வங்கிகளும் அரசியல் தலையீடும்!
அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.
“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.
முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.
அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?
ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.
நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.
ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.