உயர்ஸ்தானிகர்கள் குறித்த கருத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல -இலங்கை அரசு
![]() |
![]() |
உறவு பலமடைய தூதுவர் ஆற்றிய பங்களிப்பினை அரசு வரவேற்கிறது – இலங்கை அரசு |
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமா ராவ் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் வலி முகமட் ஆகியோரின் நடவடிக்கை குறித்து இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க அவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.
அனுரா அவர்கள் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்த செய்திகள் வெளியான 48 மணி நேரத்துக்குப் பின்னர் இந்த அறிக்கை வருகிறது.
இது தொடர்பாக வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில், இலங்கை, தனது அண்டை நாடுகளான இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும், நெருக்கமான உறவுகளைப் பேணிவருகிறது என்றும், இவ்வாறான பரஸ்பர உறவுகளை மேலும் வளர்க்க இரு நாட்டுத் தூதர்களும் அளப்பரிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
நிருபமா ராவ், இந்தியத் தூதுவராக பதவி ஏற்றதில் இருந்து இலங்கை-இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த வழங்கிய பங்களிப்பினை இலங்கை அரசு மிகவும் ஆழமாக வரவேற்கிறது என்றும், மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து அவர் சந்தித்து வரும் பல்வேறு வகையிலான சவால்களுக்கும், சமாதான முயற்சிகளில் முன்னேற்றம், இலங்கையின் பாதுகாப்பு, இறைமை போன்ற விடயங்களுக்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட பங்களிப்பு சரியாக சிந்திக்கும் அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.