Archive for the ‘Moolikai’ Category
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 3, 2008
மூலிகை மூலை: அம்மை நோய் தீர்க்கும் தான்றிக்காய்!
தான்றிக்காய் மர இன வகுப்பாகும். இதன் காய், இலை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. துவர்ப்புச் சுவை உடையது. வெப்பத்தை அதிகரிக்கும்.
வேறு பெயர்கள்:
அகசம், அக்கம், அக்கந்தம், அக்கத்தான், அம்பலத்தி, ஆராமம், அக்காத்தான் அமுதம், எரிகட்பலம், கந்தகிட்பலம், கந்துகன், கலித்துருமம், களத்தூன்றி, சதகம், தாபமாரி, தான்றிக்காய், வாத்தியம், வித்தியம், விபீதகம், திறிலிங்கம், பூதவாசகம்.
ஆங்கிலத்தில் :
Terminalia bellirica (Gaertner), Roxb; Combreteceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
தான்றிக் காயை கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து சிறிது சர்க்கரை கலந்து 2 வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்த மூலம், சீதபேதி குணமாகும்.
தான்றிக் காய்ப் பொடி 3 கிராமுடன் அதே அளவு சர்க்கரை கலந்து வெந்நீரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல், கண் பார்வை குணமாகும். தான்றிக்காயை நீர் விட்டு அரைத்துப் புண், அக்கியின் மேல் பூச்சாகப் பூசி வர எரிச்சல் தணிந்து குணமாகும். தான்றிக் காயைச் சுட்டுப் பொடியாக்கி சமஅளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி வெந்நீரில் 2 வேளை சாப்பிட்டு வர நீர் ஒழுகுவது, பல் வலி குணமாகும்.
தான்றிக் காயைப் பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடி 10 கிராம் எடுத்து 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தேன் 10 கிராம் கலந்து சாப்பிட இரைப்பு தணியும்.
தான்றிக்காய்த் தளிரை இடித்துச் சாறு பிழிந்து 20 மில்லியளவு 3 வேளை குடித்து வர தொண்டைக் கட்டு, கோழை கட்டல், மேல் மூச்சு வாங்கல் குணமாகும்.
தான்றிப் பருப்பை அரைத்து புண்பட்ட இடங்களில் பூசக் குணமாகும். தான்றிப் பொடி, பாறையுப்பு, திப்பிலிப் பொடி சம அளவாக 30 கிராம் எடுத்துப் பொடியாக்கிச் சாப்பிட தொண்டைக் கமறல் நீங்கும்.
தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக்காய் சம அளவாகக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 300 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி ஆறிய பிறகு புண்களைக் கழுவி வர புண்கள் விரைவில் ஆறும்.
Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bellirica, Combreteceae, Gaertner, Herbs, Measles, Mooligai, Moolikai, Naturotherapy, Thaanrikkai | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007
மூலிகை மூலை: குடிவெறி நீக்கும் மிளகாய்!
சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.
வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.
லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea
மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.
மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.
மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.
மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.
மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.
மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.
மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.
மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.
மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bell-pepper, capsicum, Capsium Firutesceans, chillies, chilly, Herbs, Linn, medical, Mooligai, Moolikai, Naturotherapy, Pepper, Red pepper, Solonacea | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007
மூலிகை மூலை: வீக்கம் போக்கும் மிளகரணை!
சின்னதாக நீளமான வட்ட வடிவம் உள்ள காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்று அடுக்குகளில் கொண்ட வளைந்த வடிவமுள்ள முட்களை அதிகமாகக் கொண்ட ஏறு கொடி இனம் மிளகரணை. இதன் இலைகள் மிகவும் கசப்பாக இருக்கும். இலை, காய் வேர்ப்பட்டை மருத்துவக் குணம் உடையவை. பசியைத் தூண்டவும், முறைநோயை அகற்றவும், கோழையை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் சிறு காடுகளில் மலைப்பகுதிகளில் தானாகவே வளர்கின்றன.
ஆங்கிலப் பெயர்: Toddalia asiatica; camk; Rutaceae.
மருத்துவக் குணங்கள் :
மிளகரணைக்காய், வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து இடித்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வர பிடிப்பு, வீக்கம், வலி குணமாகும்.
மிளகரணை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி இரண்டு வேளை 250 மில்லியாகக் குடித்து வர உடல் பலம், பசி உண்டாக்கும். கபம், குளிர் காய்ச்சல் குணமாகும்.
மிளகரணையைக் கையளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து, இரண்டு வேளை குடித்துவர தொண்டைக் கரகரப்பு இருமல் குணமாகும்.
மிளகரணையைப் பொடியாக்கி நூறு கிராம் எடுத்து அத்துடன் சுக்கு, திப்பிலி, கடுக்காய்ப் பொடி வகைக்கு 15 கிராம் சேர்த்து ஒரு தேக்கரண்டியளவு 3 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், பித்தம் குணமாகும்.
மிளகரணை இலையைப் பச்சையாக மென்று தின்ன வயிற்று நோய் குணமாகும். மிளகரணை இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும்.
மிளகரணை வேர்ப்பட்டையை 100 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க முறைக் காய்ச்சல் குணமாகும். (வியர்வை உண்டாகும்) மிளகரணை வேர்ப்பட்டை 50 இடித்து சாராயத்தில் 7 நாள் ஊறவைத்து வடிகட்டி 10 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டு வர காய்ச்சல், கழிச்சல் குணமாகும்.
மிளகரணை வேர்ப்பட்டையையும், கமுகு ரோகிணியையும் சமஅளவாக நூறு கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகத் தொடர்ந்து குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும்.
மிளகரணை வேரை கைப்பிடியளவு எடுத்து 200 மில்லியாக விளக்கெண்ணெயுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவி வர விரைவில் குணமாகும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Herbs, medical, Medicine, Milagaranai, Milakaranai, Mooligai, Moolikai, Naturotherapy, Rutaceae, Toddalia asiatica | 2 Comments »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007
மூலிகை மூலை: மாசிக்காய் மகிமை!
விஜயராஜன்
நீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது. இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளி வருவதற்கு முன்னே எடுப்பது நல்லது. அதிலுள்ள பூச்சிகள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது? இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்.
ஆங்கிலத்தில்: Quercus incana, Roxp, Cupaliferac
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.
மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.
மாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.
மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.
மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.
மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.
மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.
மாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.
மாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்.
Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Herbs, Maasikai, Maasikkai, Masikai, Masikkai, Medicinal, Medicine, Medicnal, Mooligai, Moolikai, Natural, Naturotherapy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007
மூலிகை மூலை: பறங்கி விதையால் பறக்கும் நோய்கள்!
அகன்ற தடிமனான இலைகளைக் கொண்டது. பற்றுக் கம்பிகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் உருண்டையான பெரிய சதைப் பற்றுள்ள மஞ்சள் நிறக் கனிகளையும் உடைய படர் கொடி இனமாகும். விதையும், காயின் தோலுமே மருத்துவப் பயனுடையது. காய், பழம் உடல் நலத்துக்கு நல்லது அல்ல. விதை காமம் பெருக்கவும், உடல் வெப்பு நீக்கவும் பயன்படும். தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றன.
வேறு பெயர்கள்: சர்க்கரைப் பறங்கி, பூசணை, பூசணி, சர்க்கரைப் பூசணை, சர்க்கரைப் பறங்கி, பூழிய பலம்.
வகைகள்: கோடைப் பூசணை (குழிப் பறங்கி)
மருத்துவக் குணங்கள்: பறங்கி விதையை 30 கிராம் எடுத்து அதேயளவு சர்க்கரைச் சேர்த்து இரவில் உண்டு காலையில் விளக்கெண்ணெய் சிறிது குடிக்கப் பேதியாகி தட்டைப் புழு, மலப் புழுக்கள் வெளியேறும்.
பறங்கி விதையைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடி செய்து 2 சிட்டிகையளவு எடுத்து அத்துடன் சீரகப் பொடி 1/4 சிட்டிகை கலந்து சிறிது வெல்லத்துடன் சாப்பிட்டு வர இரத்த வாந்தி, இரத்தப் பித்தம் குணமாகும்.
பறங்கி விதை 30கிராம், வெள்ளரி விதை 15 கிராம், பூனைக் காலி விதை 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவரச் சிறுநீர்க் கோளாறுகள் குணமாகும்.
பறங்கிப் பட்டையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்துவர சொற்ப வாய்வு, சூளை கரப்பான், குட்டம், கிராந்தி குணமாகும்.
பறங்கி உட்சதையை விதை நீக்கி வேகவைத்து பிசைந்து புண்களின் மீது வைத்துக்கட்ட, துர்நாற்றம் நீங்கிச் சதை வளர்ச்சி உண்டாகும்.
பறங்கியின் உற்சதையை விதை நீக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்து லேகியமாக்கிக் கொடுக்க இரத்த வாந்தி, கோழையை அகற்றும்.
பறங்கியின் பழுத்த காயின் காம்பை எடுத்து நன்றாக உலர்த்தி நீரில் அரைத்துக் கொடுக்க நஞ்சுகள் நீங்கும்.
பறங்கியின் சதையை உலர்த்திச் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் சேர்த்து உண்ண வேனிற்காலத்தில் வெப்பத்தால் உண்டாகும் அழற்சி தணியும்.
பறங்கியின் விதை 10 கிராம் எடுத்து வறுத்து சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்குப் போகும் முன் தின்று மறுதினம் காலையில் ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர தட்டைப் புழு செத்துவிடும்.
பறங்கி விதையை 15 கிராம் அளவு எடுத்து 300 மில்லி நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வெள்ளை நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.
Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Fruits, Herbal, Herbs, Medicinal, Mooligai, Moolikai, Natural, Naturotherapy, Parangi, Parangikkai, Paranki, Poosani, Poosanikkai, Pumpkin, Pusani, Squash, Sweet Pumpkin, Vegetables | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007
மூலிகை மூலை: விஷ முறிவுக்கு இம்பூரல்
விஜயராஜன்
இதன் இலைகள் சற்று ஊசி போன்று நடுவில் தடித்து காணப்படும். வெள்ளை நிறப் பூக்கள் இருக்கும். இது அரை அடிவரை வளரக் கூடியது. தரையோடு தரையாகப் படரக் கூடிய பூண்டு ரகத்தைச் சேர்ந்தது. தமிழகம் எங்கும் ஈரப்பாங்கான இடங்களில் தானாகவே வளரக் கூடியது.
வேறு பெயர்கள்: இம்பூறல், இம்பூரா, இன்புளு, சிறுவேர்
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
இம்பூரல் இலையை உணவுடன் சமைத்து உண்டுவர நுரையீரலில் உள்ள கபத்தைப் போக்கும். பித்தக் கபத்தால் ஏற்படும் வாந்தி, இருமும்போது வருகின்ற ரத்த சளியை கட்டுப்படுத்தும்.
இம்பூரல் இலையும், அரிவாள்மனைப் பூண்டு இலையும் சம அளவாக எடுத்து அரைத்து வெட்டுப்பட்ட காயத்தில் வைத்துக் கட்ட இரத்த ஒழுக்கு நிற்கும். இம்பூரல் வேரிலுள்ள பட்டை 1 கிலோ, ஏலக்காய் 30 கிராம், மிளகு 30 கிராம், நிலப்பனைக் கிழங்கு 100 கிராம் எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பசும் பாலுடன் குடித்துவர காச நோய் குணமாகும். இம்பூரல் வேர் சிவப்பு சாயம் இறக்கப் பயன்படுகின்றது.
இம்பூரல் இலை, வேர், பூ வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி விஷம் தீண்டிய இடத்தில் வார்க்க விஷம் முறியும்.
இம்பூரல் வேரை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர இரத்த வாந்தி, சளியில் இரத்தம் வருவது குணமாகும்.
இம்பூரல் வேரைத் தட்டிப் பசுவின்பால் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு வெந்நீருடன் இரண்டு வேளை சாப்பிட விக்கல், வயிற்று இரைச்சல், பித்தம் நீங்கும்.
இம்பூரல் இலையைப் பொடி செய்து 2 பங்கு அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட இரைப்பு, ஈளை குணமாகும். இம்பூரல் வேர் 10 கிராம் அதிமதுரம் 5 கிராம், எடுத்து இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லியளவாக 4 வேளை குடித்து வர இருமல், இரைப்பு, இருமல், சளி குணமாகும்.
இம்பூரல் இலைச்சாறு 1 கரண்டியளவுடன் 1 டம்ளர் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர மார்பு எரிச்சல் நீங்கும். இம்பூரல் இலையும் வேரும் வகைக்கு 100 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி நஞ்சுகடிகளினால் உண்டான புண்களைக் கழுவலாம். இந்த குடிநீர் 100 மில்லியளவு குடித்து வர இருமல், இரைப்பு, இளைப்பு நீங்கும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Embooral, Embural, Herbs, Imbooral, Imbural, Medicine, Mooligai, Moolikai, Natural, Nature | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007
மூலிகை மூலை: திப்பிலி
விஜயராஜன்
திப்பிலி குறுகிய நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனமாகும். இதன் காய் முள் வடிவத்தில் நீண்டு இருக்கும். இதுவே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செüண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து.
வகைகள் : ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலி.
ஆங்கிலத்தில் : Piperlongum, linn, Piperaceae
இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.
திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.
திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.
திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடி 50 கிராம், கடுக்காய்ப் பொடி 25 கிராம் எடுத்துத் தேனில் கலந்து 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.
திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvetha, Cough, cure, Dhippili, Dhippily, Herbs, Medicine, Mooligai, Moolikai, Nature, Syrup, Thippili, Thippily | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007
மூலிகை மூலை: தோல்-வியாதிகளைத் துரத்தும் மூலிகை!
விஜயராஜன்
நீளமான சதுர வடிவில் சிறகுக் கூட்டு இலைகளையும் சரம்சரமாய் தொங்கும் மஞ்சள் நிறத்தில் பளிச்சிடும் பூங்கொத்துளையும் கொண்டது கொன்றை. நீண்ட உருளை வடிவத்தில் காய்களையும் உடைய இலையுதிர் மர இனமாகும். பட்டை, பூ, காய் வேர் மருத்துவக் குணம் உடையது. நோயை அகற்றி உடலைத் தேற்றி காய்ச்சலைத் தணிக்கும். வாந்தியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கி உடலிலுள்ள தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். நுண்புழுக்களைக் கொல்லும். மலச்சிக்கலைப் போக்கும். காயிலுள்ள சதை மலச்சிக்கலைப் போக்கும் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாகத் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : கொன்றை, கொண்ணை, பெருங்கொன்றை, கிருதாமல், தாமம், இதழி, கடுக்கை, ஆக்குவதம்.
வகைகள்: கருங்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, நரிக்கொன்றை, புலிநகக் கொன்றை, மந்தாரக்கொன்றை, முட்கொன்றை, செம்மயிர்க்கொன்றை, பொன்மயிர்க்கொன்றை.
ஆங்கிலப் பெயர் : Cassie fistula, linn, caesalpiriaceae
மருத்துவக் குணங்கள் : சரக்கொன்றைக் கொழுந்தை கைப்பிடியளவு எடுத்து அவித்துப் பிழிந்த சாறு 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க வயிற்றில் உள்ள நுண்புழுக்கள், பூச்சிகள் வெளியேறும்.
சரக்கொன்றை பூவை எலுமிச்சப்பழச் சாறுவிட்டு அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் வைத்து இருந்து குளிக்கச் சொறி, கரப்பான் தேமல் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கிக் குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.
சரக்கொன்றைப் பூவை வதக்கித் துவையலாக்கி உணவுடன் உண்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி நோய் அகலும். நீடித்துக் குடித்து வர மதுமேகம் குணமாகும்.
சரக்கொன்றை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் திரிகடுகுச் சூரணம் 5 கிராம் சேர்த்து 2 வேளை 100 மில்லியளவு குடித்து வரக் காய்ச்சல் தணியும். இதய நோய் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர மேக நோய்ப் புண்கள், கணுச்சூலை குணமாகும். (ஒருமுறை மலம் கழியுமாறு மருந்து அளவைத் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும்.)
சரக்கொன்றை காயில் மேலுள்ள ஓட்டைப் பொடியாக்கி, குங்குமப்பூ சர்க்கரை சமஅளவாக எடுத்து பன்னீரில் அரைத்துப் பெரிய பட்டாணி அளவுகளாக மாத்திரைகளை உருட்டி உலர்த்தி, மகப்பேறின்போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் பத்து நிமிடத்திற்கு ஒரு மாத்திரை வீதம் கொடுத்து வர இறந்த குழந்தையை வெளியே தள்ளிவிடும்.
சரக்கொன்றை காயிலுள்ள சதைப்புளியை உணவுக்குப் பயன்படுத்துகின்ற புளியுடன் சேர்த்து உணவு செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.
சரக்கொன்றை சமூலத்தை பாலில் அரைத்து எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர சொறி, கரப்பான், தேமல் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் அரைத்து எலுமிச்சப்பழம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.
சரக்கொன்றை இலையைத் துவையல் செய்து சாப்பிட மலங்கழியும்.
சரக்கொன்றை இலையை அரைத்து தடவி வர படர்தாமரை, அழுக்குத் தேமல் போன்ற தோல் வியாதிகள் மறையும்.
சரக்கொன்றை பூவை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவை பாலுடன் கலந்து காய்ச்சி குடிக்க உள்ளுறுப்புகளை வன்மைப்படுத்தும். மெலிந்தோர்க்கும் தக்க பலன் தரும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Herb, Herbs, Konrai, Medicine, Mooligai, Moolikai, Nammalvar, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Natural, Naturotherapy, PAK, Therapy, Tigerclaw, Tigerclaw tree, Yoga | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007
மூலிகை மூலை: குடல் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி
விஜயராஜன்
கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப் பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
வேறு பெயர்கள்:
மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப் பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.
ஆங்கிலத்தில்: Solanum Nigrum.
மருத்துவக் குணங்கள் :
இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.
மணத்தக்காளி இலைச் சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.
மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.
மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.
———————————————————————————————-
நிலவேம்பு
கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.
ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees
மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.
நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Doc, Doctor, Health, Healthcare, Herbs, Manathakkaali, Manathakkali, medical, Medicine, Mooligai, Moolikai, Naturotherapy, Neem, Nilavembu, Nilavempu | 23 Comments »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
மூலிகை மூலை: பொடுகு நீங்க… பொடுதலை!
விஜயராஜன்
பற்களுடன் ஆன நான்கு, நான்கு இலை அடுக்குகளையும், கதிரான மிகச் சிறிய வெள்ளை நிறப் பூக்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி இனமாகும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், கோழையை அகற்றவும் உடலிலுள்ள தாதுவை வலுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் ஈரமான இடங்களில் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள்:
பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடாரசோதித்தா.
ஆங்கிலத்தில்: Lippianodiflora, Mich, Verbeneceae.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:
பொடுதலை இலையைக் கைப்பிடியளவு எடுத்து அத்துடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு கூட்டி நெய்யில் வதக்கி உண்டால் சீதபேதி, வயிற்று இரணம், 3 நாளில் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர ரண குன்மம் குணமாகும்.
பொடுதலை இலையுடன் சீரகம் அதேயளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் அல்லது சங்களவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வெட்டைச் சூடு, வெள்ளை குணமாகும்.
பொடுதலை இலையைக் கைப்பிடியளவு எடுத்து பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து பகல் உணவுடன் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம், இரத்த மூலம், பெüத்திரம் குணமாகும்.
கைப்பிடியளவு பொடுதலை இலையுடன் சிறிது இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக்கிச் சுடு சோற்றில் சிறிது நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர மார்புச் சளி, சுவாசக் காசம் குணமாகும்.
பொடுதலை சமூலச் சாற்றில் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இரண்டு முறை தலைமுழுகி வர, தலையில் வருகின்ற தோல் நோய், பொடுகு குணமாகும்.
பொடுதலைக் காயும், மஞ்சளும் சம அளவாக எடுத்து அரைத்து புண்களின் மீது வைத்துக் கட்ட 6 நாளில் குணமாகும்.
பொடுதலையை வதக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க, மாந்தம், இருமல், சூளை, வெள்ளை குணமாகும். பொடுதலையை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி, ஒரு சங்களவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல் நிற்கும்.
பொடுதலை இலையுடன் சீரகம் சிறிது சேர்த்து அரைத்து எலுமிச்சம் பழ அளவு காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை குணமாகும். பொடுதலை இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர உள் மூலம் தணியும். இந்த இலையை அரைத்துக் கட்டி, கொப்புளம் மீது பற்றுப் போட்டுவர, பழுத்து உடையும். மேலும் புண், அக்கி புண், நெறிக் கட்டி, வீக்கம் இவைகள் மீது பூசி வர குணமாகும். பொடுதலைக் காயை பழைய அரிசியுடன் சேர்த்து உலையிலிட்டு முதற் கொதி வந்தவுடன் வெறும் அரிசியை உலர்த்தி நெய்யாக்கி, அதை மாந்தமுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பொடுதலை இலை, காய் இவற்றை சாறு பிழிந்து அதனுடன் மிளகு, எண்ணெய் கூட்டி வெயிலில் வைத்துச் சாறு சுண்டி எண்ணெய் மட்டும் தங்கிய பின் அதை தலையில் தேய்த்து தலை முழுகி வர, தலையில் காணும் பொடுகு நீங்கும்.
Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Dandruff, Herbs, Mooligai, Moolikai, Naturotherapy, Poduku, Poduthalai, Potuku, Potuthalai | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007
மூலிகை மூலை: கண் நோய்க்குப் பொன்னாங்கண்ணி
விஜயராஜன்
எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது. நோயைத் தணித்து உடலைத் தேற்றவும் பசியைத் தூண்டவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானாகவே வளர்கின்றது.
பொன்னாங்காணி என்பது பொன் ஆம் காண் நீ. இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் பெறுகின்றது.
வேறு பெயர்கள்: ககதிராசு, வாதுவர்ணா, சுகப்பிரயாதித்தோசணா, சீதளச் சக்தி, தாரேகசித்தி, கண்ணுக்கு இனியாள், கடுப்பகலே, நிசோத்திரம், விண்ணுக்குள் மூர்த்தி, பொன்னாங்கண்ணி, கொடுப்பை, சீதை, பொன்னி.
ஆங்கிலத்தில்: Alternathere sessilis (க); R.Br; ex DC; Amrantaceae.
இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:
பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.
பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும். கண் ஒளி பெறும்.
பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
பொன்னாங்காணி சமூலத்தை அதிகாலையில் கைப்பிடியளவு மாதக் கணக்கில் சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி, கண் குளிர்ச்சி அடையும்.
பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.
இலையின் சாறு ஒரு லிட்டர், எலுமிச்சை பழச்சாறு 1/2 லிட்டர், பசு நெய் 1 கிலோ, ஆவின்பால் 1 லிட்டர் இவற்றை ஒன்றாகக் கலந்து 50 கிராம் அதிமதுரத்தைப் பால்விட்டு அரைத்துப் போட்டு பதமாக சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி அத்துடன் சாதிக்காய் 5 கிராம் சாதிபத்திரி 5 கிராம், சீனா கற்கண்டு 5 கிராம் கோரோசணை 5 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தி அதில் 5 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டுவர மூலச்சூடு வெப்ப நோய், கைகால் எரிச்சல், வாய் நாற்றம், வெள்ளை, வயிற்றெரிச்சல் நீங்கும்.
பொன்னாங்காணி சாறு 1 லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 2 லிட்டர், பசுவின் பால் 1 லிட்டர் அதிமதுரத்தை 50 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து சேர்த்து மெழுகுபதமாக சிறு தீயிலிட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்துவர 96 வகையான கண்நோய்கள், அழல் நோய் குணமாகும்.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Diet, Eye, Eyesight, Food, Herbs, Keerai, Mooligai, Moolikai, Myopia, Naturotherapy, Ponnanganni, Ponnankanni, Ponni, Spinach, Vision | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 31, 2007
மூலிகை மூலை: மாதுளையின் மகிமை!
விஜயராஜன்
நீண்ட சின்னதான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் பழத்தினுள் சாறுள்ள விதைகளையும் உடைய முத்துக்களையும் உடைய முள் உள்ள செடி இனமாகும். ஆனால் இது செடி வகையிலும் சேராமல், மர வகையிலும் சேராமல் நடுத்தர வகையாக வளரக் கூடியது. ஐந்து அடி வரை வளர்கின்றது. இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவக் குணம் உடையவை.
நோயை நீக்கவும், உடலைத் தேற்றவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகின்றது. பழம் மிகவும் குளிர்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலும், தமிழகம் எங்கும் பழத்திற்காகவே தோட்டங்கள் வளர்க்கப்படுகின்றன.
வேறு பெயர்கள்: பல சாடவம், பலபூரகம்
ஆங்கிலத்தில் : Punica granetum, Linn; Punicaceze
மருத்துவக் குணங்கள்: மாதுளை பூச்சாறு பதினைந்து மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டு கலந்து இருவேளை தொடர்ந்து குடித்து வர வாந்தி, மயக்கம், உடல் சூடு, மூலக் கடுப்பு, அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி, இரத்த மூலம் குணமாகும்.
மாதுளம் பிஞ்சு, கொழுந்து, நாவல் மரப்பட்டை அல்லது நாவல் கொழுந்து வகைக்கு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து சங்களவு 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவு இருந்த இடம் தெரியாமல் குணமாகும். இதைத் தொடர்ந்து குடித்து வர, சீதபேதி, இரத்த மூலம், மது மேகம், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் வகைக்கு 10 மில்லியளவு வீதம் எடுத்துக் கலந்து 3 வேளையாகக் குடித்து வர மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.
மாதுளம் பூவை கைப்பிடியளவு எடுத்து அத்துடன் கசகசாவை கொஞ்சம் எடுத்து வறுத்துச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அத்துடன் பொடுதலை பூண்டுக்காய் 5-ம், சிறிது நன்னாரி வேர் இரண்டையும் அரைத்து பாக்களவு எடுத்து நன்கு புளித்த மோரில் கலந்து முதலில் உள்ள மாதுளம் பூ விழுதையும் சேர்த்துக் கலக்கி தொடர்ந்து 21 நாட்கள் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்துவர நீரிழிவு, சொருக்கு மூத்திரம் குணம் அடையும்.
மாதுளம் பூ உலர்ந்தது 10 கிராம், பட்டை 20 கிராம், 2 டம்ளர் நீரில் போட்டு சிறிது படிகாரம் சேர்த்துக் கொதிக்க வைத்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், தொண்டை ரணம், விழுங்க முடியாத வலி குணமாகும்.
மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட உடனே பேதி நிற்கும். மாதுளம் பழச்சாற்றை புழு வெட்டு உள்ள இடத்தில் சூடேறத் தேய்க்க 3 நாளில் அரிப்பு நிற்கும். நாளடைவில் அந்த இடத்தில் முடியும் முளைக்கும்.
மாதுளம் பழத்தோலை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து அதேயளவு சுக்கு, மிளகு, சீரகம் பொடி செய்து கலந்து சிறிது நெய் அல்லது வெண்ணையோடு சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
மாதுளம் வேர்ப்பட்டை, செடிப்பட்டை விதை சம அளவாக எடுத்து இடித்து பொடி செய்து 3 கிராம் எடுத்து 2 வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர கர்ப்பாயாச நோய் தீர்ந்து பிள்ளைப் பேறு உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் சிறிது கற்கண்டு கலந்து குடித்து வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும். மாதுளம் பழச்சாறு 100 மில்லியுடன் 20 மில்லி இஞ்சிச்சாறு, 30 மில்லி தேன் கலந்து 2 வேளையாக குடித்து வர ஈளை, இருமல் குணமாகும். மாதுளம் வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர மேகக் கடுப்பு நீங்கும்.
Posted in Antioxidants, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Health, Healthcare, Healthy, healthy snacks, Herbs, Madhulai, Madulai, Mathulai, Mooligai, Moolikai, Naturotherapy, Pomegranate, Punica granetum, Punicaceze | 1 Comment »