தீவன ஊழல் வழக்கு: மன்னிப்பு கேட்டார் சிபிஐ இயக்குநர்ராஞ்சி, ஜன. 12: பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், நீதிமன்ற அனுமதி பெறாமல், மூத்த புலனாய்வு அதிகாரியை மாற்ற முயன்றதற்காக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர் விஜய் சங்கர், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, தலைமை நீதிபதி எம்.கே.விநாயகம் தலைமையிலான உயர் நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில், இந்திய சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி உடன் வர, சிபிஐ இயக்குநர் விஜய் சங்கர் வியாழக்கிழமை நேரடியாக ஆஜரானார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதளவும் இல்லை. நடந்தவற்றுக்காக என் சார்பிலும், நான் தலைமை வகிக்கிற துறை சார்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.
தில்லியில் சிபிஐ போலீஸ் கண்காணிப்பாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதால், அந்த இடங்களுக்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க அல்லது இடமாறுதல் செய்வதற்கான வாய்ப்புகளைத்தான் நான் பரிசீலித்தேன் என்று விஜய் சங்கர் அதில் கூறியிருந்தார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.சி.செüத்ரிக்கு இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சொந்தக் காரணங்களின் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெற செüத்ரி முன்வந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 17-ம் தேதி சிபிஐ இயக்குநர் விஜய் சங்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் அந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று அந்த நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் தலையிட்டதன் பேரில், செüத்ரிக்கு அளிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.