தேவை திரும்ப அழைக்கும் உரிமை!
பி. சக்திவேல்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.
இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.
நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!
இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.
மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்
இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:
நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.
அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.
எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.
(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)