Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Meningo encephalitis’ Category

Meningo encephalitis & Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன் குனியாவும் சுற்றுப்புறத் தூய்மையும்

“”என் மகள் சிக்கன் சாப்பிடுவதே இல்லைங்க. அவளுக்குப் போய் “சிக்கன் குனியா’ வந்துவிட்டது” என்று புலம்பினார் கிராமத்து நண்பர். “”ஐயா, அது சிக்கன் குனியாவும் அல்ல; மட்டன் குனியாவும் அல்ல; சிக்குன் குனியா” என்று திருத்தினேன்.

கிழக்கு ஆப்பிரிக்க பாண்டு இன மக்களின் மொழியாகிய ஸ்வாஹிலி (Swahili) யில் “சிக்குன் குனியா’ என்பதற்கு “வளைத்துப் போட்டுவிடுவது’ (that which bends up) என்று பொருள். இந் நோயால் தாக்கப்படுபவர்களின் மூட்டுகள் பாதிக்கப்பட்டு முடக்கப்படுவதால் சிக்குன் குனியா என்ற பெயர் படைத்தது.

ஏடெஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுக்கள் கடிப்பதனால் இந்தக் கொடிய நோய் ஏற்படுகிறது. குளிர்காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுக்கு மூட்டு வலி, வாய்க்கசப்பு எனப் பல்வேறு சிரமங்களை இந்த நோய் உண்டாக்குகிறது.

சிக்குன் குனியாவின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாடுதான். இங்குதான் 1952 – 53 ஆண்டுகளில் இந்நோய் கண்டறியப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள க்ளாங் (Klang) துறைமுகத்திலும் சிக்குன் குனியாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்துமாக் கடலில் மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே பிரான்சுக்குச் சொந்தமான “ரியூனியன்’ (Reunion) என்று ஒரு தீவு உள்ளது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை நோயாக சிக்குன் குனியா கோரத் தாண்டவம் ஆடியது. தீவில் வாழும் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் சிக்குன் குனியாவால் கடுமையாக முடக்கப்பட்டனர். அருகே இருந்த மொரிஷியஸ் தீவையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. இங்கு சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறு.

இந்த ஆண்டிலும் (2006) ரியூனியன் தீவில் எழுபதாயிரம் பேர் இந்நோயினால் அவதிக்கு உள்ளாயினர். பிரான்சு நாடு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, கொசுக்களை அழித்திட 3,600 பேரைப் பணியில் ஈடுபடுத்தியது. மேலும் ராணுவ வீரர்களும் இப்பணியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

இந்தச் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயன்று என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ரியூனியன் தீவில் டைலான் (Dylan), ட்ரிசியா (Tricia) என்ற பத்து வயது சிறார்கள் இருவர் இறந்து போயினர். டைலான், சிக்குன் குனியா பாதித்த இரண்டு நாள்களிலும், ட்ரிசியா ஒரு வாரம் கழித்தும் மரணத்தைத் தழுவினர். மொரிஷியஸ் தீவிலும் சங்கீத் எம்ரித் (Sangeet Emrith) என்ற முப்பத்து மூன்று வயது நபரும் இந் நோய் தாக்கி மரணமடைந்தார். மூளையின் நரம்புகளை சிக்குன் குனியா வைரஸ் பாதித்ததால் மெனிங்கோ என்செஃபாலிட்டிஸ் (Meningo encephalitis) நோயினால் இவர்கள் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மரணங்கள்தான் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயாக இருக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டை முதன்முதலாக மருத்துவ உலகில் விதைத்தன எனலாம். 2004-ல் 3884 ஆக இருந்த இத்தகைய மரணங்கள் 2005ஆம் ஆண்டில் 4272 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் இடெல்மேன் (Robert Edelman) அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தடுப்பூசி (Vaccine) மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்தத் தடுப்பூசி சிக்குன் குனியாவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை இருபது பேருக்கு மட்டுமே சோதனை முயற்சியாகப் போடப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ராபர்ட் இடெல்மேனின் இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் உலக அளவில் இந்நோயின் பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். சிக்குன் குனியா வைரஸ் வேறு வேறு மனிதர்கள் மீது வேறு வேறு வகையான உயிரியல் அறிகுறிகளை (different biological symptoms on different persons) உருவாக்கக் கூடும் என்கிறார் இடெல்மேன்.

சிக்குன் குனியா மட்டுமல்ல டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு ஆட்கொல்லி நோய்களுக்கும் கொசுக்களே மூலகாரணம். அதுவும் ஏடெஸ் எஜிப்டி கொசுவுக்கு “மாவீரன் ஏடெஸ்’ என்று விருதே வழங்கலாம். தமிழக எதிர்க்கட்சிகளைக் கைகோர்த்து வீதிக்கு வந்து போராட வைத்துவிட்டதே!

கொசுக்களை மனிதர் ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லையேல் கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை ஒழிக்க முற்படும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், தேங்கியுள்ள நீர் நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதும் இன்றைய அவசரத் தேவைகள்.

கொசு ஆசான், நம்மை “முட்டிக்கு முட்டி தட்டி’ச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் இது; கற்போமா?

Posted in Background, Chicken Kunya, Chikan Kunya, Chikun Kunya, Clenaliness, Dinamani, Editorial, Healthcare, History, Meningo encephalitis, Op-Ed, World | Leave a Comment »