ஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை!
என். ரமேஷ்
1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.
அந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’
நகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.
ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.
அணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
ஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.
எனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,
- அமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.
- ரஷியா – 16,000,
- பிரிட்டன் – 200,
- பிரான்ஸ் – 350,
- சீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத
- இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.
இவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.
1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
கதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.
ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.
அணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.
ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.
——————————————————————————————————————-
போர் இன்னும் முடியவில்லை!
உதயை மு. வீரையன்
புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?…”
அதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”
இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்?
அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.
ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.
அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.
ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.
இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.
நாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.
விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.
ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.
அதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
கதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.
இவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
அணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.
அணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?
“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”
போர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.
வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை!
(கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்).