இலங்கை அரசுக்கான ஆதரவை மறுபரீசிலனை செய்வோம் – மலையக மக்கள் முன்ணணி
கொழும்பில் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை அரசுக்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து தமது கட்சி சிந்தித்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் கூட்டணியில் அமைச்சராகவும் உள்ள பெ.இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம தெரிவித்தார்.
திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் போது தமிழ் பேசும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் இந்தப் பிரச்சின குறித்து குரல் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஞாயிறு அன்றும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளர்கள் என்றும், அவர்களை தாம் பல போலீஸ் நிலையங்களில் சென்று பார்வையிட்டு, அவர்களின் விடுதலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆளும் கூட்டணியில் தமது கட்சி அங்கம் வகித்தாலும், நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தமது கட்சி எண்ணியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது உள்ள சூழலில், அரசாங்கத்துடன் தொடர்ந்து இருக்க முடியுமா என்கிற பெரிய கேள்விக் குறியும் எழுந்துள்ளதாகவும், திங்கட்கிழமை அது குறித்த பதில் தெரியவரும் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தமது கட்சியான மலையக மக்கள் முன்னணி தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து புகார்
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சில பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பெரிய பள்ளிவாசலில் வெள்ளிகிழமை கூடிய கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாலச்கள் சம்மேளனத்தின் விசேட கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்டப்டுள்ளதாக சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளரான யு.எல்.எம்.முபீன் கூறுகின்றார்.
கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பின்பும் கடத்தல், கொள்ளை உட்பட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகவும் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற உத்தரவு காரணமாக பள்ளிவாசல்களில் இரவு நேர ஒலி பெருக்கி பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இறைச்சிக்காக கர்நடைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் வெட்டுதல் போன்றமை தொடர்பாக எதிர் நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற முயற்சிகள் போன்றவற்றையும் எதிர் நோக்குவதாகவும் கூறினார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்ட 3 வது வாக்கெடுப்பிற்கு முன்னதாக இது பற்றி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமான பேச்சுவார்ததையொன்றை நடத்த வேண்டும் என்ற மற்றுமொரு தீர்மானமும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள்
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கடுமையான நேரடி மோதல்களில் குறைந்தது 60 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட இராணுவத்தின் முயற்சி தமது எதிர் தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் அடம்பனுக்குத் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதில் 28 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது, இதில் 57 விடுதலைப் புலிகளும் 26 இராணுவத்தினரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,
மன்னார் பெரியதம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், 25 புலிகளும், 9 இராணுவத்தினரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,
இதற்கிடையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனுக்கும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.