பாழாகலாமா பொதுக் கட்டடங்கள்!
யோ. கில்பட் அந்தோனி
அனைத்துத் துறையிலுமுள்ள பொதுக் கட்டடங்கள் பெரும்பாலும் தகுந்த பராமரிப்பு இல்லாமல் சீர்கெட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சி! இதனைத் தகுந்த கவனம் செலுத்தி அவ்வப்போது பழுது பார்ப்பதில்லை. இதனால் சிறிது காலத்திற்குள்ளாகவே இவை மிகவும் பழுதடைந்து சரி செய்ய முடியாத நிலையை அடைகின்றன. இறுதியாக இந்தக் கட்டடங்கள் குறுகிய காலத்திலேயே இடித்துத் தள்ளப்பட வேண்டிய நிலைக்குச் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதுடன் நாட்டின் செல்வங்கள் அழிவுப் பாதைக்குச் செல்கின்றன. இதனைத் தடுப்பது நமது கடமையாகும். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. தகுந்த அணுகுமுறை: தொழில் நுட்ப வல்லுநர்களும், அதிகாரிகளும் பராமரிப்பு வேலைகளை எளிதான முறையில் மேற்கொள்ள முதலில் அதனை வகைப்படுத்த வேண்டும்.
அ) சிறிய பழுதுகள், ஆனால் குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் சிதைவு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
இத்தகைய வேலைகளைத் தள்ளிப்போட முடியாது. ஒரு குறிப்பிட்ட வேலையைத் தொடங்குவதற்கு முன் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமைப் பொறுப்பு அலுவலரிடம் கலந்து ஆலோசித்து சீர் செய்யப்பட வேண்டிய இடங்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கணினி மூலம் அதனைச் சிறு குறிப்புகளுடன் பதிவு செய்ய வேண்டும். பணிக்கு ஆகும் செலவுகளை உத்தேச அடிப்படையிலும் சரியான அளவுகளைக் கொண்டும் மதிப்பீடு செய்யலாம்.
இந்தப் பணிகளைச் செய்ய இளம் வயது பட்டதாரி மற்றும் பட்டயச்சான்று பொறியாளர்களை ஒப்பந்தக்காரர்களாகத் தேர்வு செய்யலாம். இவர்களுக்குத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான செலவுகளுக்குக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அதிகாரி அங்கீகாரம் கொடுக்கலாம். பழுது வேலைகளுக்கு, சாதாரண வேலைகளுக்கு அளிக்கப்படும் பணத்தைக் காட்டிலும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். பொதுவாக ஒப்பந்தக்காரர்களும், பொறியாளர்களும் சிறிய வேலைகள் செய்வதற்கு விருப்பப்படுவதில்லை. இதனால் சிறிய பணிகள் பெரிதாகும் வரை காத்திருக்க முனைவார்கள். இந்த வகையான அணுகுமுறை கட்டடத்தைச் சீர்குலைத்துச் சிதைத்து விடும்.
ஆ) பொதுவாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கட்டடங்களுக்கு வெள்ளையடிப்பது வழக்கம். இதைச் செய்யும்போது சிறிய பழுதுகளைச் சரிசெய்வது மிகவும் சுலபம். இந்த வழக்கத்தைச் சரிவரக் கடைப்பிடித்தால் கட்டடத்தை நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம். இந்தப் பணிகளுக்குக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அதிகாரி அங்கீகாரம் கொடுக்கலாம்.
இ) பெரிய அளவு பழுதுகள் – முழு அளவில் செய்யும் வேலைகள் பெரிதாக இருக்க வாய்ப்புள்ளவை. இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும். இதனால் பணிகள் தாமதப்படலாம். ஆகவே சிறிய மற்றும் அவசர வேலைகளையும் வழக்கமான வெள்ளையடிக்கும் வேலைகளையும் தனித்தனியே உரிய நேரத்தில் செய்வது அவசியம். பெரிய அளவு பழுதுகளுக்கு விரிவான மதிப்பீடுகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள் தேவைப்படும். இதன் செலவு மதிப்பீடுகளுக்கு உரிய உயர் அதிகாரிகள் அங்கீகாரம் கொடுக்கலாம்.
2. கட்டடப் பொறுப்பு அதிகாரி: ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒருவர் பொறுப்பு அதிகாரியாக இருக்க வேண்டும். இவர் இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தும் தலைமை அலுவலராக இருப்பது நல்லது. இவர் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கட்டடத்தில் காணப்படும் குறைகளை, சீர்கேடுகளைப் பதிவு செய்து, அதன் நகலை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதில் புகைப்படங்கள் இணைப்பது அவசியம். பணிகள் நடக்கும் காலங்களில் பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துத் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
3. நிதி ஒதுக்கீடு: மேற்கூறப்பட்ட மூன்று வகைப் பராமரிப்புப் பணிகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதல் இருவகைப் பணிகளுக்கு எந்தவித காலதாமதமும் இல்லாமல் உடனடியாக நிதி வழங்கலாம். பெருமளவில் தேவைப்படும் பணிகளுக்கு நிதிநிலையைப் பொறுத்து நிதி வழங்கப்படலாம்.
4. ஆராய்ச்சித்துறை: மக்கள், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்குத் தகுந்த முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டால் ஒவ்வொரு பணியிலும் மிகுந்த பலனை வெளிக்கொணர இயலும். மிகச் சாதாரண வேலைகளில்கூட நல்ல தொழில் நுணுக்கங்கள் ஆராய்ச்சிகள் மூலம் அவ்வப்போது புதிது புதிதாக வெளியிடப்படுவதுண்டு. அதனை நாம் செயல்படுத்தி வெற்றி காணலாம். ஆராய்ச்சி மையங்களில் பொறியாளர்களுக்கும் தொழில் நுட்பப் பணியாளர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கலாம்.
5. சுற்றுப்புறத்தூய்மை: கட்டடத்தின் பலமும் நலமும் அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொறுத்து அமையும். ஆனால் ஒரு பொதுக்கட்டடத்தைப் பார்க்கும்போது அதில் காணப்படும் குப்பைகள், ஒட்டடைகள், அழுக்கடைந்த சுவர்கள் மற்றும் தரைகள், நாற்றமெடுக்கும் கழிப்பறைகள், உடைந்த குழாய்கள், உடைந்த நாற்காலி – மேசைகள், கழிவு நீர் தங்குமிடங்கள் ஆகியவை நமது மனத்தைச் சம்மட்டி கொண்டு தாக்குவதுபோல் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய ஒரு வருடத்தில் மூன்று நாள்கள் தனித்தனியாக தூய்மைப் பணிக்கு ஒதுக்கலாம்.
அ. மொட்டை மாடியைத் தூய்மைப்படுத்தும் நாள்: மொட்டை மாடி தூய்மை நாளன்று அலுவலர்கள், பணியாளர்களின் துணை கொண்டு மொட்டைமாடி, அதில் உள்ள நீர்த்தொட்டி, சன்னல் வெளிப்புற மேல்பகுதி, நுழைவாயில் மேல் அமையும் தளங்கள் போன்ற பகுதிகளைப் பார்வையிட்டு அதிலுள்ள குப்பைகள், பழைய பொருள்கள், உடைந்த மரச்சாமான்கள் அனைத்தையும் சுத்தம் செய்யலாம். இந்த நாளில் கட்டடத்தின் உட்பகுதியிலுள்ள படிக்கட்டு அறைகள், அறைமூலைகள், நடைபகுதிகள் ஆகியவற்றிலும் உள்ள பழுதடைந்த பழைய பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம். பொங்கல் திருநாளை ஒட்டி இந்தத் தூய்மைநாளைக் கொண்டாடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஆ. கழிப்பறைத் தூய்மை நாள்: இந்தப் பணியை முழுமையாகப் பணியாட்களை வைத்துச் செய்ய வேண்டிவரும். முதலில் குழாய் பழுதுகள், வடிகால்கள் மற்றும் அனைத்து பிளம்பிங் வேலைகள் சரிசெய்யப்பட வேண்டும். கழிப்பறை சன்னல் மற்றும் கதவுகளை தச்சர் துணை கொண்டு சரிசெய்யலாம்.
கழிப்பறைப் பகுதி மற்றும் குழாய்கள் அமையும் பகுதிகளை வெள்ளையடித்து, கதவு – சன்னல்களை எனாமல் பெயின்ட் அடித்துச் சுத்தமாக வைத்தல் அவசியம். செராமிக் ஓடு மற்றும் பீங்கான் பேசின்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளையும், உப்புகளையும் தகுந்த வேதித் திரவங்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆகும் செலவுகளை ஒவ்வொரு வருடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் கொடுப்பது அவசியம்.
இ. சுற்றுப்புற மனைத் தூய்மை நாள்: பொது அலுவலகக் கட்டடத்தைச் சுற்றியுள்ள மனையைத் தூய்மைப்பகுதியாக மாற்ற வேண்டும். இங்கு செடிகள் மற்றும் மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தெளிவாகக் குறிக்கலாம். உள்ளே உள்ள சாலைகளைச் செப்பனிடலாம். கழிவுநீர் செல்லும் வடிகால்களில் நிறைந்து கிடக்கும் குப்பைகளை முழுவதுமாக மாற்றலாம். மேலும் மனையின் எல்லைகளில் அமைந்துள்ள சுவர்கள், வாகன மற்றும் காவலர் அறைகள், வாயில்கள் அனைத்தையும் பழுது பார்க்கலாம்.
பழைய பழுதடைந்த எந்திரங்கள், வாகனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தலாம். இந்தப் பழைய பொருள்களைக் கையாள மாவட்ட அளவில் தனியிடங்களைத் தேர்வு செய்யலாம்.