Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Mazumdar’ Category

Massacres, Encounters, Jail Deaths, TADA, POTA, Torture killings – TSR Subramanian

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மோதல்களா, படுகொலைகளா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

குஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.

குஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்?

“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.

1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.

நக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.

நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.

அதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.

ஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.

வட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

முதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

போலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.

பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.

இத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.

சட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.

1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.

சோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.

இச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.

சமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Agitation, Army, Bengal, Blast, Bomb, Bundelkand, Bundelkhand, Cell, Chaaru Majumdar, COFEEPOSA, COFEPOSA, Convict, conviction, Correctional, deaths, defence, Defense, Democracy, Encounter, escape, Federal, Force, Freedom, Govt, Gujarat, Independence, India, Innocent, J&K, Jail, Jammu, Judge, Justice, Kashmir, Khalistan, Khalisthan, killings, KPS Gill, Law, Leninist, Liberation, Majumdar, Majumdhar, massacre, Mazumdar, Mazumdhar, Military, Misa, ML, Modi, Naxal, Naxalbari, Order, Police, POTA, Power, Protest, Punjab, regulations, Shorabudhin, Sidhartha Sankar Roy, Sorabudheen, Sorabudhin, Srinagar, SS Roy, State, Subramanian, Suppression, TADA, terrorist, Thief, Torture, UP, Uttar Pradesh, Victim, WB, West Bengal | 2 Comments »