மூலிகை மூலை: வாதம் போக்கும் கட்டுக்கொடி!
விஜயராஜன்
இது வேலிகளில், புதர்களில் வளரக்கூடிய ஏறுகொடி இனமாகும். இதன் இலைகள் நீண்டு அகன்று முனை மழுப்பலாக இருக்கும். கரிசல் மண் காடுகளில் இது அதிகமாக வளரக்கூடியது. இலை, வேர், மருத்துவ குணமுடையவை. குளிர்ச்சி உண்டாக்கியாகவும், உமிழ்நீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உள்ள கரிசல் காட்டில் தானாக வளர்கின்றது. இதனுடைய இலைச்சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கொஞ்சம் நீர்விட்டுக் கலக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்துப் பார்க்க ஆட்டு இரத்தம் எப்படிக் கட்டியாக இருக்கின்றதோ அதுபோல கட்டியாக இருக்கும். இப்படிச் சாறு கட்டியாகி விடுகின்றதால் இதைக் கட்டுக்கொடி என்று அழைக்கின்றார்கள். கட்டுக்கொடி இரண்டு வகைப்படும். இரண்டிற்கும் ஒரே மருத்துவ குணம் உண்டு.
வேறு பெயர்கள்:
- சதநித்திரகாசம்,
- சித்திராங்கி,
- காசிமச்சகா,
- பற்பயாங்கொடிச்சி,
- அப்புத்தளைத் திரட்டி,
- ஆனந்தவல்லியா,
- மூர்த்தி,
- உப்புக்கு உறுதி.
வகைகள்: சிறு கட்டுக்கொடி, பெருங்கட்டுக் கொடி.
ஆங்கிலப் பெயர்: Coutus hirsutus; Diels; Menispermaceae.
மருத்துவ குணங்கள்:
கட்டுக்கொடி இலையை பாக்களவு மென்று தின்ன இரத்தபேதி, சீதபேதி, மூலக்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.
கட்டுக்கொடியிலையை அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத்தயிருடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வர பெரும்பாடு, இரத்தபோக்கு குணமாகும்.
கட்டுக்கொடியிலை, வேப்பங்கொழுந்து சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலையில் மட்டும் வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு (சர்க்கரை நோய்), களைப்பு, ஆயாசம், தேக எரிச்சல், அதிக தாகம், பகு மூத்திரம் குணமாகும். சிறுநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவு நீங்கும். இதையே இடித்துப் பொடியாக்கி சூரணமாகவும் சாப்பிட்டு வரலாம்.
கரிசல் காட்டில் முளைத்த கட்டுக்கொடியை அப்படியே மண்ணுடன் பிடுங்கி, கீழே விழுந்த மண்ணைக் கொடியில் அப்பி காய வைத்து, எல்லாவற்றையும் குயவர் மண்ணைக் குழைப்பது போல குழைத்து மூட்டு போட்டு மண்ணைப் புளிக்க வைத்து, எடுத்துப் பத்திரப்படுத்தவும். விரையில் அடிபட்டு வீக்கம் இருந்தால், இந்த மண்ணைத் தண்ணீர் விட்டு குழைத்து அடிபட்ட விரையில் பற்றாகப் போட்டு வர வீக்கம் வற்றி பழைய அளவிற்கு மாறும். பற்று கீழே விழாமல் பார்த்துக் கொள்ள துணியை வைத்து கட்டலாம்.
கட்டுக்கொடி இலையுடன், மாம்பருப்பும் சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து 2 வேளை குடித்து வர பேதி உடனே நிற்கும். (கஞ்சி ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும்.) கட்டுக்கொடி வேர், ஒரு கைப்பிடியளவுடன், சுக்கு ஒரு துண்டு, மிளகு 4 சேர்த்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு மணிக்கு ஒரு முறை 50 மில்லி வீதம் குடித்து வர வாதவலி, வாத நோய், கீல் நோய் குணமாகும்.
கட்டுக்கொடி இலைச்சாறை அரை லிட்டர் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்த நீருடன் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் கட்டியாகி விடும். இதை அதிகாலையில் ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீதகக் கழிச்சல், இரத்தக் கழிச்சல் குணமாகும்.
கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
கட்டுக்கொடியிலையைப் பாலில் அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர விந்து கட்டும். இடுப்பு வலி நீங்கும்.
சிறுகட்டுக் கொடியிலையை அதிகாலையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து மென்று தின்று வர நீர் ஒழுக்கு, நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை குணமாகும்.
கட்டுக்கொடி சமூலத்தை அரைத்து எலுமிச்சம்பழ அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மலக் கழிச்சல், பேதி நிற்கும். நீர்த்த இந்திரியம் கட்டும்.