கல்லூரிவரை கல்வி இலவசம்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.
உதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.
அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.
பிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.
அத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.
மருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.