Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Microsoft’ Category

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »

Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

உலகச் செல்வமும், ஏழ்மையும்

ந. ராமசுப்ரமணியன்

உலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

  • லட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.
  • முகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.
  • அனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.
  • அஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.
  • குஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.
  • சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.
  • குமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.
  • சசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.
  • ரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.
  • பலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.
  • ஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.
  • சிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.
  • திலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.
  • சைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.
  • இந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.
  • கலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • கிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • துளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • சுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.
  • உதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.
  • பாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.
  • மல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.
  • நாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.
  • அனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • வேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • விஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • ஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • விகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.
  • நந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.
  • எஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.
  • பிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • கேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • ராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.

இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான

  • அமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,
  • ஜப்பானில் 15.3 சதவீதம்,
  • இங்கிலாந்து 15 சதவீதம்,
  • பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.
  • பிரேசிலில் 23 சதவீதம்,
  • ரஷியாவில் 20 சதவீதம்,
  • இந்தியாவில் 22 சதவீதம்,
  • சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.

அதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).


மும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.

ஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.

இந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

மும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

———————————————————————————————

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு

மும்பை, ஜ×லை.5-

இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.

மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.

மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.

8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.

மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

——————————————————————————————————————

இந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி

பல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.

Posted in Ambani, Anil, Arrogance, Asia, Asset, Azim Premji, Bajaj, Bill Gates, Billion, Billionaire, Birla, Biz, Bombay, Brazil, Business, Capitalism, Children, China, Commerce, Dayanidhi, Dhinakaran, Dinagaran, Dinakaran, Display, Distribution, Economics, England, Finance, Forbes, France, Gates, Globalization, Godrej, HCL, Homeless, Homes, Housing, Industry, Infosys, Japan, Kalanidhi, Kid, Kungumam, Lakshmi Mittal, maharashtra, Manufacturing, Maran, Microsoft, Millionaire, Mittal, Money, Mugesh, Mukesh, Mumbai, Nadar, Narayana Murthy, Needy, Oberoi, Oceanview, Op-Ed, Poor, Pune, Rich, Right, Russia, Seaview, Services, Shiv Nader, Sooriyan FM, Soviet, Street, Sun TV, TATA, USA, USSR, Vakf, Wakf, Warren Buffet, Wealth, Wipro | 1 Comment »

Mukesh to be world’s richest Indian

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

லட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி 

புதுடெல்லி, பிப். 27-

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.

தற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.

லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.

Posted in Ambani, Arcelor, Arcelor Mittal, Bill Gates, Birla, Cash, Equity, Forbes, Fortune, Guru, Lakshmi Mittal, Lakshmi Niwas Mittal, Manirathnam, Maniratnam, Microsoft, Mittal, Money, Mukesh Ambani, Poor, Reliance, Reliance Industries Limited, Rich, RIL, Shares, Steel, Stocks, TATA, Valuation, Vimal | Leave a Comment »

Interview with Gautham Menon – Pachaikkili Muthucharam Director

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

நான்கு படங்கள் எடுத்தும் பணம் சம்பாதிக்கவில்லை: இயக்குனர் கவுதம் சொல்கிறார்

சென்னை, பிப்.16-

மின்னலே, காக்ககாக்க, வேட்டையாடு விளையாடு என்று ஹாட்ரிக் வெற்றி கொடுத்துவிட்டு பச்சைக் கிளி முத்துச்சரத்திடமிருந்து நான்காவது வெற்றியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.

திரைப்படங்களில் தொழில் நுட்பங்களை கையாள்வதில் கில்லாடி என்று பெயர் பெற்றிருக்கும் கவுதம்மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் சிறப்பாக வந்திருக்கும் திருப்தியில் இருக்கிறார் அவர் அளித்த பேட்டி.

மனிதனின், மனித உறவுகளின் மதிப்பை போற்றும் படம் பச்சைக்கிளி முத்துச்சரம். வித்தியாசமான முறையில் எடுத்திருக்கிறோம்.

எனது முந்தைய படங்களிலிருந்து இது மாறு பட்டது. சரத்குமார் நடிக்கும் படம் என்பதால் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்பதை மனதில் வைத்து சண்டை போன்ற சில அம்சங்களை கூடுதலாக சேர்த்திருக்கிறேன். குறிப்பாக படத்தின் முதல் பாதியை பாலுமகேந்திரா எடுத்த ஆங்கில படம் போல் புதுமையான நடையில் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்தின் போதும் தோன்றும் எதிர் பார்ப்புகளுக்கு நான் கவலை படுவேன்.

மீடியாக்கள் தேவை யில்லாத எதிர்பார்ப்பு களையும் பரபரப்புக்களையும் தூண்டி விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு படத்தின் உருவாக்கத்தின் போதும் மீடியாக்களை கண்டு மறைகிறேன்.

பச்சைக்கிளி முத்துச் சரத்தின் கதை பெரிய வர்களுக்கானது என்பதால் படத்தின் `கரு’ அடிப்படையில் இந்த படத்திற்கு `ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

திருமண பந்தத்தை தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் படம் இது

நான் சினிமாவில் சாதிப் பதற்கு பக்க பலமாக எனது குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் எனது சகோதரி அதிகம் உதவி செய்கிறார்.

இதுவரை நான்குபடங்கள் இயக்கியிருக்கிறேன். இந்த நான்கு படங்களிலிருந்தும் பெரிதாக பணம் எதையும் சம்பாதிக்கவில்லை. சினிமா படைப்பு என்பதற்கு பணம் குவிப்பது என்பது அர்த்தமல்ல எனது மனைவி பிரீத்திக்கு நான் முழுநேரமும் சினிமாவே கதி என்று இருப்பதில் கொஞ்சம் அதிருப்திதான் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறாள்.

எனது அடுத்தப் படமான `வாரணமாயிரத்தில்’ வசனம் கம்மிதான் இருந்தாலும் அதன் காட்சிகள் மூலமாக கதையை அற்புதமாக சொல்வேன். சினிமாவில் நடிக்கும் எண்ணம் எல்லாம் கிடை யாது. ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்கும் அளவிற்கு முகம் தெரிந்த ஆளாக இருக்க விரும்பவில்லை. அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், தனிமையை கெடுக்கும் என்கிறார் கவுதம்மேனன்.

Posted in A, Adults Only, Derailed, Director, Gautham Menon, Gopika, Interview, Jennifer Aniston, Kaakka Kaakka, Microsoft, Minnaley, Pachai Kili Muthucharam, Pachaikkili Muthucharam, Pachaikkli Muthucharam, Sarathkumar, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theatres, Vaaranam Aayiram, Vettaiyadu Vilaiyadu | Leave a Comment »