17.01.07 சினிமா
தனது படத்தின் கதா பாத்திரங்களைப் போலவே அளந்துதான் பேசுகிறார் மணிரத்னம். இந்தியாவின் முன்னணி இயக்குநர் என்று அவரைப் பார்த்து முடிவு செய்ய முடியவில்லை. அவ்வளவு சிம்பிள். ‘குரு’ படத்தின் ரிலீஸ் பிஸியிலிருந்தவரை, அவரது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ அலுவலகத்தில் சந்தித்தோம்.
‘கி விணீஸீவீக்ஷீணீtஸீணீனீ திவீறீனீ’ _இந்த ஒரு விஷயத்துக்காகவே மக்கள் படம் பார்க்க வந்துடுவாங்க. அப்படி இருக்கும்போது, உங்க படத்துக்கு அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நடிகர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?
‘‘ஒரு படத்துல 50% வேலை. சரியான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் முடிஞ்சிடும். அதனால ஸ்டார் கேஸ்ட் ரொம்ப முக்கியம்.. எங்கே நிக்கணும், கையை எவ்வளவு தூரம் உயர்த்தணும் போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட, ஒரு நடிகருக்குச் சொல்லிட்டிருக்க முடியாது. அதற்காகத்தான் அனுபவமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்கறேன். அவ்வளவுதான்.’’
குரு_அம்பானி காண்ட்ரவர்ஸியை எப்படி சால்வ் செய்தீங்க? முகேஷ் அம்பானி படம் போட்டு காண்பிக்கும்படி கேட்டாரா, நீங்கள் ஸ்பெஷலாக அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தீர்களா?
‘‘அது ஒரு காண்ட்ரவர்ஸியே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய எம்பையர். அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ‘குரு’ படத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க நேரம் இருக்குமாங்கிறதுகூட சந்தேகம் தான். அவங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் கருவைப் பற்றி நினைத்து, சர்ச்சையைக் கிளப்ப சான்ஸே இல்லை. அம்பானி குடும்பத்திலிருந்து நேரடியாக யாரும் என்னுடன் பேசலை, படத்தைப் போட்டுக் காண்பிக்கச் சொல்லலை. நானும் போட்டுக் காட்டவில்லை. திருபாய் அம்பானி என்ற தனிமனிதனின் வாழ்க்கை, வரலாறு கிடையாது! கனவைத் துரத்துகின்ற ஒவ்வொரு மனிதனுடைய கதை. ஒவ்வொருத்தரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை, இந்தப் படத்தில் பார்க்கலாம்.
அப்புறம், ‘குரு’ தமிழ் டப்பிங்குக்காக ரொம்பமெனக்கிட்டிருக்கோம். அபிஷேக்குக்கு சூர்யாதான் டப்பிங் பேசியிருக்கார். அபிஷேக் நடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை விட, சூர்யா டப்பிங்கில் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ரொம்ப பிரமாதமா பேசியிருக்கார். படம் தொடங்கிய சில நிமிடங்கள் அபிஷேக் மறைந்து சூர்யா நடிச்சிருக்கார்ங்கிற ஃபீலிங் வந்துடும். நிச்சயமா மற்ற டப்பிங் படங்கள் போல இருக்காது.’’
உங்க மனைவி சுஹாசினி திறமையான நடிகை. திருமணத்துக்குப் பிறகு நடிச்சிட்டிருக்காங்க. அவரை ஏன் உங்க ஒரு படத்தில்கூட நடிக்க வைக்கலைன்னு தெரிஞ்சுக்கலாமா?
‘‘என்னுடைய முதல் படமான கன்னட படத்துல அவங்களைத்தான் ஹீரோயினாக நடிக்கக் கேட்டேன். நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அவ்வளவுதான். அதிலிருந்து என் படத்தில் நடிக்கிறீங்களான்னு கேட்கமாட்டேன், அவங்களும் கேட்டதில்லை. ஆனால், என் ஒவ்வொரு படத்திலும் ஸ்கிரிப்ட் டைட்டில் குறிப்பாக வசனங்களில் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க. எல்லாப் படங்களிலும் ஒரு சீனுக்காவது அவங்க வசனம் எழுதியிருப்பாங்க, இலவசமா எனக்குக் கிடைக்கிற ஹெல்ப் இது!’’
மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி பிரமாண்டமான ஹிட் சாங் கொடுத்திருக்கு. அதே மாதிரி, இதற்கு முன்பு இளையராஜாவும் நீங்களும் இணைந்த படங்களும் மியூசிக்கல் ஹிட்தான், மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் எதிர்பார்க்கலாமா?
‘‘நிச்சயமாக. இளையராஜா ஒரு ஜீனியஸ். அவருடைய பாடல்கள் தற்செயலாக கேட்டால்கூட சில சுவாரஸ்யமான நினைவுகளை எனக்கு நினைவூட்டும். அவர் வித்தியாசமாக இசையமைக்கும்படியான_ஒரு வித்தியாசமான கதையைத் தயார் செய்து அவருடன் அதில் வேலை செய்ய விருப்பம். அவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் அவருடன் இணைந்து வொர்க் பண்ணுவேன்.’’
பத்தொன்பது படங்கள், பெரும்பாலானவை மெகா ஹிட், சாதிச்சிருக்கோம்கிற ஃபீலிங் கிடைச்சிருக்கா?
‘‘எனக்கு இதுவரை எந்தப் படமும் திருப்திகரமாக அமைந்ததில்லை, அமையவும் அமையாது. ஏன்னா எல்லோரும் படத்தைப் பார்த்துட்டு இது நல்லா இருக்கு, அந்த சீன் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா எனக்கு படம் பார்க்கும்போது, இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்னு தான் தோணும். எப்போது நான் திருப்தியா ஃபீல் பண்றேனோ அப்போதான் சாதிச்சிட்டோம்ங்கிற உணர்வும் கிடைக்கும்.’’
அடுத்தும் லஜ்ஜோ என்ற ஹிந்திப் படம்தான் பண்ணப் போறீங்க, இனி ஹிந்திப் படம் மட்டும்தானா? தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லப் போறீங்களா?
‘‘எப்படி முடியும்? இந்தப் படத்தை முடிச்சிட்டு அடுத்து கண்டிப்பா தமிழ் படம்தான்!’’
ரஜினியுடன் இணைந்து, படம் பண்ணப் போவதாக வரும் செய்திகள்?
‘‘உண்மை இல்லை!’’
ஹிந்தியில் தமிழ்க் கலைஞர்களை வளரவிடாமல் தடுக்கும் வழக்கம் இருந்திருக்கு. இந்த பாலிடிக்ஸை எப்படி சமாளிச்சிருக்கீங்க?
‘‘வளரவிடாமல் தடுத்தால், நாம விட்டுடுவோமா? திறமை இருக்கணும், நம்ம வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா? தகுதியும், திறமையும் இருந்தால் யாரையும் யாராலும் தடுக்க முடியாது…’’ _ அதிரடியாகக் கூறுகிறார் இயக்குநர் மணிரத்னம்!
_ஜனனி