வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: நடிகர் பாண்டியன் கைது
சென்னை, ஜன. 11: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.35 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பாண்டியன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய விவரம்:
“மண்வாசனை’, “ஆண்பாவம்’, “கிழக்கு சீமையிலே’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பாண்டியன். இவர், விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது நண்பர் முருகேசன். திருவொற்றியூரைச் சேர்ந்த இவர், தனது சகோதரியின் மகனுக்கு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் வேலை வாங்கித் தருவதற்காக, பாண்டியனிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பாண்டியன் வேலை வாங்கித் தரவில்லை.
இதைத்தொடர்ந்து பாண்டியன், ரூ.80 ஆயிரம் பணத்தை முருகேசனுக்கு திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், முருகேசன் புதன்கிழமை காலையில் மீதிப் பணத்தை கேட்கச் சென்றுள்ளார்.
அப்போது, முருகேசனை மிரட்டிய பாண்டியன் அவரை அடித்து உதைத்துள்ளார்.
இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில், முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நடிகர் பாண்டியனை போலீஸôர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.