கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
![]() |
![]() |
இலங்கை ரயில் |
நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி
![]() |
![]() |
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை |
இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.
கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு
![]() |
![]() |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ |
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
இந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.
அத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.
இதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.
இதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை
![]() |
![]() |
அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை |
மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.