மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.
விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.
- குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
- அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
- இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்
என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.
ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது
என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.
எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.
மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.
ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.
இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.