சர்வதேச விமானநிலைய கட்டண வசூலை நிறுத்திவைக்க யோசனை
பெங்களூர் அருகே உள்ள தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு இந்த விமானநிலைய நிறுவனத்துக்கு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.
பெங்களூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச விமானநிலையம். இந்த விமானநிலையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளதால் பெரும் முதலீட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான திட்டச் செலவை ஈடுகட்டவும் பராமரிப்புச் செலவைச் சரிக்கட்டவும் இந்த விமானநிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளிடம் தனி மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்யப்பட்டது.
இந்தக் கட்டணத் தொகையானது உள்நாட்டுப் பயணிகளுக்கு சற்று குறைவாகவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சற்று கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
பெங்களூரில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் எச்ஏஎல் விமானநிலையத்தை ஒப்பிடும்போது தூரம், நேரம், பணம் அதிகமாக விரயமாவதால் புதிய சர்வதேச விமானநிலையத்திற்கு பல தரப்பில் ஆட்சேபம் எழுந்தது.
அதுமட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகர்களுக்கு சர்வதேச விமானத்தில் இருந்து செல்லும்போது காலவிரயமும் பணவிரயமும் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு விமானநிலையங்களையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் தேவனஹள்ளி சர்வதேச விமானநிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கும் முடிவை விமானநிலையத் திட்டச் செலவின் தணிக்கை அறிக்கை வரும்வரை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.
இதுபோன்ற யோசனையை ஹைதராபாத் சர்வதேச விமானநிலைய நிறுவனத்திடம் கூறியபோது அதைப் பரிசீலித்து அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த யோசனைப்படி, முதல் 4 மாதங்களுக்கு உள்நாட்டுப் பயணிகளிடம் விமானநிலைய மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மத்திய அமைச்சகம் கூறிய யோசனையைப் பரிசீலித்து முடிவு செய்யவேண்டியது பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனத்தின் நிர்வாகத்தின் பொறுப்பு என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பிரன்னர் தெரிவித்தார்.
கட்டண விலக்கு காலமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 மாத காலத்திற்குள் மேம்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிட ஹைதராபாத் சர்வதேச விமானநிலையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் விமானம் தரையிறங்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விழாவில் கலந்துகொள்ள பெங்களூர் வரும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் சாவ்லா தலைமையிலான குழு இந்த விஷயம் குறித்து விமானநிலைய நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுப் பயணிகளிடம் ரூ.675 மற்றும் வரியை மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் ரூ.955 மற்றும் வரியை வசூலிக்கவும் பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனம் முடிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.