சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்
திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.
மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.
“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.
முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை” என்றார்.
அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).
மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.
சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதன்கிழமை இரவு கூட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
முதலில் மாவட்ட அளவிலும் பிறகு வட்ட அளவிலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட முடிவெடுத்தனர்.