விழுப்புரத்தில் இன்று மிஸ் கூவாகம் போட்டி
விழுப்புரம், மே 1: அரவானிகளில் ஒருவரை மிஸ் கூவாகம் 2007 ஆக தேர்ந்தெடுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவநீத் செவ்வாய்க்கிழமை (மே 1) தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட எஸ்.பி. பெரியய்யா, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்படும் அரவானிக்கு பத்திரிகையாளர் கவிதா கணேஷ் பரிசு வழங்குகிறார்.
அரவானிகளுக்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அரவானிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
================================================
அரவானி ராணியாக கோவை பத்மினி தேர்வு
விழுப்புரம், மே 1: விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரவானி ராணியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவை பத்மினி, அரவானி ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூவாகம் விழாவில் மிஸ் கூவாகமாக அரவானி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியை தாய் திட்டமும், ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தின.
கோவை பத்மினி அரவானி ராணியாகவும், இப்போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக் பிரியா, சுபிக்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தினரும், விழுப்புரம் நகராட்சித் தலைவர் இரா. ஜனகராஜும் பரிசு வழங்கினர்.
அரவானிகள் ஊர்வலம்
அரவானிகளுக்காக பல்வேறு சலுகைகளை அண்மையில் அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து அரவானிகள் ஊர்வலம் நடத்தினர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே தாய் திட்டத்தின் தலைவர் லட்சுமிபாய் துவக்கி வைத்த ஊர்வலத்தில் அரவானிகள் வண்ண உடையணிந்து கைகளில் பலூன்களுடன் கலந்து கொண்டனர். பல்வேறு இசைக் கருவிகளை இசைத்தபடி வந்த அரவானிகளின் திறமைகளை பொதுமக்கள் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனத் தலைவர் எ.பக்தவத்சலம் செய்திருந்தார்.
——————————————————————————
அரவானிகளை கண்ணியத்துடன் நடத்துங்கள்: அமைச்சர் ப. சிதம்பரம்
சென்னையில் அரவானிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்து முதல் பாலிசியை சனிக்கிழமை வழங்குகிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். உடன் வி.எச்.எஸ். கௌரவச் செயலர் என்.எஸ். முரளி.
சென்னை, ஜூலை 29: அரவானிகள் நாட்டின் குழந்தைகள். அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உருக்கத்துடன் கூறினார்.
அரவானிகள்-நலிவடைந்த பெண்களுக்கான ஆரோக்கிய காப்பீட்டு திட்டம், தாய் விழுதுகள் கூட்டமைப்பின் தொடக்க விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
திட்டங்களை தொடங்கி வைத்து, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியது:
சமுதாயத்தில் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்வதில் யாருக்கும் தயக்கம் இருக்கக் கூடாது. வறுமை, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு காரணங்களால் அரவானிகளாக உருமாறுகின்றனர்.
உடலின் இயல்புகள், மனத்தின் வேட்கைகள், விருப்பு வெறுப்புகள் இவற்றை முன்பே கணித்து வரையறுக்க முடியாது. படைப்பின் ஆழ்மனத்தில் உள்ளதையும் கண்டுபிடித்து விடமுடியாது.
நாட்டின் குழந்தைகள்: அரவாணிகள் இந்த நாட்டின் குழந்தைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரவானிகளை மதிப்புமிக்க குடிமக்களாக கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
சமுதாயத்தின் மாறுபட்ட கண்ணோட்டம் காரணமாக, அவர்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கி, தலைநிமிர்ந்து நடப்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
இந்தியப் பிரஜைகளில் அரவானிகளும் அடங்குவர் என்பதை நிலைநிறுத்த வழிவகை செய்ய வேண்டும். அரவானிகள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து விடக்கூடாது. சமுதாயம் ஒதுக்கினாலும் அரவானிகள் ஒதுங்கி விடக் கூடாது என்றார் ப.சிதம்பரம்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர்: வி.கே.சுப்புராஜ்: எச்.ஐ.வி – எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்காக, ரூ. 100 கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டன.
2001-ம் ஆண்டு கணக்கின் படி, 1.13 சதவீத மக்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது. இன்றைக்கு இதன் அளவு அரை சதவீதமாகக் குறைந்துள்ளது.
நோயைக் கண்டறிய 280 சோதனை மையங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 500 சோதனை மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 260 இடங்களில் நோயைக் கண்டறியும் சோதனை மையங்கள் உள்ளன.
ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து அளிக்கும் சிகிச்சை மையங்கள் 19 உள்ளன. குழந்தைகள் உட்பட 21,000 பேருக்கு மேல் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் செயல்பட்டு வரும் மையத்தில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் – எச்.ஐ.வி. நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு 18 லட்சம் மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், 55 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
அரவானிகள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கான காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் ரூ. 281 ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
சேலத்தில் இத்திட்டம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை, குஜராத்தைச் சேர்ந்த “விமோ சேவா’ அமைப்பிடம் அளிக்கப்படும்.
அந்த அமைப்பு ஐசிஐசிஐ – லம்பார்டு வங்கி மூலமாக காப்பீட்டை அளிக்கும்.