Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Mouse’ Category

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »