ஆன்-லைன் வர்த்தகம் எதிரொலி: பருப்பு விலைகள் ஒரே நாளில் அதிரடி உயர்வு
சென்னை, ஜன. 23: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பருப்புகளின் விலை திங்கள்கிழமை அதிரடியாக உயர்ந்தது.
ஆன்-லைனில் நடைபெறும் வர்த்தக சூதாட்டமே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் திங்கள்கிழமை காலை ஒரு மூட்டை (100 கிலோ) துவரம் பருப்பின் விலை ரூ.4,000 ஆக இருந்தது. ஆனால், மாலையில் திடீரென விலை உயர்ந்து ரூ. 4,500 ஆக விற்கப்பட்டது.
அதாவது, கிலோவுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.45 ஆக விற்கப்பட்டது.
இதேபோன்று, உளுத்தம் பருப்பும் மூட்டைக்கு (100 கிலோ) ரூ. 5,800 வரை விற்கப்பட்டது. ஒரே நாளில் உளுத்தம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ. 4 உயர்ந்தது.
“”ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், திடீரென ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்து இருப்பதற்கு ஆன்-லைனில் நடைபெறும் வர்த்தகமே காரணம்” என்றார் கொளத்தூரில் மளிகைக் கடை வைத்திருக்கும் செண்பகராஜ்.
என்ன நடக்கிறது ஆன்-லைனில்…ஆன்-லைனில் வர்த்தகத்தின் போது, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்டவை மொத்தமாக முன்பதிவு செய்து வாங்கப்படுகிறது. இதற்கு, மொத்தக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும்.
மொத்தமாக, முன்பதிவு செய்யும் போது பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
இதன்பின்பு, தினந்தோறும் சந்தை நிலவரத்தை தினமும் ஆன்-லைனில் பார்க்கும் வர்த்தகர்கள் “நல்ல வாய்ப்பு’ கிடைக்கும் போது தங்களின் சரக்கை விற்கின்றனர்.
“”இந்த நிச்சயமற்ற தன்மையால் சில்லறை வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவின் சில முக்கிய நிறுவனங்கள் இந்த வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபட்டு, விலை ஏற்றத்துக்கு காரணமாகின்றன” என்றார் வணிகர் சங்கப் பிரமுகர் ஒருவர்