Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Masala’ Category

The art of throwing a party and a feast for guests – Devi Krishnan (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2008

விருந்து: பாபர் தோட்டத்து அழகி!

தேவி கிருஷ்ணன்

எச்சிலூறாமல் நாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு கீழ் வருபவற்றைப் படியுங்கள்:

ராஜ விருந்துகளுக்கு உங்களை அழைத்துப் போகப் போகிறோம். எவ்வளவு ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இந்த விருந்து உபசரிப்புகளை நீங்கள் எங்கேயும் பெறவும் முடியாது. விருந்துணவுகளை ருசிக்கவும் முடியாது.

காலம் : பல நூற்றாண்டுகளுக்கு முன்

இடம் : ரோம் தேசம்:

அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்கும் ஒரு தனவந்தரின் பிரமாண்டமான அரண்மனை. அதன் சமையலறைக்குள் நேராக நுழையலாம். பெரியபெரிய நிலைக்கண்ணாடிகளும் ஆள் உயர ஓவியங்களும் சுவர்களை அலங்கரித்து இருக்கும். வாசனை மரத்தில் இழைத்த மிக நீண்ட மேஜை போடப்பட்டிருக்கும். வாசனை மரம் என்பது மட்டுமே மேஜையில் பிரதானம் இல்லை. அதில் உள்ள வேலைப்பாடுகள் மிகவும் சிறப்பானவை. தோகை விரித்தாடும் அழகு மயில்போல சின்னச்சின்ன வாசனைக் குச்சிகளால் அந்த மேஜையை அலங்கரித்து இருப்பார்கள். சின்னச்சின்ன கத்திகள், அழகிய முள் கரண்டி மேஜையில் இருக்கும். பல விதமான ஒயின்களைச் சாப்பிட வெள்ளியிலும், தங்கத்திலும் நவரத்தினம் பதித்த கோப்பைகள் தயாராக இருக்கும்.

விருந்துக்கு வருவோம். மஸ்லின் டோகர், ட்யூனிக் துணி ஆடை அணிந்து வருவார்கள் தனவந்தர்கள். அவர்களுடன் வரும் அழகிகளோ, உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் அழகிகளையே தோற்கடிக்கும் தோற்றத்துடன் காணப்படுவார்கள். முத்தும், தங்க ரேக்கும் கொண்ட வேலைப்பாட்டுடன் திகழும் கணுக்கால் வரை தொங்கும் கவுன்களும், அதிசய தலையலங்காரங்களுடன் கையில் ஓர் அழகிய பட்டு விசிறியை ஏந்தி அவர்கள் ஒய்யார நடைபோட்டு வருவதே பலரைச் சொக்கி விழ வைக்கும் காட்சியாக இருக்கும்.

இதற்கே விழுந்துவிட்டால் எப்படி? விருந்து வகைகளைக் கேளுங்கள்: கோழி, மாமிசம், மீன் முதலியவற்றால் செய்த பலவிதமான பதார்த்தங்கள் ஏராளமாகச் செய்யப்பட்டு வெள்ளி, தங்கப் பாத்திரத்தில் குவித்து வைத்திருப்பார்கள். அதிலும் விருந்துக்கு ரோமன் எம்பரர் வருவதென்றால் பக்கத்து சமுத்திரத்தில் உள்ள எல்லாவித மீன்களும் பக்கத்துக் காட்டில் உள்ள பலவித மிருகங்கள், பறவைகள் சமையலாகி விருந்தில் இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் வாய்க்குள் அடங்கி நன்றாக மென்று சாப்பிடக்கூடிய வகையில் மிக மிருதுவாகவும், வாசனையாகவும் மொறமொறப்பாகவும் இருக்கும். இதை அவர்கள் பரிமாறும் முறை மிகவும் நேர்த்தியாகவும் மிகுந்த மரியாதையுடன் இருக்கும்.

ருசியைப் பற்றி சொல்லவே இல்லையா? ஏற்கனவே நாக்கில் எச்சிலூறப் படித்துக் கொண்டிருப்பீர்கள். அதில் இதை வேறு சொன்னால், உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ருசி என்றால் அப்படி ஒரு ருசியாக இருக்குமாம். மூக்கு முட்ட சாப்பிட வைக்குமாம். அப்படிச் ருசிக்கக் கொடுக்கக்கூடிய மசாலா பொருட்களை எங்கிருந்து வரவழைத்தார்கள் தெரியுமா? வேறெங்கிருந்தும் இல்லை. நம்முடைய கேரளாவிலிருந்துதான். கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு வந்த வாஸ்கோடகாமாதான் மிளகு, மிளகாய் போன்றவற்றை ஏற்றுமதி செய்திருக்கிறார். அப்படி அவர் செய்யாமலிருந்தால் ராஜ விருந்துகளே ருசித்திருக்காது!

ரோம் விருந்துக்கு எந்தவகையிலும் குறைந்ததில்லை முகலாய சக்கரவர்த்திகள் கொடுக்கும் ராஜ விருந்துகள். பாரசீக நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றியே அவர்கள் ராஜ விருந்து படைத்தார்கள். அழகாகச் செதுக்கப்பட்ட தூய தங்கம், வெள்ளியினால் செய்து எனாமல் பூசிய தட்டுக்களையே சாப்பாட்டுக்கு உபயோகித்தார்கள்.

முகலாய சக்கரவர்த்திகள் விருந்தின் ஸ்பெஷல்- புலாவ் சாதம். இதில் வாசனை பொருட்களைக் கூட்டி அதில் மாமிசத்தையும் அரிசியையும் சேர்த்து வெகு பதமாக இருக்கும் அளவுக்கு சமைத்து “ஏப்ரிகாட்’ என்னும் பழம், குங்குமப்பூ, மாதுளை ஹிமாலய காட்டில் வளர்ந்த ரோஜாப்பூவின் இதழ்கள், மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழவகைகளையும் சேர்த்து தயாரிக்கும் உணவு செம ருசியாக இருக்குமாம். சக்கரவர்த்தி பாபருக்குப் பிடித்த பழம் மாம்பழம்தானாம். “தோட்டத்தின் அழகி’ என்று மாம்பழத்தைப் புகழ்ந்து அவர் டயரியில் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

பாபரைப் போன்று பல மகா ராஜாக்கள் மற்றும் நவாப்களின் சமையல் அறைகள் உலகப் பிரசித்திப் பெற்ற பல சமையல் கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. அந்த மேதைகளால் பல புதிய புதிய சமையல் நுணுக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாகியவற்றில் ஒன்றுதான் கபாப்.

அவுத் மாகாணம் கபாப்-க்குப் பேர் போனது. இப்பொழுது அந்த இடம் லக்னோ என்று அழைக்கப்படுகிறது. அவுத் நவாப் அரண்மனை சமையல் கலைஞர்கள் உருவாக்கியதுதான் கபாப்.

நூறுக்கு மேற்பட்ட மசாலாக்களை வாசனை பொருளான ஏலம், ஜாதி, குங்குமப்பூ முதலியவற்றையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட கபாப், மிருதுவானது. தேகத்திற்கு வலுவையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது.

ராஜபுத்திர மகாராஜாக்களும் இந்த கபாப்பை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள். சூலி என்று கூறப்படும் கபாப் ராஜபுத்திர அரசர்களின் மிகவும் பிடித்த உணவு. வேட்டையாடுவதில் பிரியம் கொண்ட இந்த அரசர்கள், வேட்டையில் கிடைத்த பிராணிகள் மாமிசத்தை, தீயிலிட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு தூவி வாட்டி சாப்பிடுவார்களாம்.

சில மகாராஜாக்கள், சமையல்களிலும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். சைலானா மகாராஜா ஒரு தேர்ந்த சமையல் கலைஞரும் ஆவார். அவர் கண்டுபிடித்த அனேகவிதமான உணவுகளைப் பற்றி புத்தகமே எழுதியிருக்கிறார்.

இதைப்போல சமையல் கலையில் புகழ்பெற்றவர்கள் ஹைதராபாத் நிஜாம்கள். மாமிசப் பிரியர்களான இவர்கள், ஆந்திர மாநிலத்தின் காரம், உப்பு, புளிப்பு முதலிய ருசிகளைக் கூட்டிச் செய்யும் சமையல் வகைகளில் சிறந்து விளங்கினார்கள். இப்போதும் ஹைதராபாத் மாமிச உணவு எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவதற்கு இவர்கள் தொடங்கி வைத்த தொடக்கம்தான் காரணம். மிளகாயின் காரம், மாங்காய் இவற்றோடு புளிப்பு, உப்பு சேர்த்து தயிரில் ஊற வைத்து இவர்கள் செய்யும் மாமிச வகைகள் ருசிக்குப் பேர் போனது.

காஷ்மீர், பாட்டியாலா அரசர்களும் கபாப் விருந்துக்குப் பெயர் போனவர்கள். முழுக்க முழுக்க இளம் ஆட்டை வெட்டி, அதன் மாமிசத்தை எடுத்துதான் கபாப் செய்வார்கள். அரச விருந்தின் ஸ்பெஷலே கபாப்தான். இதைப் போல “காஷ்மீர் தாபக்மாஸ்’ என்கிற பதார்த்தமும் இந்த விருந்தில் முக்கிய இடம் வகிக்கும். இதற்கும் இளம் ஆட்டையே பயன்படுத்துவார்கள். ஆட்டின் விலா எலும்புகளை மையாக அரைத்து பலவித மூலிகைளைச் சேர்த்து இதைச் செய்வார்கள்.

தமிழ்நாட்டிற்கு வருவோமா?

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கொடுக்கும் விருந்துகளும் பிரமாதமாக இருக்கும். தலைவாழை இலையிட்டு, அதில் 21 விதமான காய், கனி, அரிசி, பருப்பு, நெய், பால், தயிர் வாசனை பொருட்களைச் சேர்த்து இலை நிரம்ப பரிமாறுவார்கள். இதைப்போல கேரள நாட்டு மகாராஜாக்கள் கொடுக்கும் விருந்துகளும் சிறப்பாக இருக்கும். கேரள மகாராஜக்கள் விருந்துகள் பெரும்பாலும் சைவமாகத்தான் இருக்கும். முதல் அயிட்டம் பால்பிரதமன், சக்கை பிரதமன், அன்னம் (சாதம்), எரிசேரி, புளிசேரி, மோர்குழம்பு, அப்பளம், பப்படம் என அவியல் 31 வகை பதார்த்தங்கள் பரிமாறப்படும். இவற்றைச் செரிமானம் செய்ய சுக்குவெள்ளமும் சுக்கில் தயாரித்த குடிநீரையும் கொடுப்பார்கள்.

இதைப் போன்று ராஜ விருந்துகளில் இடம்பெற்ற எல்லா உணவு வகைகளும் இப்போது கிடைத்தாலும் அதே ருசியோடு கிடைக்குமா? என்பது சந்தேகமே…

சில ஊறுகாய் செய்திகள்:

கிளியோபாத்திரா தன் அழகுக்குக் காரணம் ஊறுகாய்தான் என்றாளாம்.

மாவீரன் நெப்போலியன் தன்னுடைய படையில் உள்ளவர்கள் எல்லாம் ஊறுகாய் சாப்பிடவேண்டும்; அப்போதுதான் ஆரோக்கியத்தைப் பேண முடியும் என்றானாம்.

Posted in Cuisine, Diet, Dishes, Drinks, Eat, Feast, Food, Fun, guests, Health, Hotels, Ideas, Marriages, Masala, Meat, Mogul, Party, Recipes, Restaurants, Vegetarian, Weddings | Leave a Comment »

Kumutham Theernadhi – Black Friday: Movie Experiences by Viswamithran

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

குமுதம் தீராநதி
இந்திய சினிமா – விஸ்வாமித்திரன்
கருப்பு வெள்ளிக்கிழமை

ஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.

அவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.

எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.

1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.

மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.

சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.

2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.

5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.

இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.

மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.

கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.

பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.

ஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.

2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.

டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.

Posted in 9-11, 9/11, Arms, Arts, Awards, Babri Masjid, BJP, Black Friday, Blasts, Bollywood, Bombay, Bombs, Cinema, Classic, dead, Dec6, DocuFiction, Documentary, Drama, Extremism, Extremists, Film, guns, Hindi, Hindu, Hindutva, Incident, Islam, mani Rathnam, Manirathnam, Masala, Masjid, massacre, Mosque, Movie, Mumbai, Murder, Muslim, National, Panaroma, Politics, RDX, revenge, Reviews, RSS, Shiv Sena, Terrorism, terrorist, Violence, Vishvamithiran, Vishvmithran, Vishwamithiran, Vishwamithran, Visvamithiran, Visvamithran, Viswamithiran, Viswamithran, War, WTC | Leave a Comment »