ஆந்திரத்தில் தொடங்கவிருந்த மோட்டார் ஆலையை தமிழ்நாட்டுக்கு மாற்றுகிறது மஹீந்திரா நிறுவனம்
சங்கா ரெட்டி, ஏப். 27: ஆந்திரத்தின் மேடக் மாவட்டத்தில் சஹீராபாதில் அமைக்கவிருந்த மோட்டார் வாகன தயாரிப்பு ஆலையை, தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூருக்கு மாற்ற மஹீந்திரா மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.
இந்த ஆலையை ஆந்திரத்திலேயே தொடங்குமாறு ஆலை நிர்வாகத்திடம் மன்றாடி கேட்டுக் கொள்வது என்ற முடிவை ஆந்திர தொழில்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.
2004-ல் ஆந்திரத்தில் காங்கிரஸ் அரசு ஏற்பட்டவுடன், மஹீந்திரா ஆலை நிறுவனம் கனரக, நடுத்தர ரக எடையுள்ள மோட்டார் வாகனங்களைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது. அதற்காக சில அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டது.
ஆந்திர அரசும் அதனுடன் பேசி, அது கேட்ட எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் முக்கிய வசதிகளை அதனால் செய்து தர முடியாமல் இருப்பதால் ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகிலேயே ஆலையைத் தொடங்க முடிவு செய்திருக்கிறது.
கேட்ட வசதிகள் என்ன?
1. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலவசமாக தண்ணீர்,
2. விற்பனை வரிச் சலுகைகள்,
3. ஒரு யூனிட் 2 ரூபாய் என்ற விலையில் தரமான, தடையற்ற மின்சார சப்ளை,
4. 4 வழிச்சாலை,
5. சஹீராபாதுக்கும் ஹைதராபாதுக்கும் இடையில் உயர் வேக புறநகர் மின்சார ரயில் வசதி,
6. இப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல்,
7. தொழிலாளர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் படிக்க தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல் ஆகியவை அந் நிறுவனம் முன்வைத்த கோரிக்கைகளாகும்.
ஆந்திர அரசுடன் கையெழுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட தயாராகிவிட்டது. ஆனால் ஆந்திர அரசு ஒப்புக்கொண்டபடி வசதிகளைச் செய்துதருவதில் தாமதமும் அதனால் சிக்கலும் ஏற்பட்டது. கோதாவரியிலிருந்து தண்ணீர் பெற்றுத்தருவதாக அரசு கூறியிருந்தது. அதற்கு வாய்ப்பு சுருங்கிவிட்டதால் பிரச்சினை தோன்றியது. எனவே மஹீந்திரா நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் நெருக்குதலைத் தந்து, இந்த உடன்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் ஆலையை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டது.