01.08.07 கவர் ஸ்டோரி
குற்றாலம்
பேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.
மலைக்கோட்டை
நீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.
மேட்டூர் அணை
தஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில்
ஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
மகாபலிபுரம் சிற்பங்கள்
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.
செட்டிநாட்டு வீடுகள்
சாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.
கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
கைலாசநாதர் கோயில்
பல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.
திருவள்ளுவர் சிலை
தமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெரியகோவில்
பெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.
வேலு£ர் கோட்டை
கிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.
தமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழக அதிசயங்கள்
பி.எம்.சுதிர்,