Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Marksheet’ Category

Why the pass percentage is better in the Higher Secondary – Plus Two exams

Posted by Snapjudge மேல் மே 15, 2007

“பாஸ் மார்க்’ நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

———————————————————————————–

தூக்கி நிறுத்தும் முயற்சி?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 81 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தேர்வு எழுதிய 5,55,965 மாணவ, மாணவியரில் 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மேலும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் இந்த தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர்கள் சிறப்பாகக் கற்றுத் தேர்வு எழுதியதால் அல்ல; தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் மாற்றப்பட்டதுதான் என்ற உண்மை, இந்த மகிழ்ச்சியைக் குறையுடையதாகச் செய்துவிடுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் செய்முறைக்கு 30 மதிப்பெண், கருத்தியல் தேர்வில் 40 மதிப்பெண் குறைந்தபட்சம் பெற வேண்டும் என்ற விதிமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டது. மாணவர் தேர்ச்சிக்குக் குறைந்தபட்சமாகக் கருத்தியல் தேர்வில் 30 மதிப்பெண், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை ஒரு வரமாக அமைந்துவிட்டது.

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த புதிய முறையால் அதிகம் பயனடைந்துள்ளவை அரசுப் பள்ளிகள்தான் என்பதைக் காண முடிகிறது. அடுத்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பயன்பெறுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை.

மாநிலத்தில் 21 ஆண்டுகளாகத் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மிகவும் பின்தங்கிய கல்வி மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 47 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக (18 சதவீதம்) உயர்ந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 69 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆச்சரியம் தரும் மாற்றம்!

வழக்கமாகச் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் அந்தந்தப் பள்ளி அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. கருத்தியல் தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருத்தப்படுகின்றன. தேர்ச்சிக்குக் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் பெற்றால் போதும் என்பதாலும், ஒவ்வொரு வினாத்தாளிலும் ஒரு சொல் விடை அல்லது கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்ற ஒரு மதிப்பெண் விடைக்கான 30 கேள்விகள் இருப்பதாலும் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் எளிதானதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கல்வித் தரம் சரிந்துவருவதாகக் கருத்து நிலவும் இன்றைய வேளையில், மாணவர்கள் எதையும் படிக்காமல் கடைசி நேரத்தில் அதிகபட்சம் 100 ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டும் படித்துவிட்டுத் தேர்ச்சி பெற முடியுமெனில், அது பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உதவலாம், ஆனால் அந்த மாணவனின் தனிப்பட்ட வாழ்க்கை நலனுக்கு உதவுமா என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தற்போது தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. குறைந்தபட்சம் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத்தான் இத்தகைய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையை மாவட்டவாரியாகத் தமிழகக் கல்வித் துறை வெளியிடுமானால், இந்தத் தேர்ச்சி விகித உயர்வால் உண்மையான பயன் கிடைத்துள்ளதா என்பதை அலசிப் பார்க்க முடியும்.

———————————————————————————————————————————————-

தமிழகத்தில் சீரான தேர்வுத்தாள் முறை வருகிறது?

சென்னை, நவ. 4: சமச்சீர் கல்வி முறைக்கான அறிக்கை அண்மையில் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்வி முறைக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

இதன்படி முதல் கட்டமாக மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய அனைத்து வகை தேர்வு முறைகளிலும் ஒரே சீரான மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தற்போது, தேர்வுத் தாள்களில் சீரான நடைமுறையைக் கொண்டு வரலாமா என்பது குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொழிப் பாடங்களுக்கு இரு தாள்கள், கணிதம், அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு ஒரு தாள் கொண்டு வரலாமா என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் மெட்ரிகுலேஷன் தேர்வை சுமார் ஒரு லட்சம் பேரும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை சுமார் 5 ஆயிரம் பேர், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,200 பேரும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு வெவ்வேறு வகையான பாடத் திட்டங்களுக்கு வெவ்வேறு வகையான தேர்வுத் தாள்கள், மதிப்பெண் முறை உள்ளன.

மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் மாணவர்கள் தமிழில் (அல்லது ஏதாவது மொழிப் பாடம்) இரு தாள்கள், ஆங்கிலத்தில் இரு தாள்கள், கணிதம், அறிவியல், சமூகவியல் என ஐந்து பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் மொத்தம் 7 நாள் தேர்வை எழுத வேண்டும்.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவோர் தமிழ் அல்லது ஏதாவது மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இரு தாள்கள் எழுத வேண்டும்.

அது போல் அறிவியலுக்கும் இரு தாள்கள் உண்டு. அறிவியல் முதல் தாள் என்று ஒரு தாளையும், தாவரவியல் – விலங்கியல் கொண்ட அறிவியல் இரண்டாம் தாளையும் எழுதவேண்டும்.

இது தவிர, புவியியல் – பொருளாதாரம் ஒரு தேர்வுத் தாளும், வரலாறு – குடிமையியல் (சிவிக்ஸ்) கொண்ட ஒரு தேர்வுத் தாளும் எழுத வேண்டும்.

மெட்ரிக் தேர்வு எழுதும் மாணவர்கள் 10 நாள்கள் தேர்வை எழுத வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வில் தமிழ் அல்லது ஏதாவது ஒரு மொழிப் பாடத்துக்கு ஒரே ஒரு தாள்தான் உண்டு. ஆங்கிலத்துக்கு இரு தாள்கள் உள்ளன.

மெட்ரிகுலேஷன் தேர்வைப் போல் கணிதத்துக்கும், அறிவியலுக்கும் தலா இரு தாள்கள் உண்டு. இவை தவிர புவியியல் ஒரு தாள், குடிமையியல் (சிவிக்ஸ்) ஒரு தாள் எழுத வேண்டும். இந்த மாணவர்கள் 9 நாள் தேர்வை எழுத வேண்டும்.

இத்துடன் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவோர் கூடுதலாக சம்ஸ்கிருதம் அல்லது அரபு மொழிப் பாடத்துக்கான தேர்வை எழுத வேண்டும்.

இவை அனைத்தையும் சீராக்கி, ஆங்கிலத்துக்கு இரு தாள்கள், மொழிப் பாடத்துக்கு இரு தாள்கள், இதர பாடங்களுக்குத் தலா ஒரு தாள் என்று கொண்டு வருவது குறித்து யோசனை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலக் கல்வித் திட்ட மாணவர்களின் தேர்வுத் தாள்கள் அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக மொத்தம் 500 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர தேர்வுகளுக்கு அதிகபட்சமாக 700, 1000 என மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சீராக்கி ஒரே மாதிரியாக 500 மதிப்பெண்ணுக்கு என்று நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

Posted in +2, Analysis, Anglo-Indian, City, Colleges, Education, Evaluation, fail, Govt, HSC, Marks, Marksheet, Matriculation, Metric, Metriculation, Oriental, OSLC, pass, Percentage, Plus Two, PlusTwo, Private, Public, Rural, Sanskrit, Schools, Students, Study, Suburban, Teachers, Urdu, Urudu, Village | 1 Comment »