மக்கள் விரும்பிய மாநிலம்
உதயை மு. வீரையன்
இன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.
இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
அவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.
இதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.
1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.
இதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.
1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.
இருப்பினும் “சென்னை யாருக்கு?’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.
1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.
மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.
வடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.
படாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.
இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.
எனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.
அத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.
மாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.
இச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.
மொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.