Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Men’ Category

Women in India: Serving in the Indian Army – Gender equality in Military, Navy, Air Force

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சேவை: இராணுவத்தில் பெண்கள்!

மு.வெ.

ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.

இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.

இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.

Posted in Airforce, doctors, Education, Employment, Engg, Engineering, Equality, Females, Gender, Generals, Hospital, inequality, Infantry, Jobs, Males, medical, Men, Military, Navy, NCC, Nurses, officers, Opportunities, Pilots, Signals, Sports, Uniform, Women | Leave a Comment »

Jallikkattu in Tamil Nadu: Supreme Court ban on bullfight, Alanganallur jallikattu, Bull-taming festival

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

அலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் சீறி பாய்ந்தன 302 காளைகள்

அலங்காநல்லுõர்: உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுõர் ஜல்லிகட்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நேற்று சிறப்பாக நடந்தது. இதில் 302 காளைகள் அவிண்ழ்த்து விடப்பட்டன. 347 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டை காண நேற்று அதிகாலையிலேயே அலங்காநல்லுõரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குவிந்தனர். மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாடிவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அவற்றை கால்நடை டாக்டர்கள் சோதித்தனர். மாடுபிடி வீரர்களுக்கு நீலக்கலரில் பனியன், டிரவுசர் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,க்கள், சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கு தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

வீரர்களுக்கு எச்சரிக்கை:

முத்தாலம்மன், முனியாண்டி மற்றும் காளியம்மன் கோயில்களில் கலெக்டர் ஜவஹர், மூர்த்தி எம்.எல்.ஏ., அன்பு எஸ்.பி., நகர் நல கமிட்டி தலைவர் ரகுபதி, செயலாளர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி, துணைத்தலைவர் செல்வராணி மற்றும் கிராம கமிட்டியினர் வழிபாடு செய்தனர். கலெக்டர் ஜவஹர் முதல் காளையினை அவிழ்த்து ஜல்லிகட்டை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த ஜல்லிகட்டு, பெரிய போராட்டத்திற்கு பிறகு நடக்கிறது. இதனை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இந்த ஜல்லிகட்டை பார்த்து கொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்களை தவிர வேறு யாரும் மைதானத்திற்குள் நுழைய கூடாது. மாடுகளின் வாலை பிடிக்கவோ, மண்ணை துõவவோ கூடாது. சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலை பின்பற்றினால் மட்டுமே தொடர்ந்து ஜல்லிகட்டை நடத்த முடியும்’ என்றார்.

காளையரிடம் சிக்காத காளைகள்:முதலில் கோயில் காளைகளும் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை பிடிக்க மாடு பிடி வீரர்கள் முயன்றனர். குறிப்பாக பல்லவராயன்பட்டி கண்ணன், ஜெய்ஹிந்துபுரம் முருகேசன் போன்றோரது மாடுகள் வீரர்களிடம் சிக்காமல் மைதானத்திற்குள் 10 நிமிடங்கள் போக்கு காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சில வீரர்களை காளைகள் முட்டி துõக்கி எறிந்தன. இருப்பினும் சில மாடுகளை வீரர்கள் 15 மீட்டர் வரை பிடித்து சென்று பரிசுகளை பெற்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீரர்கள் வெளியேற்றம்:

காளைகளின் மீது மண்ணை துõவியவர்களை பார்த்த கலெக்டர், மைதானத்திற்குள் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பார்வையாளர்கள் காலரியில் இருந்து மாடுகளை பிடிக்க முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்த விடப்பட்ட காளைகள் வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளால் ஊருக்கு வெளிப்புற தோப்புகளுக்கு சென்றன. பார்வையாளர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனை கூடல்புதுõர் எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் தடுக்க முயன்றனர். அவர்கள் மீது கூட்டத்தினர் கல் வீசியதில் எஸ்.ஐ.,க்கு காயம் ஏற்பட்டது.

கலெக்டர் பேட்டி:

கலெக்டர் ஜவஹர் கூறுகையில், “கடந்தாண்டு மாடுகளை பிடிக்க முயன்ற 100 பேர் வரை காயமுற்றனர். இந்தாண்டு 4 பேர் மட்டும் காயமுற்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேர் சிறுகாயம் அடைந்தனர். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஜல்லிகட்டு சிறப்பாக நடந்தது’ என்றார். சிங்கப்பூரை சேர்ந்த லிங் ஜியா என்ற மாணவி கூறுகையில், “மாடுகளை துன்புறுத்தாத அளவு நடந்த ஜல்லிகட்டை பார்க்கும்போது திரில்லாகவுள்ளது. மாடுபிடி வீரர்கள் மிக நேர்த்தியாக மாடுகளை பிடிக்கின்றனர். பசுமையான இந்தஊரில் நடந்த ஜல்லிக்கட்டை மறக்க முடியாது’ என்றார்.

வாடிவாசலில் இருந்து…:

காளையை 2 பேர் பிடித்தால் பரிசுகள் வழங்கப்படவில்லை. வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் துõரம் வரை காளையின் திமிலை பிடித்து ஒருவராக அடக்குவோருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர் காலரிக்கும் மைதானத்திற்கும் 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாகவும் நடந்தது. பிராணிகள் நலச்சங்கத்தினரும் கண்காணித்தனர்.

* ஜல்லிக்கட்டை பார்க்க காலரி கட்டணம் ரூ.100 நிர்ணயம் செய்து அங்குள்ள தியேட்டரில் அதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. அவற்றை மொத்தமாக வாங்கிய சிலர் ரூ. 400 வரை விற்றனர்.

*வீட்டு உரிமையாளர்கள் சிலர் பார்வையாளர்களிடம் கட்டணம் வாங்கி கொண்டு மாடிகளில் நின்று ஜல்லிகட்டை பார்க்க செய்தனர். வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் வசூலித்தனர்.

* முடுவார்பட்டியை சேர்ந்த மூத்த மாடு பிடி வீரர் முனியசாமி வீரர்களுக்கு அடிக்கடி காளைகளை அடக்கும் விதம் குறித்து “டிப்ஸ்’ வழங்கிக்கொண்டு இருந்தார்.

* ஐ.ஜி., சஞ்சீவ்குமார், போலீஸ் கமிஷனர் நந்தபாலன், டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி மேற்பார்வையில் 1200 போலீசார் மற்றும் 85 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

*வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த ஒரு காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர் நாகராஜனுக்கு மு.க.அழகிரி மகன் தயாநிதி ரூ.500 பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

*முத்தையா, சுரேஷ், சரவணன், மகாராஜன் போன்றவர்கள் பல காளைகளை மடக்கி பரிசுகளை பெற்றனர். தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, மிக்ஸி, அண்டா போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

*எஸ்.ஐ., மீது கல்வீச்சையடுத்து ஜல்லிகட்டு சிறிதுநேரம் தடைப்பட்டது. கூட்டத்தினரை போலீசார் அமைதிப்படுத்தியதையடுத்து தொடர்ந்த ஜல்லிகட்டு மாலை 5 மணியுடன் முடிக்கப்பட்டது. அவிழ்த்து விடாத சில மாடுகளுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

42 காளைகளுக்கு அனுமதி மறுப்பு:

அலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் மொத்தம் 427 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 42 காளைகள் மருத்துவ சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இந்த காளைகள் மது ஊட்டப்பட்டது மற்றும் திமில்களில் விளக்கெண்ணெய் பூசிய காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மாலை 5 மணிக்குள் ஜல்லிகட்டை முடிக்க வேண்டும் என்பதால் 302 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிக்க 370 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 23 பேருக்கு மருத்துவ மற்றும் உடற்கூறு காரணங்களால் காளைகளை பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களில் சிலர் போதையில் இருந்தது தெரிந்தது.

kutramtop.jpgஒரு லட்சம் பேர் பார்வையிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மாடுகள் முட்டி 66 பேர் காயம்

மதுரை, ஜன.18-

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இதில், மாடுகள் முட்டி 66 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் குழம்பிப்போய் இருந்த மக்களுக்கு ஆறுதலான முடிவு பொங்கல் அன்று வெளியானது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின்னர் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது.

இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் கோட்டை மாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசலுக்கு முன்பு இருபுறமும் கம்புகளால் 400 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதன்மீது 5 அடி உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்டு இருந்தது.

அதே போல் வாடிவாசலுக்கு உள்ளே மாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக மரக்கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டு மாடுகளை அதன் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலையே லாரிகளிலும், டிராக்டர்களிலும் கொண்டு வந்து பெயரை பதிவு செய்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் வந்து இருந்தன. அதேபோல் மாடு பிடி வீரர்களும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

500 காளைகள்

நேற்று காலையில் டாக்டர் காமராஜ் தலைமையில் 24 கால்நடை டாக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை பரிசோதித்தனர். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனவா? சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா? என்று பரிசோதித்தார்கள்.

சில மாடுகளுக்கு கூர்மையான கொம்புகள் இருந்தன. அந்த கொம்பினால் யாருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க அதை சீவி மட்டுப்படுத்தினர். சிலர் தங்கள் மாட்டின் கொம்புகளுக்கு எண்ணை தடவி வந்தனர். அதிகாரிகள் அதை துடைத்து அப்புறப்படுத்தச் சொன்னார்கள். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாடுகளுக்கு முத்திரை குத்தி அனுமதி வழங்கினார்கள். மொத்தம் 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. கால்கடைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை இந்திய பிராணிகள் நல உறுப்பினர் எல்லப்பன், புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பனிமா, ராஜேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.

மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் 50 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து மாடுபிடிக்க அனுமதி அளித்தனர். குறிப்பாக அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர். மொத்தம் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாடுபிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீரூடையாக வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் பேர்

ஜல்லிக்கட்டை காண நேற்று காலை முதலே பார்வையாளர்கள் திரண்டு வந்தனர். காலரிகள் நிரம்பி வழிந்தன. தடுப்புகளுக்கு வெளியே ஏராளமானோர் கூடி நின்றனர். அந்த பகுதியில் உள்ள மொட்டை மாடிகளிலும் பலர் குவிந்து இருந்தனர். எங்கும் இடம் கிடைக்காத சிலர் அருகில் உள்ள மரங்கள் மீது ஏறி இருந்தனர்.

அமெரிக்கா, ஜப்பான் உள்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 200 பேர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு காலரி ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.

பயமுறுத்திய காளைகள்

பகல் 11-30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் முத்தாலம்மன் முனியாண்டி கோவில் மாடு வாடிவாசலில் இருந்து விடப்பட்டது. அது கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் தனியார் மாடுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. காளைகளை வாடிவாசலில் இருந்து விடும்போது அதன் மூக்கணாங்கயிறையும் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஜலங்கையையும் அவிழ்த்து விட்டனர். சிலர் தங்கள் காளையின் கழுத்தில் புது துணியை கட்டி அதனுள் பணத்தை வைத்திருந்தனர்.

மாடு வாடிவாசலில் இருந்து வெளியே வரும்முன்னர் அந்த மாடு யாருடையது? அதன் தோற்றம் எப்படி? கொம்புகள் எப்படி வளர்ந்துள்ளன? என்பன போன்ற விவரங்களை அறிவிப்பாளர்கள் அறிவித்தார்கள். ஒரு மாட்டை ஒருவரே அடக்க வேண்டும் என்பதால் வீரம் செறிந்த மாடு வந்தபோது புதுமுக வீரர்கள் ஒதுங்கி விட்டனர்.

பந்தாடிய காளைகள்

ஓங்கிய திமிலுடன் கூடிய காளைகள் வீரர்களை பயமுறுத்தியபடி வந்தன. அவை சிறிது நேரம் வாடிவாசலில் நின்று கால்களால் மண்ணை கிளரி நோட்டம் பார்த்த பின்னரே சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளையும் அடக்குவதற்கு வீரர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் மைதானத்துக்குள் சுழன்று சுழன்று வந்து முட்டி தள்ளின. இன்னும் சில காளைகள் பிடிக்க வந்த வாலிபர்களை கொம்புகளால் குத்தி பந்தாடியது. அவர்கள் சினிமா சண்டை காட்சியில் வருவதுபோல் தூக்கி வீசப்பட்டனர்.

அதேநேரம் வீரர்களும் சளைக்காமல் காளையை துரத்திச் சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். ஒருசில வீரர்கள் பாய்ந்து வந்த காளையை நேர் எதிரே நின்று அடக்க போரிட்டனர். இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மாடுகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. காளைகளை யாரும் அடக்காவிட்டதால் அந்த பரிசு மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

கல்வீச்சு

ஜல்லிக்கட்டை காண நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலை 4 மணி அளவில் பார்வையாளர்கள் நிற்க இடம் இல்லாமல் மைதானத்தைவிட்டு மாடுகள் வெளியே வரும் இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்களை ஒதுங்கி நிற்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தடுப்பு கம்புகள் உடைந்தன. இதனால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். லத்தியை சுழற்றியபடி போலீசார் வந்தனர்.

அப்போது சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் கனிராஜ், ஜெயக்கொடி, கணேசன் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர்.

காயம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மொத்தம் 66 பேர் காயம் அடைந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால் மகிழ்ச்சி
மதுரை அருகே பாலமேட்டில்
ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது
அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால், மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா நடைபெற்றது.

மதுரை, ஜன.17-

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

பட்டாசு வெடித்து

உலக பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கையின் பேரில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு தடை நீங்கியதால், சோர்ந்து கிடந்த கிராமங்கள் சுறுசுறுப்படைந்தன. பட்டாசுகளை வெடித்தும், தெருவில் ஆடிப்பாடியும் கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பாலமேட்டில் கோலாகலம்

ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் ஆயத்த பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டன. நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. அனுமதி பெறப்பட்ட காளைகள் மட்டுமே களத்தில் இறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மதுரை, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, நத்தம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, உள்பட பல்வேறு பகுதியில் உள்ள மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை டிராக்டர்-லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலையே பாலமேடு வந்துவிட்டனர்.

டாக்டர்கள் பரிசோதனை

அங்கு கால்நடை டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு மாட்டையும் பரிசோதித்தனர். அந்த மாடு ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதுதானா? அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா? என்பன போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் தகுதியான காளைகளுக்கு அனுமதி அளித்து அதன் முதுகில் சீல் குத்தினர். மொத்தம் 400-க்கு மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நீல நிற சீருடை

இதேபோல் அனுமதி பெறப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தனர். இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் நேற்று முன்தினமே அனுமதி பெறுவதற்காக பாலமேடு வந்தனர்.

அவர்களின் உடல் தகுதியை டாக்டர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கினர். இறுதியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை பிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீருடைகளாக வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சள்மலை ஆற்று திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாடுகளை திறந்துவிடும் வாடிவாசலுக்கு இருபுறமும் சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. யாரும் தடுப்பை தாண்டி உள்ளே நுழைந்துவிடாதபடி இருக்க தடுப்புக்கு மேலே கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஜவகர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டு தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாடுகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரிய உறுப்பினர் எல்லப்பன், `புளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்த பி.டி.மணிமா, ரமேஷ் ஆகியோர் வந்து இருந்தனர்.

வெளிநாட்டு பயணிகள்

நேற்று காலையிலேயே ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து இருந்தனர்.

அவர்கள் தடுப்பு வேலிக்கு இருபுறமும் திரளாக கூடி இருந்தனர். இதுதவிர ஆங்காங்கே சிலர் பரண் அமைத்து அதன்மீது ஏறி அமர்ந்திருந்தனர். அருகே உள்ள மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் பலர் ஏறி அமர்ந்திருந்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

காலை 11 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மைதானத்துக்குள் மாடுபிடி வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கிராமங்களில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

கோவில் காளைகள் என்பதால் அவைகள் சுதந்திரமாக விடப்பட்டன. அதன்பின் தனியார் காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த அந்த காளைகளை பலர் வீராவேசத்துடன் அடக்க முனைந்தனர். சில காளைகள் யாரின் பிடியிலும் அடங்காமல் திமிறி ஓடியபடி பந்தய மைதானத்தை கடந்து சென்றன. சில மாடுகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மைதானத்தில் கடுமையாக போட்டி நிலவியது. பலர் காளையின் கால்களுக்கு இடையே சிக்கி மிரண்டனர்.

பரபரப்பான காட்சிகள்

காளைகள் சீறினாலும் சிலர் அதன் திமிலை பிடித்து அடக்கினார்கள். மாடுகளின் திமிலை பிடிக்க முடியாத சிலர் அதன் வாலை பிடித்தபடி ஓடினார்கள்.

சில காளைகள் மைதானத்தில் நின்று அடக்கவந்தவர்களை சுழற்றி எறிந்து பந்தாடின. நீண்ட நேரம் பாய்ச்சல் காட்டி யாரிடமும் பிடிபடாமல் மைதானத்தில் இருந்து வெளியேறின. சில காளைகள் தங்கள் பார்வையாலும், பாய்ச்சலாலும், கால்களை தரையில் பிராண்டியும் மிரள வைத்தன. நிமிடத்துக்கு நிமிடம் மைதானத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதால் ஒரே ஆரவாரமாக கணப்பட்டது.

மைதானத்துக்கு வெளியே

ஜல்லிக்கட்டு மைதானத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அப்பாலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் மைதானத்தைவிட்டு வெளியே வந்த பின்னர் பொதுமக்களை கண்டு மிரண்டு மீண்டும் மைதானத்துக்குள் புகுந்தன.

இதனால் ஒரே நேரத்தில் 2 காளைகள் மைதானத்தில் களம் இறக்கப்பட்டது போல் காணப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு வீரர்கள் அந்த மாட்டை உடனே வெளியேற்றினர்.

மாடுபிடிக்க அனுமதி இடைக்காத சிலர் மைதானத்துக்கு வெளியே வந்த காளைகளை அடக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இந்த இடத்தில் மாடுகளை அடக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.

காயம்

மாலை 5-30 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் இன்றி ஜல்லிக்கட்டு இனிதே முடிந்தது.

ஆனாலும் காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியும், அதன் கால்களுக்கு இடையே சிக்கியும் 85 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பாலமேட்டைச் சேர்ந்த கோபால், கண்ணனேந்தல் பாண்டி, முடுவார்பட்டி முனியாண்டி, புதுக்கோட்டை கார்த்திக் உள்பட 14 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மைதானத்தை விட்டு வெளியே மாடுகள் அந்த கூட்டத்தினரை பார்த்து மிரண்டு ஓடியது. அப்போது மாடு முட்டி நாகர்கோவிலைச் சேர்ந்த புவனேஷ், பாறைப்பட்டியைச் சேர்ந்த பூச்சிதேவர், சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், நத்தம் மணக்காட்டூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

போட்டியின் இறுதியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, டிவி, மற்றும் ரொக்கப்பணம் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதேபோல் யாரிடமும் பிடிபடாமல் வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசாரால் வீடியோ படம் எடுக்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சூரிïர் ஜல்லிக்கட்டு

திருச்சி அருகே உள்ள சூரிïரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 46 வீரர்கள் காயம் அடைந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்
ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குமா?
நாளை தெரியும்

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நீக்குமா? என்பது நாளை (செவ்வாய்க்கிழமை) தெரியும்.

சென்னை, ஜன.14-

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

தமிழக அரசு மனு

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி விரைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாளை தெரியும்

இந்த மனு நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை நீங்குமா? என்பது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் நாளை நடைபெறும் விசாரணையின்போது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில், பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், உளவுத் துறை போலீஸ் ஐ.ஜி. ஜாபர்சேட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று காலை அவர்கள் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் உயர் அதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் அப்பீல் மனு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

டெல்லியில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியனிடமும் ஆலோசனை நடத்தியபின்பு மறு ஆய்வு மனு இறுதி செய்யப்பட்டது.

மனு விவரம்

கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, எந்த சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது? என்று நீதிபதிகள் தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

எனவே, அதற்கான சட்டபூர்வ ஆதாரங்கள் தமிழக அரசு சார்பில் திரட்டப்பட்டு அதன் விவரங்கள் மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளன. காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை மதித்து நடக்கவேண்டும் என்று, பாரம்பரிய பண்பாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதும் ஒரு ஆதாரமாக மனுவில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1909-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலெக்டராக பதவி வகித்த தேர்ஸ்டன் என்பவர் எழுதிய புத்தகத்தில் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், அதனை தடை செய்ய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தகவலும் மனுவில் ஆதாரமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத நல்லிணக்கம்

மதம், மொழி, இன மாறுபாடு இல்லாமல், அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டாண்டு காலமாக இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் நடைபெறும் சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, சர்வதேச சட்டம் வலியுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில், மதச்சடங்குகள், மதம் சார்ந்த வழிபாடு தொடர்புடைய கொண்டாட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்று உரிமையியல் நடைமுறை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை
சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தமிழர்களின் வீர விளையாட்டான `ஜல்லிக்கட்டு’ போட்டிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. தடையை நீக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

புதுடெல்லி, ஜன.12-

தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையின்போது `ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்தப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தடை

மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பிரசித்தி பெற்றதாகும்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

தமிழக அரசு அப்பீல்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

தடை நீடிப்பு

தமிழக அரசு மற்றும் விலங்குகள் நல வாரிய தரப்பின் விவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து உத்தரவிட்டனர். தடையை நீக்க கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் ரேக்ளா போட்டி நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “பாரம்பரிய வழக்கம் என்ற பெயரில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை தொடர அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க விரும்பவில்லை. மனித நேயத்துடன், மேலும் நாகரீகமான முறையில் இந்த போட்டியை மாற்ற முயற்சிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்திஅர்ஜ×னா, தனது வாதத்தின்போது “ஜல்லிக்கட்டு, கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டார்.

விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கூடாது என்று வாதாடினார். விவாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த போட்டியின் போது யாரும் காயம் அடையாமல் பார்த்துக் கொள்வதாக தமிழக அரசு சார்பில் உறுதியளிக்க முடியுமா? அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா?” என்று கேள்விக்கணை தொடுத்ததுடன், அதுபற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.

வீடியோ ஆதாரம்

போட்டியின் போது சிலர் காயம் அடையலாம் என்பதால் அதுபற்றி உத்தரவாதம் அளிக்க இயலாது என்று தமிழக அரசின் வக்கீல் அந்தி அர்ஜ×னா கூறினார். மராட்டிய மாநிலத்தில் `ஜென்மாஷ்டமி’ பண்டிகையின்போது நடத்தப்படும் `உறியடி’ நிகழ்ச்சியின் போது ஒருவர் மீது ஒருவர் ஏறும்போது சிலர் காயம் அடைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த நிகழ்ச்சியின்போது விலங்குகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படுவதில்லை என்று பதில் அளித்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி போட்டி நடைபெற்றதற்கு ஆதாரமான வீடியோ மற்றும் பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தமிழக அரசு சார்பில் எடுத்துச்சொல்லப்பட்டும் தடையை நீக்குவதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

ஒரு மாவட்டத்திலாவது

தங்கள் வாதத்தில் நீதிபதிகள் திருப்தி அடையாததை புரிந்து கொண்ட தமிழக அரசின் வக்கீல் குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்திலாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடையை நீக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ள ஒரு கிராம கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சட்டத்தில் தடை செய்யப்படாத ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “எந்த சட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக சொல்கிறீர்கள்? எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங்குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள்?” என்றார்.

கண்களில் மிளகாய்ப்பொடி

விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு நடத்துவது விலங்குகள் கொடுமைப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை மீறுவதாகும் என்பதால், அதை தடை செய்வது மாநில அரசின் கடமை. அது பாரம்பரியமான நிகழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், விதிமுறைகளை மீறி அந்த போட்டியை நடத்துவதை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானதுதான்.

போட்டி நடைபெறுவதற்கு முன்பு காளைகளுக்கு ஆக்ரோஷம் வருவதற்காக மது (சாராயம்) கொடுக்கப்படுவதுடன் கண்களில் மிளகாய்ப்பொடியும் தூவப்படுகிறது. பல கிலோமீட்டர் தூரத்துக்கு காளைகள் விரட்டப்படுவதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன.”

இவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.

மேனகா காந்தி மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கிறார். “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, விலங்குகளை வதைக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கை. பல உயிர்களை பலிகொண்ட ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்ட விலங்குகள் நல வாரியத்தை பாராட்டுவதாக” அவர் குறிப்பிட்டார். என்றாலும் ரேக்ளா போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மேனகா வருத்தம் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி போராடி வெற்றி பெற்றுள்ள விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் கர்ப், தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். “ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என்று, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் தாராராவ் வற்புறுத்தி இருக்கிறார்.

`மிருகம்’ படத்தில்
ஜல்லிக்கட்டு காட்சி நீக்கத்தை எதிர்த்து படஅதிபர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, ஜன.12-

சாமி டைரக்ஷனில் உருவான `மிருகம்’ படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று படஅதிபர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காட்சி

சாமி டைரக்ஷனில் உருவான படம் `மிருகம்’. நடிகர் ஆதி கதாநாயகனாகவும், நடிகை பத்மபிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படத்தின் நிர்வாக இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

`எய்ட்ஸ்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `மிருகம்’ படம் தயாரிக்கப்பட்டது. `எய்ட்ஸ்’ நோயாளி என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை இப்படத்தில் சித்தரித்து காட்டியுள்ளோம். கதாநாயகன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக காட்சியை உருவாக்கினோம். இதற்காக பிராணிகள் நல வாரியத்திடம் தகவல் தெரிவித்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் தணிக்கை சான்றிதழ் பெற பிராணிகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டோம். கடைசி நேரத்தில் சான்றிதழ் தர வாரியம் மறுத்துவிட்டது.

காட்சி நீக்கம்

இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சி முக்கியம் என்று கூறியும், பிராணிகள் நல வாரியம் கேட்கவில்லை. ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் அதை நீக்கிவிட்டோம். இந்த காட்சியை நீக்கிய பிறகுதான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இதன் பின்னர் இந்த படத்தை வெளியிட்டோம்.

இந்த காட்சியை நீக்கியதால் படத்தின் ஒட்டுமொத்த கதையும் மாறிவிட்டது. இந்த காட்சியை நீக்கியதால் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை இக்கோர்ட்டு ரத்து செய்யவேண்டும். மீண்டும் அந்த காட்சியை இணைத்து திரையிட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீசு

இந்த மனுவை நீதிபதி வி.தனபாலன் விசாரித்தார். இதுபற்றி வருகிற 22-ந் தேதிக்குள் பதில் தருமாறு பிராணிகள் நல வாரியத்திற்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Posted in 4213917, abuse, Alanganalloor, Alanganallur, Alankanalloor, Alankanallur, Animals, Ban, Beef, Bull, Bull-taming, bullfight, Chauvinism, Cinema, Courts, Culture, Custom, Customs, Euthanasia, Festival, Films, Games, Heritage, Hindu, Hinduism, Inhumane, jallikattu, Jallikkattu, Judges, Justice, Law, Literature, Maadu, Males, Maneka, Meat, Men, Menaka, milk, Mirugam, Movies, Order, Padmapriya, Palamedu, Pathmapriya, Pongal, Prime ribs, Religion, RSS, Rural, Sallikattu, Sallikkattu, Sangam, SC, Society, SPCA, Sports, Steak, Steakhouses, Tamil Nadu, TamilNadu, taming, TN, Torture, Tradition, Vegans | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »