கோரஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் டாடா வெற்றி
![]() |
![]() |
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா |
ஐரோப்பாவின் மிகப் பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் என்கிற நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான டாடா எஃகு நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.
பிரிட்டிஷ் எஃகு நிறுவனம் மற்றும் ஹீகுவென்ஸ் என்ற பிரிட்டிஷ்-டச்சு நிறுவனங்கள் இணைந்ததினால் உருவாக்கப்பட்ட கோரஸ் நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனத்திற்கும், பிரேசில் நாடின் சி எஸ் என் நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது.
கோரஸ் நிறுவனத்தை 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வாங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. உலக அளவில் ஒப்பிடுகையில், டாடா எஃகு நிறுவனம் ஒரு சிறிய எஃகு தயாரிக்கும் நிறுவனம்தான். இருந்த போதும் இதற்கு பெரிய டாடா வர்த்தக நிறுவனக் கூட்டமைப்பின் பின்புலம் இருக்கிறது.
இந்தியாவின் நான்கு மிகப் பெரிய நிறுவனங்களில் டாடாவும் ஒன்று, தவிர இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு வர்த்தகப் பெயரும் கூட.
எங்கும் டாடா என்பதே பேச்சு
உலக அளவிலான எஃகு வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாக ஆங்கிலோ டச்சு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் இந்தியத் தொழில்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது டாடா நிறுவனம்.
வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிய நிகழ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஜெர்மனி மருந்து நிறுவனம் பீட்டாபார்ம், பெல்ஜிய நிறுவனம் ஈவ்ஹோல்டிங் ஆகியவை இந்தியத் தொழிலதிபர்களால் முன்பு வாங்கப்பட்டன என்றாலும் அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 50 கோடி அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், கோரஸ் நிறுவனப் பங்குகளை மொத்தம் 1130 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்திய நிறுவனம் ஒன்று வாங்குவது இதுவே முதல்முறை. இதனால் டாடா நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக எஃகு வர்த்தகத்தில் 56-வது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் (இதன் ஆண்டு உற்பத்தி 53 லட்சம் டன்), கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 5வது இடத்துக்கு வந்துள்ளது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய எஃகு நிறுவனமாக உருவெடுப்பதுடன், கோரஸ் நிறுவனத்தின் அதிநுட்ப உருக்கு தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்பனையை அதிகரிப்பதுடன், மூலப்பொருள் வாங்குதல், சந்தைப்படுத்துதல் ஆகிய நடைமுறைச் செலவுகள் டாடா நிறுவனத்துக்குப் பெருமளவு குறைந்துவிடுகின்றன.
உலக எஃகு வர்த்தகத்தில் சென்ற ஆண்டு 9-வது இடத்தில் இருந்த கோரஸ் நிறுவனம் (ஆண்டு உற்பத்தி 182 லட்சம் டன்) தன்னை டாடா நிறுவனத்துக்கு விற்றுக்கொள்வதன் மூலம் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியச் சந்தையில் வெகு எளிதாக நுழைய முடியும்.
இந்த நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் டாடா நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டாலும், சில தவிர்க்க முடியாத சுமைகளும் உண்டு. கோரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 47,300 தொழிலாளர்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கோரஸ் ஓய்வூதிய நிதியம் மூலம் 1.65 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த ஓய்வூதிய நிதி நல்ல நிலையில் இருப்பதால் இப்போதைக்கு டாடாவுக்கு பிரச்சினை கிடையாது.
கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி, உள்நாட்டுச் சந்தையில் டாடா நிறுவனத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது.
இந்தியச் சந்தையில் டாடா குழுமத்தின் 96 நிறுவனங்கள் அனைத்து வகையான நுகர்பொருள்களையும் விற்பனை செய்து வருகின்றன. இனி இந்தப் பொருள்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும். விற்பனை அதிகரிக்கும்.
மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த விலை கார் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் பிரச்சினையில் டாடா நிறுவனத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. டாடா நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்கும்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் எதையெல்லாம் புறக்கணிப்பது? டாடா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களின் பட்டியல் விரிவானது. தேயிலை, கைக்கடிகாரம், அணிகலன்கள், கார், பேருந்து, கணிப்பொறித் தொழில்நுட்பம், செல்போன், மருந்து உற்பத்தி என நீண்டுகொண்டிருந்த பட்டியலில் புறக்கணிக்கக் கூடிய பொருள்கள்-தங்களுக்குத் தேவை இல்லாதவை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.
டாடா நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் மதிப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம்.
டாடா நிறுவன புகழ் கிரீடத்தில் வேறு சில முத்துகளும் உண்டு. தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது, தொழிலாளர் சேம நலநிதி ஆகியன சட்ட வடிவம் பெறுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே அவற்றை 1920ல் நடைமுறைப்படுத்திய நிறுவனம் டாடா.