மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் பார் உரிமையாளர்கள் அவதி
சென்னை, மே 16: மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதனால் பாரை மூடிவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு (2005-2006) டெண்டர் காலத்தில், மதுக்கடையின் மொத்த விற்பனைத் தொகையிலிருந்து, கடையைப் பொருத்து 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகபட்ச சதவீதம் எடுப்பவர்களுக்கு மட்டும் டெண்டர் உரிமம் கொடுக்கப்படும்.
அவர்கள் மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து கூடுதலாகவோ, குறைவாகவோ ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உரிமத் தொகையை செலுத்திவந்தனர்.
ஆனால் 2006 டிசம்பர் மாதம் முதல், கடந்த ஆண்டில் எந்த மாதம் அதிகமான விற்பனை ஆகியிருந்ததோ, அதனையே குறைந்தபட்ச மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் டாஸ்மாக் கடையில் விற்பனை கூடுதலாகும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாதக் கட்டணத்தைவிட கூடுதலாகவும், விற்பனை குறையும்போது நிர்ணயிக்கப்பட்ட தொகையும் மாத உரிமத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.
எந்தவொரு வியாபாரமும் எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதில்லை. வியாபாரம் குறைந்தால் கட்டணத் தொகையைக் குறைக்காமலும், வியாபாரம் அதிகரித்தால் மட்டும் கட்டணத் தொகையை கூடுதலாகக் கட்டச் சொல்வதும் பார் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
இதோடு அரசு விடுமுறை நாள்களுக்கும் சேர்த்துப் பணம் கட்ட வேண்டியுள்ளது. கிடங்கிலிருந்து கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்துவருவதற்கு மெத்தனப் போக்கு காட்டுவதால், பார் தின்பண்ட விற்பனை நேரடியாகப் பாதிக்கப்படுகிறது.
மேலும் 30 சதவீதத்தினர் பாரில் அருந்தாமல், மது பாட்டில்களை பார்சல் வாங்கிச் சென்றுவிடுகின்றனர். ஆனால் இந்த 30 சதவீதத்தினருக்கும் சேர்த்தே மாதக் கட்டணத்தை அரசுக்கு பார் உரிமையாளர் செலுத்தவேண்டி உள்ளது.
மாதக் கட்டணத்தை குறைக்கக் கோரி உயர் அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. தனியார் பாரை மூடவைத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் பார் நடத்தி லாபம் அடைவதிலேயே அதிகாரிகள் குறிக்கோளாக உள்ளனர் என்றார் சென்னை எழும்பூர் தனியார் பார் உரிமையாளர் குமார்.
தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து, பாருக்கான மாத உரிமத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கவேண்டும் எனவும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.