“வங்கிப் பழக்கம் வைரச் சுரங்கம்’
வெ. கணேசன்
வங்கிப் பழக்கம் இந்நாளில் அவசியத் தேவையாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள 40 லட்சம் வங்கிக் காசோலைகள் மீதான பணப் பரிவர்த்தனை, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 1100 மையங்களில் கையாளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டால், தொழில் முனைவோரும், வர்த்தகப் பிரிவினரும், வாடிக்கையாளர்களும், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி விடுகின்றனர்.
இருந்தாலும் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீத மக்களிடையே மட்டும்தான், வங்கிப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதனால்தான் குறைந்தபட்ச இருப்புத்தொகை என எதுவும் இல்லாமலேயே, வெறும் பத்து ரூபாயைக்கூட செலுத்தி, வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கேரளத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம்தான், நாட்டிலேயே வீடு தவறாது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் வறுமைக் கோட்டுக்குக் கீழே, இரண்டு வேளை உணவுகூடக் கிடைக்காமல் பசியால் பரிதவிப்பவர்களும், இங்கே முப்பது கோடி பேருக்கும் மேலே உள்ளனர்.
2006-ம் ஆண்டின், உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு, வங்க தேச அறிஞரும், குறுங்கடன் வழங்கும் கிராம வங்கி நிறுவனருமான முகம்மது யூனுசுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அடித்தட்டு மக்களுக்காக, குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக, கிராம வங்கியை உருவாக்கி, அதை வெற்றிகரமாய் செயல்படுத்திக் காட்டி, சாதனை படைத்த காரணத்திற்காகத்தான், இந்த உலகளாவிய விருது, அந்த மனிதரைத் தேடிச் சென்று அளிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டு மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வங்கிகள் அளிக்கும் கடன் வசதியை அனுபவிக்கின்றனர். ஏனைய மக்களோ, கடன் பெறத் தகுதியற்றவர்கள் என ஒதுங்கி இருக்கின்றனர்.
கடன் வசதி என்பது வறுமையை அகற்றுவதற்கான ஒரு முக்கிய சாதனம். எனவேதான் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் நமது நாடு முழுவதும் கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன.
அதன்படி நமது நாட்டின் மொத்தமுள்ள 605 மாவட்டங்களில் 525 மாவட்டங்களில் இன்று கிராம வங்கிகள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் இரண்டு. அதில் ஒன்று, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, வடமாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி. மற்றொன்று விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி.
நமது நாட்டிலுள்ள கிராம வங்கிகளின் எண்ணிக்கை 102 ஆகும். இவற்றின் மொத்தக் கிளைகள் 14,495. இதில் 86,687 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த மார்ச் மாத முடிவில், 72,510 கோடி ரூபாயை டெபாசிட்டாகத் திரட்டியுள்ளனர். 40 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனுதவியாக அளித்துள்ளனர்.
அளிக்கப்பட்ட கடன் தொகையில், 79 சதவீதம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அகில இந்திய அளவில், நாட்டின் முதன்மை கிராம வங்கியென, “பாண்டியன் கிராம வங்கி’ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் சேவை புரிந்து வருகிறது.
நமது நாட்டில் இன்னமும் கிராம வங்கிகள் தொடங்கப்படாத மாநிலங்கள் இரண்டு இருக்கின்றன. அவை கோவா மற்றும் சிக்கிம் ஆகியன.
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும், வேளாண் துறைக்கு ரூ.1,75,000 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க ஏதுவாக, 12,106 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 8,01,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4,863 கோடி கடனுதவியை வழங்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 3,85,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடன் சுமையை எளிதாக்கி நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் வட்டியைத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தன அரசுத் துறை வங்கிகள்.
ஆக நாட்டில் உணவு உற்பத்தி பெருகவும், கல்வியாளர்களை உருவாக்கவும் வங்கிப் பழக்கம் ஆதரவுக் கரம் நீட்டி, உறுதுணையாய் நிற்கிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிச் சேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இவற்றை ஒழுங்குபடுத்தும் விதத்தில்தான், நாட்டில் முதன்முதலாக 1949ம் ஆண்டு, வங்கியியல் கம்பெனிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.
1809ல் பாங்க் ஆப் பெங்கால் வங்கியும், 1840ல் பாங்க் ஆப் பாம்பேயும், 1843ல் பாங்க் ஆப் மெட்ராஸýம் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில், இம் மூன்று வங்கிகளும் “பிரசிடென்சி வங்கிகள்’ என்று அழைக்கப்பட்டன.
1862ல் தான் அரசாங்கம் முதன்முதலாக காகிதப் பணத்தை அச்சிட ஆரம்பித்தது. 1905ல் சுதேசி இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆங்காங்கே புதிது, புதிதாய் வங்கி அமைப்புகள் முளைத்து எழுந்தன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நெறிமுறைப்படுத்த, 1913-ல் இந்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
27.01.1921-ல், பாங்க் ஆப் பெங்கால், பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, “இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா’ என அழைக்கப்படலாயிற்று. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1955-ம் ஆண்டு இம்பீரியல் பாங்க் என்பது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வாக மாறியது. உலக அளவிலான வங்கிகளில், நமது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ இன்று 82 வது இடத்தில் இருக்கிறது.
1969ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழி அமைத்துத் தரப்பட்டது. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே. இவற்றிலும், கிராமப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தவையோ வெறும் 1860 கிளைகள்தான். இதன் தொடர்ச்சியாக 1980ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் மேலும் 6 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன.
ஆனால்… இன்றோ, வங்கி எண்ணிக்கையின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆம். 2006 அக்டோபர் மாத நிலவரப்படி, நமது நாட்டின் அட்டவணை வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை எழுபதாயிரத்தை எட்டியுள்ளது.
இவ்வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து திரட்டி வைத்துள்ள வைப்புத் தொகை 22,92,525 கோடி ரூபாய். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு விதமான நலத் திட்ட கடன் தொகை அளவோ, 16,55,567 கோடி ரூபாய். இவற்றில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை மட்டும் ஏழரை லட்சம்.
உள்னாட்டு வங்கிப்பணியின் சேவை அயல்நாடுகளிலும் விரிந்துள்ளன இன்று. அயல் மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிக் கிளைகள் 123.
இவற்றிற்கிடையே, வங்கிக் கணக்குகளை ஆங்காங்கே தொடங்கி, கோரிக்கை அற்றுக் கிடக்கும் வாடிக்கையாளர் பணம் மட்டும் ரூ.881 கோடி.
வீட்டுக்கொரு மரம் வளர்த்து சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம் என்கிற தாரக மந்திரம்போல், வீட்டுக்கொரு வங்கிக் கணக்கைத் தொடங்கினால், நாடும், மக்களும் நலம் பெறுவர் என்பது திண்ணம்.
(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க
இணைப் பொதுச் செயலர்).