2007

சாரட் வண்டியில் “பெரியார்’ ஊர்வலம்

ஈரோடு, மே 2: ஈரோட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் “பெரியார்’, “ராவணன்’ வேடமணிந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பெரியார் திரைப்படம் மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ், மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளனர். பெரியார் திரைப்படம் வெளியானதையொட்டி தி.க.வினர் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை கொல்லம்பாளையத்தில் இருந்து தேவி அபிராமி திரையரங்குக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் திராவிடர் கழக ஈரோடு நகரச் செயலர் தியாகு பெரியார் வேடமணிந்தும், இளைஞர் அணி அமைப்பாளர் ராசு ராவணன் வேடமணிந்தும் சென்றனர்.

ஊர்வலம் கொல்லம்பாளையம், காளைமாட்டுச் சிலை, மணிக்கூண்டு, பஸ்நிலையம் வழியாக திரையரங்கை அடைந்தது. பெரியார், ராவணன் வேடமணிந்தவர்கள் சாரட் வண்டியில் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். திரையரங்கில் பெரியார், ராவணன் வேடமணிந்தவரை தி.க.வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Posted in Celebrations, Cinema, Fan, Fan Clubs, Kushboo, Kushbu, Manram, Movie, Periyar, Rasigar, Rasikar, Ravanan, Sathyaraj, Satyaraj, Tamil Cinema, Tamil Movie, Tamil Movies, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Theater, Theatre | 1 Comment »

Ma Aranganathan – A Short film by Ravi Subramanian: Interview

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லைட்ஸ்-ஆன்: மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்…

எம்.கே. மனோஜ்

அனுதினமும் அல்லல்களால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதல் தேடி அலையும் மனிதர்களுக்கு தாய்மடியாய்த் திகழ்வது கலைகளே. அக்கலைகள் பல வடிவங்களில் வாழ்ந்துகொண்டிப்பதற்குக் காரணம் கலைஞர்களே. அத்தகைய கலைஞர்களில், பெரும்பாலான மக்களால் அதிகம் அறியப்படாதவர்களும் உண்டு. வெகுஜனங்களின் பார்வையையும், விளம்பர வெளிச்சத்தையும் அதிகம் பொருட்படுத்தாத மனிதர்களைப் பொருட்படுத்தும் நோக்கில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

சதா நேரமும் பொருள் தேடவும், தன்னையும் தன் சுற்றத்தையும் மட்டுமே பிரதானப்படுத்திக்கொள்ள முயலும் மனிதர்கள் மத்தியில், அதிக கவனத்துக்குள்ளாகாத எழுத்தாளர் மா.அரங்கநாதன்!

இந்த ஆச்சரியமான மனிதரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தன் கைப்பொருளை வைத்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.

மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். “முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது ஒரு மாத இதழில் வெளிவந்த இவரின் “தேட்டை’ என்ற சிறுகதையும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைப்படங்களில் நல்ல படைப்புகள் குறைந்து வரும் சூழலில், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிப்பவை ஆவணப்படங்களும், குறும்படங்களும்தான் என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய உலகுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வர வேண்டியதன் அவசியம், பெண்கள் ஆபாசமாக எழுதுவதைப் பற்றிய தனது கருத்து, ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா? தான் சார்ந்துள்ள இயக்கத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக எழுதுவது, பக்தி இலக்கியப் பாடல்கள் மீதான அவரது வித்தியாசமான பார்வை.. எனப் பல விஷயங்களைப் பற்றி மா.அரங்கநாதன் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரவிசுப்ரமணியன் தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவர். கவிதைகளும், கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வரும் இவர், கவிதைகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். தற்போது சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருடைய கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். கர்நாடக இசையிலும் நல்ல புலமை பெற்றிருக்கும் ரவிசுப்ரமணியத்தைச் சந்தித்தபோது…

எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க ஏன் மா.அரங்கநாதன்?

அதற்குக் காரணம் அவருடைய படைப்புகளே. அவர் எழுதியது சொற்பம்தான் என்றாலும் அவை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். கவிஞர் அல்லாமல் கவிதையியல் தொடர்பாக புதிய சிந்தனைகளை வாசகர்களிடம் புகுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்த அரங்கநாதன், தன்னுடைய வருமானத்தில் 1986 முதல் 1996 வரை “முன்றில்’ என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். இதுவரை அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. அவர் போன்றவர்களை மரியாதை செய்வதற்கான ஒரு முயற்சிதான் என்னுடைய படம். அரங்கநாதனைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் மற்ற எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல.

அவருடைய படைப்புகளின் தனித்தன்மையாகத் தாங்கள் கருதுவது?

தமிழ் வாழ்வின் அடையாளங்கள்; வாழ்க்கை பற்றிய விசாரணை; ஒரு மாயத்தன்மையோடு கூடிய மெல்லிய தத்துவச் சரடு; படைப்பினை வளர்த்தெடுக்கும் விமர்சனப் போக்கு; சைவ இலக்கிய பரிச்சயம்; மரபின் மீதான காதல்; நவீனத்துவத்தை முணுமுணுக்காமல் ஆதரிக்கும் விதம் போன்றவற்றைக் கூறலாம்.

இதுபோன்ற படங்களால் இலக்கிய ஆர்வத்தையோ மா.அரங்கநாதன் போன்றவர்களையோ மக்களிடையே கொண்டு செல்ல முடியுமா?

நிச்சயமாக முடியும். பணத்தை எதிர்பார்த்தால்தான் தவறு. மக்களின் ரசனைத் திறனில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் முயற்சிகள் தோற்பதில்லை என்பதே என் கருத்து. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சதானந்தம், ஒளிப்பதிவாளர் வடக்கரா மோகன்தாஸ், படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் ஒரு சிறு தொகை கூட வாங்காமல் பணியாற்றியிருக்கிறார்கள் எனும்போது எங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஓர் எழுத்தாளரின் மொத்த படைப்புகளைப் பற்றிய விவரங்களை ஓர் ஆவணப்படத்தில் எளிதாகக் கூற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இதுபோன்ற படங்களைப் பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளைப் படிக்கும் எண்ணம் ஏற்படும்.

மேலும் திரைப்பட இயக்குநரை விட ஆவணப்பட இயக்குநர்களின் வேலை சிரமமானது என்பது என் கருத்து. ஆவணப்பட இயக்குநர் ஆதாரங்களைத் தேடித் தொகுக்கும் துப்பறிவாளராகவும் இருக்க வேண்டும். தேடிய ஆதாரங்களை அப்படியே காட்டவும் முடியாது. எழுத்தாளரைப் பேச வைத்துக்கொண்டே இருக்கவும் முடியாது. அவருடைய எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படும் விதம் முக்கியம். அந்த வகையில் நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது.

– வெகுஜன வாசகர்கள் பெரும்பாலும் அறியாத மா. அரங்கநாதன் போன்றவர்களை, ஆவணப்படத்தின் மூலம் கெüரவிப்பதும் ஒரு சேவைதான். ரவிசுப்ரமணியத்தின் இந்தச் சேவைக்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

Posted in Documentary, Ma Aranganadan, Ma Aranganadhan, Ma Aranganathan, Ma Arankanathan, Maa Aranganathan, Movie, Ravi Subramanian, Short Film | Leave a Comment »

Love Story: Salem-1 MLA Ravichandran’s daughter elopes

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, ஜன.20: காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸôரால் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

18 வயது நிரம்பாத அப்பெண்ணை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

சேலம்-1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் ஆர். கலைவாணி, சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவருகிறார்.

கடந்த 25-11-2006 அன்று அவர் காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.

இதையடுத்து கலைவாணியைத் தேடி கண்டுபிடிக்குமாறு சேலம் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைவாணியும் அவரது காதலன் சிவகுமாரும் ஹைதராபாதில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸôர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணைக் கடத்தியதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அவரை சிறையில் அடைத்தனர்.

கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சார்பாக வழக்கறிஞர் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆஜரானார். கலைவாணிக்கு 18 வயது ஆகவில்லை. எனவே அவரது பெற்றோருடன் அவரை அனுப்ப வேண்டும் என்றார் வழக்கறிஞர்.

கலைவாணியைக் கடத்திச் சென்றதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் கூறினார்.

நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே. மோகன்ராம் ஆகியோர் கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். சிவகுமார் என்னைக் கடத்தவில்லை என்றும், என் விருப்பத்தின்பேரில்தான் அவருடன் சென்றேன் என்றும் கலைவாணி கூறினார். பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், அவர் பெற்றோருடன் செல்ல அனுமதி அளித்தனர். வழக்கை இத்துடன் முடிப்பதாகக் கூறினர்.

Posted in 18, ADMK, AIADMK, Arrest, Constituency, Love, Major, MLA, Movie, Police, R Kalaivani, Ravichandran, Salem-1 | Leave a Comment »

Harkat-ul-Mujahideen prisoner escapes from Police Custody in Assam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட தீவிரவாதி தப்பியோட்டம்

குவாஹாட்டி, அக். 11: அசாமில் போலீஸாரால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி திங்கள்கிழமை இரவு தப்பியோடினார்.

நூருல் அமீன் என்கிற ஸாஜித், கடந்த 1999-ல் குவாஹாட்டி காமக்யா கோயில் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அமீனை, போலீஸார் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வந்தனர்.

மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருந்தபோது, சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட அமீனுக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். இந்நிலையில், கழிப்பறைச் சென்ற அவர் அங்கு ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த 2 போலீஸôர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Posted in Assam, Bombs, Gauhati, Harkat-ul-Mujahideen, Kamagya Temple, Movie, Noorul Ameen, Police, Police Custody, Saajid, Suspect | Leave a Comment »

SC orders release of Black Friday

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006

1993 மும்பை குண்டு வெடிப்பை பற்றிய சினிமாவை வெளியிட நீதிமன்றம் அனுமதி

புது தில்லி, அக். 1: மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “பிளாக் ஃபிரைடே’ (கறுப்பு வெள்ளி) என்னும் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், “”மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுவருகிறது. அத் தீர்ப்பு முழுவதும் அளிக்கப்பட்ட பிறகுதான் அத் திரைப்படத்தை வெளியிட வேண்டும். எனினும், குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு எஸ். ஹுசைன் ஜைதி என்பவர் ஒரு புத்தகத்தை எழுதினார். அந் நூலைத் தழுவி, “கறுப்பு வெள்ளி’ (“பிளாக் ஃபிரைடே’) என்ற திரைப்படத்தை “மிட் டே மல்டிமீடியா’ என்ற நிறுவனம் தயாரித்தது.

ஆனால், அத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மும்பை வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முஸ்தபா மூஸா தாரனி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“”மும்பை வெடிகுண்டு வழக்கு விசாரணையில் இருக்கும்போது அத் திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால், அந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதியின் கருத்தை அது பாதிக்கக்கூடும். அதனால் எனக்கு பாதகம் ஏற்படக்கூடும். எனவே, அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

அதையடுத்து, அவ் வழக்கு முடியும் வரையில் அத் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த நிறுவனம் மேல் முறையீடு செய்தது. அதை நீதிபதிகள் பீ.பி. சிங், அல்தமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. படத்தைத் திரையிட அனுமதி அளித்த அதே நேரத்தில், மேற்சொன்ன நிபந்தனைகளையும் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு தொடர்ந்த முஸ்தபா மூஸô குற்றவாளி என்று மும்பை தடா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத் தக்கது

Posted in 1993, Black Friday, Bollywood, Dawood Phanse, Film, Hindi Pictures, Hussein Zaidi, Movie, Mumbai blasts, Mustaq Moosa Tarani, Supreme Court, Tamil, Tiger Memon | Leave a Comment »

Empton Magan – Tamil Cinema Movie Review

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

எம் மகன்: விமர்சனம்

மனோஜ்கிருஷ்ணா

தந்தை -மகன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தந்தையின் கண்டிப்புக்குப் பின்னால் கரிசனம் இருக்கும் என்பதையும் பாசம், காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை கலந்து ஆபாசமில்லாமல் கூறியிருக்கும் நல்ல படம்.

நாசர் பலசரக்கு கடை வைத்திருப்பவர். அவருடைய மகன் கல்லூரியில் படிக்கும் பரத். கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் கடையில் வேலை பார்க்கிறார். சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்திப் பார்க்கும் தந்தையிடம் அடிக்கடி அடி வாங்குகிறார். இவ்வாறான சூழ்நிலையில் இருக்கும் பரத்துக்கு ஒரே ஆறுதல்… அவருடைய முறைப் பெண்ணின் நினைவுகளே. அவர் கோபிகா. ஆனால் நாசருக்கும், கோபிகாவின் தந்தைக்கும் நீண்ட கால குடும்பப் பகை. ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குடும்பங்களும் சந்திக்க நேரிட… அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

படத்தில் நாசர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான நடிப்பாற்றல்! நாசர் பேசும் இயல்பான வசனங்கள், பாடி லாங்வேஜ் மூலம் அவர் காட்டும் விதவிதமான முக பாவனைகள், அவருடைய ஒப்பனை போன்ற அம்சங்கள் அவரை சிறந்த கலைஞர் என அடையாளம் காட்டுகின்றன.

பரத் நன்றாக நடித்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாக தந்தையின் உழைப்பை உதாரணமாகக் காட்டும்போதும், கோபிகாவுடனான காதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பு. நடனக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார்.

பரத்தின் தாய் மாமனாக வரும் வடிவேலு படத்துக்கு பெரிய பலம். அவர் வரும் அனைத்துக் காட்சிகளிலும் கலகலப்பு. நகைச்சுவையிலும், குணச்சித்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார் சரண்யா. கோபக்கார கணவருக்குத் தெரியாமல் தாய் வீட்டுக்குச் சென்று தன்னுடைய சொந்த பந்தங்களோடு மனம் விட்டுப் பேசும் காட்சிகள், சாமியாட்ட காட்சிகள் போன்றவை சிறப்பு. கோபிகா கிராமத்துப் பெண்களுக்கேயுரிய சுபாவங்களைத் தன்னுடைய நளினமான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். பரத்தின் கல்லூரித் தோழியாக வரும் கஜாலாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. தந்தையிடம் தோழமை உணர்வோடு அவர் பேசும் காட்சிகள் சிறப்பு. கோபிகாவின் தந்தையாக வரும் சண்முகராஜன், படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் சின்னத் திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பாஸ்கர் சக்தியின் வசனங்கள் ரசிகர்களைப் படத்தோடு ஒன்றச் செய்கின்றன. வித்யாசாகரின் இசையில் “கோலிகுண்டு’, “வர்றாரு’ பாடல்கள் ரசிகர்களைக் கவரும். பின்னணி இசையும் சிறப்பு.

படத்தை சலிப்பூட்டாமல் விறுவிறுப்போடு இயக்கியிருக்கிறார் “மெட்டி ஒலி’ திருமுருகன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக உன்னிப்பாகத் தேர்ந்தெடுத்து அனைவரையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார். சாவுக்குக் காத்திருக்கும் “என்னத்த’ கன்னையா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மனம்விட்டு சிரிக்கலாம். பல காட்சிகளில் “திரைக்கதை வித்தகர்’ கே.பாக்யராஜின் சாயல் தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு சிறிய தொய்வு. சில பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

“எம் மகன்’ பெரிய திரையில் வலம் வருவோம் என்ற கனவோடு உலா வந்துகொண்டிருக்கும் சின்னத் திரை கலைஞர்களுக்கு “நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் திருமுருகன்.

Posted in Bharath, Dinamani, Em Magan, Empton Magan, Ghajala, Gopika, Kollywood, Metti Oli, Movie, Nasser, Picture, review, Tamil, Tamil Cinema, Thirumurugan, Vadivelu | Leave a Comment »

Jury announced for Granting Govt. Subsidies for Tamil Cinema

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

திரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு

சென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Posted in Art, Culture, Docu Drama, Documentary, Government, Grants, Justice Bhaskaran, Kollywood, Movie, Saroja Thangavelu, Short Film, Sri Priya, Subsidy, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TN | Leave a Comment »