மூலிகை மூலை: வீக்கம் போக்கும் மிளகரணை!
சின்னதாக நீளமான வட்ட வடிவம் உள்ள காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்று அடுக்குகளில் கொண்ட வளைந்த வடிவமுள்ள முட்களை அதிகமாகக் கொண்ட ஏறு கொடி இனம் மிளகரணை. இதன் இலைகள் மிகவும் கசப்பாக இருக்கும். இலை, காய் வேர்ப்பட்டை மருத்துவக் குணம் உடையவை. பசியைத் தூண்டவும், முறைநோயை அகற்றவும், கோழையை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் சிறு காடுகளில் மலைப்பகுதிகளில் தானாகவே வளர்கின்றன.
ஆங்கிலப் பெயர்: Toddalia asiatica; camk; Rutaceae.
மருத்துவக் குணங்கள் :
மிளகரணைக்காய், வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து இடித்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வர பிடிப்பு, வீக்கம், வலி குணமாகும்.
மிளகரணை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி இரண்டு வேளை 250 மில்லியாகக் குடித்து வர உடல் பலம், பசி உண்டாக்கும். கபம், குளிர் காய்ச்சல் குணமாகும்.
மிளகரணையைக் கையளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து, இரண்டு வேளை குடித்துவர தொண்டைக் கரகரப்பு இருமல் குணமாகும்.
மிளகரணையைப் பொடியாக்கி நூறு கிராம் எடுத்து அத்துடன் சுக்கு, திப்பிலி, கடுக்காய்ப் பொடி வகைக்கு 15 கிராம் சேர்த்து ஒரு தேக்கரண்டியளவு 3 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், பித்தம் குணமாகும்.
மிளகரணை இலையைப் பச்சையாக மென்று தின்ன வயிற்று நோய் குணமாகும். மிளகரணை இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும்.
மிளகரணை வேர்ப்பட்டையை 100 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க முறைக் காய்ச்சல் குணமாகும். (வியர்வை உண்டாகும்) மிளகரணை வேர்ப்பட்டை 50 இடித்து சாராயத்தில் 7 நாள் ஊறவைத்து வடிகட்டி 10 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டு வர காய்ச்சல், கழிச்சல் குணமாகும்.
மிளகரணை வேர்ப்பட்டையையும், கமுகு ரோகிணியையும் சமஅளவாக நூறு கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகத் தொடர்ந்து குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும்.
மிளகரணை வேரை கைப்பிடியளவு எடுத்து 200 மில்லியாக விளக்கெண்ணெயுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவி வர விரைவில் குணமாகும்.