முதல்கட்ட பேச்சுவார்த்தை: நடிகர்கள் சம்பளம் பாதியாக குறைப்பு
சென்னை, நவ. 28- திரைப்படத்துறைக்கு படப்பிடிப்பு கட்டணம் குறைப்பு, கேளிக்கைவரி ரத்து என பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து புதுப்புது படக்கம்பெனிகள் முளைத்துள்ளன. அதிக படங்களுக்கு பூஜையும் போடப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களும் படங்கள் தயாரிக்க முதலீடு செய்கின்றன.
இந்த நிலையில் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
புதுப்படங்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தயாராகி விடுகிறது. இரண்டு மாதங்களிலும் சில படங்களை எடுத்து விடுகிறார்கள். இதற்கு நடிகர்களுக்கு கோடி கோடியாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
- முன்னணி நடிகர்கள் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
- சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர்கள் ரூ. 15 கோடி வரை வாங்குகிறார்கள்.
- நடிகைகளுக்கு ரூ. 50 லட்சம், ரூ. 60 லட்சம் வழங்கப்படுகிறது.
- தெலுங்கில் நடிகைகளுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் தருகிறார்கள்.
எனவே 60 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகைகள் பலர் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடிக்கிறார்கள். நடிகர்கள் சம்பள உயர்வால் தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர். ஏற்கனவே அவர்கள் சம்பளத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனாலும் அவை அமுலாகவில்லை.
தற்போது அரசு சலுகை கள் அளித்துள்ளதால் நடிகர்கள் சம்பளத்தையும் குறைத்து அனைவரும் பயன்படத்தக்க வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கம் அதிகார பூர்வமற்ற வகைகள் முதல்கட்ட பேச்சு வார்த்தையை முடித்துள்ளது.
சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும், சம்பளத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பளத்தை ஒரே நேரத்தில் வாங்காமல் தவணை முறைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும். என பல்வேறு அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. விரைவில் இரண்டாவது கட்டப்பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அப்போது சம்பளத் தொகை இறுதி செய்யப்படும்.